தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி - சங்கரன்கோவில் இடையில் அமைந்துள்ள கழுகுமலை எனும் ஊரில் ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு குடைவரைக் கோயிலாகும். இக்கோயில் கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. மூலவரான கழுகாசலமூர்த்தியின் கருவறையும் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் சிறப்பு, மூலவரான கழுகாசலமூர்த்தி வள்ளி-தெய்வானையுடன் மேற்கு நோக்கி பார்த்தபடி அருள்புரிகிறார். மேற்கு நோக்கி அமைந்துள்ள மூன்று முருகன் கோவில்களில் கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். ஒரே கல்லால் ஆன குடைவரைக் கோவிலான கழுகுமலையின் பெருமையை சுற்றுவட்டார பகுதிகளான நாலாட்டின்புதூர், வானரமுட்டி சாயமலை ஆகிய ஊர்களில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் பறைசாற்றுகின்றன. கழுகுமலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகழோடு விளங்கி வருகிறது. அதற்கு காரணம் இது மோனோலித்திக் முறை என்று சொல்லப்படும் ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவிலாகும்.
கோயில் சிறப்புகள் :
கழுகுமலையில் உள்ள இக்கோயிலில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதீஸ்வரர் ஆகியோருடன் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். பக்தியோடும், உள்ளம் உருக வழிபடுபவர்களுக்கு முக்தி தரும் அற்புதமான வழிபாட்டுத் தலம்.
இக்கோயிலில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து ஒருமுகம் மற்றும் ஆறு கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மயிலின் தலை இறைவனின் இடது பக்கமாக இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இக்கோயிலின் பிரதான தெய்வமான கழுகாசலமூர்த்தி மேற்கு நோக்கியும், வள்ளி தெற்கு நோக்கியும், தெய்வானை வடக்கு நோக்கியும் உள்ளனர். அமர்ந்த வடிவில் 4 அடி உயரத்தில் முருகப்பெருமானின் காட்சியளிக்கிறார்.
பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகஸ்திய முனிவருக்கு ஞானத்தை அருளும் ஞான குருவாகவும், பக்தர்களுக்கு மக்கள் வாழ்வருளும் தரும் தெய்வமாகவும் விளங்குகிறார் இக்கோயிலின் மூலவர். எனவே, இக்கோயில் ‘குரு-மங்கள க்ஷேத்திரம்’ எனவும் போற்றப்படுகிறது.
மலையின் மீதுள்ள குகையில் இறைவனின் கருவறை அமைந்திருப்பதால், மலையே கோயிலின் கோபுரமாக விளங்குகிறது. தேவார காலத்திற்குப் பின் பாடப்பட்ட பக்திப் பாடல்களில் மிகவும் புகழ்பெற்றவை திருப்புகழ்ப் பாடல்கள். இது 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதரால் இயற்றப்பட்டது. இந்தப் பாடல்கள் அனைத்தும் முருகப் பெருமானைப் போற்றும் பாடல்கள். அருணகிரிநாதர் தம் திருப்புகழில் கழுகுமலை முருகப்பெருமானைப் பற்றி மூன்று பாடல்களை இயற்றியுள்ளார்.
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் அடங்கிய கந்த புராணத்தை இயற்றினார். அதில், குன்று தோரும் இருக்கும் குமரன் மேற்கு முகமாக உள்ளவை மூன்று தலங்களும், அவற்றில் ராஜயோகமாக வீற்றிருக்கும் இடம் கழுகுமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் இசையில் வல்லவரான முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளும், பாம்பன் சுவாமிகளின் திருப்பாக்களும் பாடப்பட்டுள்ளன.
முருகப்பெருமான் கோவில்களில் அசுரன் மயில் வாகனமாக காட்சியளிப்பது வழக்கம். அதன்படி, மயிலின் முகம் முருகப்பெருமானின் வலது பக்கமாக இருக்கும். ஆனால் இக்கோயிலில் இந்திரனே மயிலாக மாறியிருப்பதால் முருகப்பெருமானின் இடதுபுறம் மயிலின் முகம் உள்ளது. இதன் காரணமாக சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மறைக்கப்பட்டிருக்கும்.
அஜந்தாவில் எல்லோரா குகை ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. அதன்படி கழுகுமலை பண்டைய தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலை நுட்பங்களின் அடையாளமாக விளங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கழுகுமலை முன்பு அரைமலை என்று அழைக்கப்பட்டது. புராதன சின்னங்கள் நிறைந்த இந்த மலையில் பல அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன.
இங்குள்ள முருகர் ஒரு முகமும் ஆறு கரங்களுடன் வீற்றிருக்கிறார். தென்னிந்தியாவில் இவ்வகை வடிவத்துடன் கூடிய கோவில் இது மட்டுமே.
பாரதியார் இங்கு வந்து பாடல் பாடியுள்ளார். “கழுகுமலைப் பிள்ளைத் தமிழ்” என்ற தமிழ்ப் பாடலைப் பாடியுள்ளார் சிதம்பரக் கவிராயர், நாடக உலகில் புகழ் பெற்ற எம்.ஆர்.கோவிந்தசுவாமி ஆகியோரால் புகழ்பெற்ற திருத்தலம். கட்டிடக் கலைக்குபெருமை சேர்க்கும் விதமாக மலைமீது வெட்டுவான் கோயில் அமைந்துள்ளது.
தல வரலாறு :
பழங்காலத்தில் இக்கோயில் இருந்த இடம் காடாக இருந்தது. உவணகிரி என்று அழைக்கப்படும் இக்கோயிலுக்கு தெற்கே அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் பழங்கோட்டை என்னும் ஊரில் இருப்பிடம் அமைத்து ஆட்சி செய்து வந்தான். அரசன் வேட்டையாடுவதற்காக இந்தக் காட்டிற்கு வந்தான். அப்போது அவர் ஓய்வெடுக்க விரும்பி காட்டில் உள்ள வேங்கை மரத்தடியில் அமர்ந்தார். மிகுந்த சோர்வின் காரணமாக, அவர் தூங்கிவிட்டார்.
நண்பகலில் பூஜை செய்வது போலும் மணி அடிக்கும் சத்தமும் கேட்டது. அப்போது பாறையின் மீது பசு ஒன்று தானாக பால் கறப்பதைக் கண்டார். சிறிது நேரம் கழித்து, பாறையை அகற்றியபோது, அங்கே ஒரு குகையைக் கண்டார், அதன் உள்ளே, முருகப்பெருமான் மயில் வடிவில் காட்சியளித்தார். இதைக் கண்டு மகிழ்ந்த மன்னன், தெய்வீகக் காட்சியைக் கண்டு நெகிழ்ந்து வணங்கினான். அந்தச் சிலை மனிதர்களால் வடிக்கப்படாமல், பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதையும், தெய்வங்கள் வழிபட வந்ததையும் உணர்ந்து, மக்கள் வழிபட வசதிகளைச் செய்து கொடுத்ததாகக் கோயில் வரலாறு கூறுகிறது.
புராணச் சிறப்பு:
ராமனும் சீதையும் காட்டில் இருந்த சமயம், ராவணன் சீதையைக் கவர்ந்தான். அவனைத் தடுத்த சடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டி வீழ்த்திய பின்னர் சீதையைக் கடத்திச் சென்றான். சீதையின் சத்தம் கேட்டு ஓடிவந்த ராமனும், லட்சுமணனும் ரத்தக் காயத்துடன் சடாயுவைக் கண்டனர். சடாயு நடந்ததைச் சொல்லி தன் உயிரைத் துறந்தார். இதனால் மிகவும் வருந்திய ராமர், சடாயுவிற்கு தானே சடங்குகளைச் செய்தார்.
சடாயுவின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட அவரது சகோதரன் சம்பாதி முனிவர், இராமனிடம் சென்று, சடாயுவின் மரணத்தால் மிகவும் வருந்தியதோடு, தன் சகோதரனுக்குச் செய்ய வேண்டிய ஈமக் காரியங்களைக் கூட செய்ய முடியாத பாவியாகிவிட்டதாகப் புலம்பினார். இதைக் கேட்ட ராமர், சம்பாதி முனிவருக்கு ஆறுதல் கூறி, 'தெற்கே 300 அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் உள்ள குகையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வணங்கினால், உங்கள் பாவங்கள் நீங்கும்' என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். கழுகு முனிவரான சம்பாதி, இத்தலத்திற்கு வந்து இம்மலையில் தங்கி ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்ட முருகப்பெருமானை வணங்கி பாவங்கள் நீங்கப் பெற்றார். சகல பாவங்களையும் போக்கும் சக்தி கொண்ட முருகப்பெருமான் வீற்றிருக்கும் இத்தலத்தில் சம்பாதி முனிவர் வாழ்ந்ததால் இம்மலைக்கு கழுகுமலை என்று பெயர் வந்தது. கழுகுமலையில் அருள்பாலிக்கும் முருகன் என்பதால், இக்கோயிலின் இறைவன் 'கழுகாசலமூர்த்தி' என்றும் அழைக்கப்படுகிறார்.
தமிழ்நாட்டின் எல்லோரா
மகாராஷ்டிர மாநிலம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலைப் போலவே கழுகுமலையிலும் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட குகைக் கோயில் உள்ளது. இதன் காரணமாகவே இதனை தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கின்றனர். இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் கிபி 780 முதல் 800 வரை ஆண்ட பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் உருவாக்கப்பட்டவை. சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும், சமணர் படுக்கைகளும் இங்கு செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை உருவாக்கிய சிற்பிகளின் பெயர்கள் அனைத்தும் கல்வெட்டுகளில் வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆச்சரியமூட்டும் வெட்டுவான் கோவில்:
பாண்டிய ஆட்சி காலத்தில் சிற்பக்கலையில் மிகவும் திறமையான சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது சிலைகளின் அழகையும் திறமையையும் அனைவரும் வியந்து பாராட்டினர். சிற்பிக்கு ஒரு மகன் இருந்தான். ஒரு நாள், இருவரும் உள்ளூர் திருவிழாவிற்குச் சென்றனர். திருவிழாக் கூட்டத்தில் மகன் தொலைந்து போனான். சிற்பி தன் மகனை எங்கும் தேடி அழுது புலம்பியும் அவனைக் காணவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கழுகுமலைக்கு வந்து அங்கே சமணத் துறவிகளின் சிலைகளைச் செய்து அங்கேயே தங்கினார். இந்நிலையில் திடீரென ஒருநாள் மலையின் கீழ் பகுதியில் இருந்து கல் செதுக்கும் சத்தம் கேட்டது. மலையின் கீழ் பகுதியில் ஒரு இளம் சிற்பி சிலை வடிப்பதாக மேலே வந்தவர்கள் சொன்னார்கள். அவற்றை எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் செதுக்கிறார் தெரியுமா? என இவர் காதுபட இளம் சிற்பியைப் பாராட்டினர்.
வந்தவர்கள் அனைவரும் இளம் சிற்பியைப் புகழ்வதைப் பார்த்த சிற்பிக்கு அந்த இளம் சிற்பியின் மீது அதீத வெறுப்பு ஏற்பட்டது. ஒரு நாள், கோபம் எல்லை மீறியபோது, சிற்பி தன் கையில் வைத்திருந்த உளியை இளம் சிற்பியை நோக்கி எறிந்தார். உடனே அந்த இளம் சிற்பியிடமிருந்து “அப்பா!” என்று அலறல் சத்தம் கேட்டது. சிற்பி ஓடிச் சென்று பார்த்தபோது, சிறுவயதில் காணாமல் போன மகன் தலையும் உடலும் பிரிந்து அங்கேயே விழுந்து கிடந்தான். அதைக் கண்டு மனம் வெதும்பிய சிற்பி, தன் மகன் செதுக்கிய சிற்பங்களையெல்லாம் கண்டு வியந்தான். பின்னர், வெறுப்படைந்த அவர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இவருடைய பாட்டி காலத்து கதைப்படி, இதனால்தான் வெட்டுவான் கோவிலில் உள்ள சிற்பங்கள் பாதியிலேயே நிற்கின்றன. தந்தையால் வெட்டப்பட்டதால் வெட்டுவான் கோயில் எனப்பெயர் வரக் காரணமாகியது. இந்த வெட்டுவான் கோவில் கழுகாசலமூர்த்தி வீற்றிருக்கும் மலையின் கிரிவலப் பாதையில் மலையின் மீது அமைந்துள்ளது.
இங்கு சூரசம்ஹாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆகிய விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.