தமிழ் கடவுள் முருகனின் அவதார நாளாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் வைகாசி விசாக விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற முருகன் கோயில்களில் பால் குடம் மற்றும் காவடிகளை எடுத்துச் செல்கின்றனர். வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து முருகனை தரிசனம் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
வைகாசி மாதம் கோடையின் முடிவையும், வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. கோடையின் வெப்பம் தணிந்து வசந்த காலம் தொடங்குவது போல, வைகாசி விசாகம் என்பது நம் வாழ்வில் உள்ள அனைத்து வகையான தொல்லைகளையும் துன்பங்களையும் நீக்கி, நம் வாழ்வில் குளிர்ச்சியைக் கொண்டுவரும் மாதம். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் முருகன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. விசாக நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கலவையாகும். முருகனுக்கும் ஆறு முகங்களோடு திகழ்கிறார். விசாக நட்சத்திரத்தில் முருகன் பிறந்ததால், அவர் விசாகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
விசாக நட்சத்திரம் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் என்பதால் அது ஒரு சிறப்பு நட்சத்திரமாகும். அதேபோல், சிவபெருமானின் நெற்றியில் தோன்றிய கார்த்திகைப் பெண்கள் முருகப்பெருமானை வளர்த்ததால், கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரமும் முருகப்பெருமானுக்கு ஒரு நட்சத்திரமாகும். தீமையை அழிக்க சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து அக்னியாக முருகன் அவதரித்தார். இந்த அவதாரம் வைகாசி விசாக நாளில் நடந்தது.
முருகப் பெருமானுக்கு எத்தனை விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், வைகாசி விசாக விழா தான் வளர்ச்சியைத் தரும் நாளாக் கொண்டாடப்படுகிறது. விசாக நாளில் முருகப் பெருமானை தரிசித்தால் வெற்றி கிடைக்கும்! வேலவனின் அருளால், நீங்கள் விரும்பியது நடக்கும்! அதனால்தான் திருச்செந்தூர் முதல் நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் இந்தப் பண்டிகை கொண்டாடி மகிழ்கிறார்கள். விசாக நாளில் வேலவன் சன்னதிக்குச் சென்றால், விரும்பிய வரம் கிடைக்கும்.
வைகாசி விசாகம் 2025 தேதி, நேரம் எப்போது?
2025 ஜூன் மாதம் 9ந் தேதி கொண்டாடப்படுகிறது.
விசாக நட்சத்திரம் – ஜூன் 8 – மதியம் 02:10 - ஜூன் 9 – மாலை 04:40
விரதங்கள்:
முழு உபவாசம்: இந்த விரதம், முதல் நாள் சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்ற கடுமையான விரதம். இந்த விரதம் சிறுகுழந்தைகள், முதியவர்கள் போன்றோருக்கு ஏற்றதல்ல.
பால் மற்றும் பழ விரதம்: இந்த விரதத்தில், பால் மற்றும் பழங்களை மட்டுமே நாள் முழுவதும் உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேறு எந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஒரு வேளை உணவு: சிலர் நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருக்க முடியாது. இன்னும் சிலர் பால் உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் மதியம் மட்டுமே உணவை எடுத்துக் கொள்ளலாம், மற்ற நேரங்களில் உண்ணாவிரதம் இருக்கலாம்.
வழிப்பாடுகள் :
வைகாசி விசாகத்தன்று காலையிலும் மாலையிலும் முருகப் பெருமானுக்கு வழிபாடு செய்ய வேண்டும். கோயிலுக்குச் செல்ல முடிந்தவர்கள் கோயிலுக்கும் சென்று வழிபடலாம். சிலர் அன்று முருகனின் திருமுறைகளைப் படிக்கும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். பக்தர்கள் அன்று தானம் செய்வது, முருகன் சிலையை அலங்கரிப்பது, முருகனின் கதைகளைப் படிப்பது போன்ற வழிப்பாட்டு முறையைப் பின்பற்றுகிறார்கள்.
கந்த பகவான் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம். அவரை வழிபட வேண்டிய நாள் விசாக நாள். இந்த நாளில் நீங்கள் விரதம் இருந்து வேலவனை வழிபட்டால், தடைகள் நீங்கும். உங்கள் இலக்குகள் நிறைவேறும். இந்த விசாகத்தன்று, நீங்கள் முதலில் விநாயகரை வணங்கலாம், பின்னர் அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று அவரை வணங்கலாம். கந்த பகவானை உங்கள் உள்ளத்திலும் வீட்டிலும் வழிபடலாம்.
செல்வம் பெருக :
வடிவேல் முருகனின் கோயிலுக்குச் சென்று அவரை வணங்குபவர்கள், அபிஷேக சடங்குகளில் பங்கேற்பவர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் வீட்டின் பூஜை அறையில் முருகனின் உருவத்தை வைத்து அவரை வணங்கலாம். இந்த நாளில், ஏழைகளுக்கு குடை, செருப்பு, மோர், குடிநீர், தயிர் சாதம் போன்றவற்றை தானம் செய்தால், உங்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தைபேறு பெறுவார்கள். குடும்பம் செழித்து வளம் பெறும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆபத்துகளிலிருந்து விடுபடுவார்கள். அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பிரச்சினைகள் நீங்க :
கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் தீபம் ஏற்றி முருகனுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் படைத்து பிரார்த்தனை செய்யாலம். முடிந்தால், முடியாதவர்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்கலாம். கடன் உள்ளிட்ட கவலைகளிலிருந்தும், வழக்குகள் உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்தும் விடுபட வைகாசி விசாக நட்சத்திரத்தில் ஞானகுருவான முருகனை வழிபட்டு வளம் பெறுவோம்.