திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலின் மூலவர் விக்ரகம் வியர்க்கும் அதிசயம் Thiruchendur murugar temple Idol sweating miracle

uma 77 21/12/2024
 திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலின் மூலவர் விக்ரகம் வியர்க்கும் அதிசயம் Thiruchendur murugar temple Idol sweating miracle

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் விக்ரகம் தினமும் வியர்க்குமாம் நம்ப முடிகிறதா?

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மூலவர் சிலை எப்போதும் சூடாக இருக்கும். சூரபத்மனைக் கொல்ல முருகன் கோபம் கொண்டதால், எப்போதும் அவரது திருவுருவம் வியர்த்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தக் கோயில் அர்ச்சகர்கள் சந்தனத்தை அரைத்து தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி முருகன் சிலையின் மீது முழுவதுமாக பூசி விடுவார்கள்.

ஆனால் மாலையில் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் ஈரமாக வழிந்தோடும்.

வரலாற்று நிகழ்வு :

இதற்கு ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும். திருச்செந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் கந்தவேல் முழு அலங்காரத்தில் எழுந்தருளியுள்ளார். 1803-ல் திருநெல்வேலி கலெக்டராக இருந்த லூசிங்டன் பிரபு திருச்செந்தூருக்கு ஒருமுறை வந்திருந்தார். அப்போது முருகனுக்கு செய்யப்படும் வழிபாட்டைக் கண்டார். அவற்றில் இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரங்கள் எனப்படும் 16 வகையான உபசாரங்களைக் கண்டார். அவற்றில் வெள்ளி விசிறியைக் கொண்டு கடவுளுக்கு வீசுவதும் அதில் ஒன்று.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த லூசிங்டன் பிரபு, "நீங்கள் விசிறியால் வீசுகிறீரர்களே... உங்கள் கடவுளுக்கு வியர்க்கிறதா என்ன?" என்று கேலி செய்தார். பெரிய அதிகாரி என்பதால் பதில் சொல்லத் தயங்கிய அர்ச்சகர், ஒருவழியாகத் துணிந்து, 'ஆமாம், எங்கள் சண்முகநாதனுக்கு வியர்க்கும்' என்று சொல்லி, தான் அணிந்திருந்த மாலையையும், கவசத்தையும் முருகப்பெருமானிடம் காட்டினார்.

முருகப்பெருமான் சிலை வியர்வையால் படர்ந்திருப்பதைக் கண்டு லூசிங்டன் பிரபு ஆச்சரியப்பட்டார். வீடு திரும்பிய அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவிக்கு திடீரென வயிற்று வலி (சூலை நோய்) ஏற்பட்டு வலியால் துடித்தார். அதாவது நெருப்பு எரிமலையை விழுங்கியது போல் கடுமையான வயிற்று வலி அது. தான் முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததாலேயே இப்படி நடந்ததாக உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியாமல், தனக்கு கீழே வேலை பார்க்கும் முருக பக்தர் ஒருவரிடம், முருகனின் கோபம் தணிய என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.

அவர் சொன்ன உபாயத்தின் படி, தான் செய்தது தவறு என்று முருகப்பெருமானிடம் பணிந்து தன் மனைவியைக் காப்பாற்றுமாறு வேண்டினார். வேண்டுதல் பலித்தால், கோவிலுக்குத் தேவையான பொருட்களை தன் சொந்த செலவில் வாங்கித் தருவதாகவும் கூறினார்.

லூசிங்டன் பிரபு வீடு திரும்பிய போது, ஆச்சரியமடைந்தார். மனைவிக்கு வயிற்று வலி நீங்கியதைக் கண்டு ஆச்சரியடைந்தார். உடனே அவர் வேண்டிய படி வெள்ளிப் பாத்திரத்தை கோயிலுக்குக் கொடுத்தார்.

அவர் அளித்த பாத்திரம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. அதில் 'லூசிங்டன் 1803' என்று முத்திரையிடப்பட்டிருப்பதை இன்றும் காணலாம்.

ஜாதகத்தில் குரு திசை நடப்பவர்களுக்கு, திருச்செந்தூர் சிறந்த பரிகாரஸ்தலம். அங்கு சந்தனம் அரைத்து மாலையில்

முருகனுக்கு பூசி பின் மறுநாள் அதிகாலையில் அதை நமக்குத் தருவார்கள். இந்த சந்தனம் ஐந்து வருடங்களானாலும் கெடாது. எந்தவித நோயானாலும் அதனைத் தீர்க்கும் அருமருந்து.