திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் - Information about Tithis

uma 30 28/12/2024
 திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் - Information about Tithis

வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் திதிகள் பற்றியும் அதன் அதிதேவதைகள் மற்றும் பலன்கள் பற்றி பார்ப்போம்.

திதி என்பது சூரியன்-சந்திரன் இருவருக்கும் இடையே வானத்தில் உள்ள தூரம் அல்லது பகுதியைக் குறிக்கிறது. அமாவாசை நாளில் சூரியனும் சந்திரனும் ஒன்றாகவும், பௌர்ணமி நாளில் 180 டிகிரி எதிரெதிராகவும் இருக்கும். ஒரு திதி என்பது ஒவ்வொரு நாளும் சூரியனிலிருந்து சந்திரன் எவ்வளவு தூரம் நகர்ந்துள்ளது என்பதை அளவிடும் அளவீடு ஆகும்.

திதிக்கு இணையான தமிழ் சொல் `நிலவின் பிறை நாள்' என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையைப் பொறுத்து திதிகள் பெயரிடப்பட்டன.

செல்வம் பெருக திதி தேவதைகளை பிறந்த திதி நாளில் வணங்கினால் நற்பலன்கள் கிடைக்கும்.

ஒரு திதிக்கு 12 பாகை உண்டு. திதி என்ற சொல் பின்னர் தேதி என்ற மருவியது. அமாவாசை நாளில் ஒன்றாக இருக்கும் சூரியனும் சந்திரனும் பிரதமை நாளில் பிரிந்து பின் மீண்டும் இணைவதற்கு 30 நாட்கள் ஆகும். இந்த 30 நாட்களும் 30 திதிகள் ஆகும்.

பிரதமை - இந்த பிரதமை திதியின் அதிபதி அக்னி பகவான். புதிய வீடு கட்டுவதற்கும், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கும் வாஸ்து வேலைகள் செய்வதற்கும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை உகந்த திதிகள். நெருப்பு சம்பந்தப்பட்ட காரியங்களைச் செய்யலாம். அக்னி வேள்வி, ஹோமம் போன்றவற்றை செய்யலாம்.

துவிதியை - அரசு சம்பந்தப்பட்ட அனைத்தையும் செய்யலாம். திருமணம் செய்து கொள்ளலாம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி அணியலாம். கடவுளுக்கு விரதம் இருக்கலாம். கோவில்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யலாம். புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டலாம். இந்த திதியின் அதிதேவதை பிரம்மா ஆவார்.

திருதியை - இந்த திதியின் அதிதேவதை கௌரி எனப்படும் பராசக்தி. இந்த திதியில் குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும் சடங்கு செய்யலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப வேலைகளில் ஈடுபடலாம். அலங்காரத்தில் ஈடுபடலாம். இந்த திதி அனைத்து விதமான சுப காரியங்களுக்கும் உகந்தது.

சதுர்த்தி - எமதருமான் மற்றும் விநாயகப் பெருமான் இருவரும் இந்த திதியின் அதிதேவதைகள். முற்காலங்களில், மன்னர்கள் மற்ற நாடுகளின் மீது படையெடுப்பதற்கு ஏற்ற நாளாக இந்த நாளை தேர்ந்தெடுத்தனர். இந்த திதி எதிரிகளை வெல்வதற்கும், விஷ சாஸ்திரம், நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்வதற்கும் ஏற்றது. ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வழிபட கேது தோஷம் நீங்கும்.

பஞ்சமி - நீங்கள் அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். இது ஒரு விசேஷ திதி. குறிப்பாக சீமந்தம் செய்வதற்கு உகந்த திதியாகக் கருதப்படுகிறது. இந்நாளில் மருந்து சாப்பிட்டு வர நீண்டகால நோய்கள் குணமாகும். அறுவை சிகிச்சை செய்யலாம். விஷம் தொடர்புடைய பயங்கள் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதைகள் ஆவர். எனவே நாக வழிபாட்டிற்கு உகந்த திதி இதுவாகும். நாக தோஷம் உள்ளவர்கள் இந்த திதியில் நாக சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். நாக பஞ்சமி என்பது சிறப்பு வாய்ந்த ஒரு திதி.

சஷ்டி - இந்த திதியின் தேவதை கார்த்திகேயன் எனப்படும் முருகப்பெருமான். ஷஷ்டி என்றால் ஆறு என்று பொருள். ஆறுமுகப் பெருமானை வழிபடுவதால் நன்மைகள் பெருகும். சஷ்டி விரதத்தில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும். மக்கள்பேறு கிடைக்கும். சிற்பம், வாஸ்து போன்றவற்றில் ஈடுபடலாம். புதிய ஆபரணங்கள் செய்யலாம். புதிய வாகனம் வாங்கலாம். புதிய நண்பர்களை உருவாக்கலாம். பொழுதுபோக்கில் ஈடுபடவும், புதிய பதவிகளை ஏற்கவும் உகந்த திதியாகும்.

சப்தமி - இந்த திதிக்கு அதிபதி சூரிய பகவான். இந்நாளில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். நீண்ட பயணங்களுக்கு ஏற்ற நாள். புதிய வாகனம் வாங்கலாம். வீடு மற்றும் தொழில் இடமாற்றங்களுக்கு இது சிறந்த திதியாகும். திருமணம் செய்து கொள்ளலாம். புதிய இசைக்கருவிகள் வாங்கலாம். புதிய ஆடை, ஆபரணங்கள் தயாரிக்கலாம்.

அஷ்டமி - இதன் அதிதேவதை ருத்ரன் எனப்படும் சிவபெருமான். வீட்டிற்கும் உங்களுக்கும் அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். புதிய தளவாடம் வாங்கவும். நடனம் கற்பதற்கும் இது ஒரு சிறந்த திதி.

நவமி - இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதையாக இருக்கிறாள். எதிரி பயம் நீங்கும் திதி இது. சகல தீய காரியங்களையும் ஒழிக்கும் செயல்களில் ஈடுபட இதுவே சிறந்த திதியாகும்.

தசமி - இந்த திதிக்கு எமதருமன் தெய்வம். அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகள் செய்யலாம். இந்த திதி ஆன்மீக செயல்களுக்கு மிகவும் ஏற்றது. தீர்த்த யாத்திரை மேற்கொள்ளலாம். கிரஹப்பிரவேசம் செய்யலாம். வாகனம் ஓட்டப் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடவும் உகந்தது.

ஏகாதசி - இந்த திதிக்கும் ருத்திரன் என்னும் சிவபெருமானே அதிதேவதை. இறைவனுக்கு விரதம் மேற்கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். காயங்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். சிற்பக்கலை, தெய்வீக காரியங்களில் ஈடுபடலாம்.

துவாதசி - இத்திதியின் அதிதேவதை விஷ்ணு. பொதுவாக சமயச் சடங்குகளில் ஈடுபடுவதற்கும் அனைத்து தெய்வீக செயல்களைச் செய்வதற்கும் ஏற்ற திதியாகும்.

திரயோதசி - இத்திதி நாளில் சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளலாம். புதிய ஆடை அணியலாம். எதிர்ப்புகள் நீங்கும். தெய்வீக செயல்களில் ஈடுபடலாம். நீங்கள் புதிய நண்பர்களை உருவாக்கலாம். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.

சதுர்த்தசி - இந்த திதியின் அதிதேவதை மகாசக்தி காளி தேவி ஆவாள். புதிய ஆயுதங்களை உருவாக்குதல், தீய சக்திகள், எதிரிகளை முறியடித்தல், தீமைகளை ஒழிக்க மந்திரங்கள் கற்பதற்கு ஏற்றது.

பௌர்ணமி - இந்த பௌர்ணமி திதிக்கு பராசக்தியே அதிதேவதை. உங்கள் நலனுக்காகவும், உலக நன்மைக்காகவும் ஹோமங்கள் செய்யலாம். கோவில் சிற்பங்கள் மற்றும் சுப காரியங்களில் ஈடுபடலாம். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம்.

அமாவாசை - அமாவாசை திதிக்கு சிவன் மற்றும் சக்தி இருவரும் அதிதேவதை ஆவார்கள். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடன், வழிபாடுகள் செய்யலாம். தான தர்மங்கள் செய்வதற்கு அனுகூலமான திதி. இயந்திரம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தொடங்குவோம்.

திதிகளில் வளர்பிறையில் வரும் துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷ திதிகளாகும். தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி இந்த மூன்று மட்டுமே சிறப்பான திதிகள். சுப காரியங்களில் ஈடுபடலாம்.

திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்று சொல்வார்கள். அதனால் சூன்யம் உள்ள திதியின் அதிதேவதையை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறுவோம்.