சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவரான பைரவர் படைத்தல், பாதுகாத்தல், அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய ஐந்து பணிகளைச் செய்கிறார். எனவே இவரை ஐந்து தீபம் ஏற்றி வழிபடும் போது காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. சனி பகவானுக்கு குருவாக கருதப்படும் கால பைரவரை வழிபாடு செய்தால் சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி, பாத சனி போன்ற துன்பங்களிலிருந்து விடுபடலாம். பைரவர் அபிஷேக பிரியர். சிவபெருமானின் அம்சம் என்பதால் சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, குங்குமப்பூ போன்ற வாசனை திரவியங்களுடன். பச்சை கற்பூரம் போன்றவையும் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சதீப வழிபாடு :
காலபைரவர் பஞ்ச பூதங்களை ஆட்சி செய்வதால் கோயிலில் அவருக்கு பஞ்ச தீபம் ஏற்ற வேண்டும். அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகை எண்ணெய் ஊற்றி தனித்தனியாக தீபம் ஏற்றவும். நெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.
இந்த எண்ணெய்களை ஒவ்வொரு விளக்கிலும் ஊற்றி, பஞ்சு திரியால் தீபம் ஏற்றி, பைரவ மந்திரத்தை 27 முறை ஜபித்து வர, எல்லாவிதமான பிரச்னைகளும் விலகும்.
இந்நாளில் பைரவாஷ்டகம் பாராயணம் செய்வதால் உள்ளத்திலும் மனதிலும் நல்ல விஷயங்கள் பதியும். மேலும், நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து குடும்பத்தில் உள்ள அனைத்து தீய சக்திகளையும் நீக்கி அனைத்து வளங்களையும் நன்மைகளையும் பெற்று செழிப்பு வரும்.
வணங்கும் முறை :
நவக்கிரக தோஷங்கள் நீங்க, பைரவருக்கு செவ்வரளிப் பூவை வைத்து 9 வாரங்கள் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
அஷ்டமியன்று மாலையில் வில்வமும், வாசனைப் பூக்களும் கொண்டு அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்றி வர வறுமை ஒழியும். இழந்த செல்வம் திரும்ப 11 அஷ்டமிகளுக்கு பைரவ தீபம் ஏற்ற வேண்டும்.
பைரவ தீபம் என்பது நெய் அல்லது நல்லெண்ணெயில் மிளகைச் சிறிய மூட்டையாக கட்டி தீபம் ஏற்றுவதாகும்.
சனி தோஷம் நீங்க, பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடைமாலை சாற்றி வழிபட வேண்டும்.
வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்பட அஷ்டமி அன்று பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளை அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த நாணயங்களை வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்தால் செல்வம் செழிக்கும்.
பைரவருக்கு மிளகு சாதம் மற்றும் வடை நைவேத்தியமாக வைக்கலாம். வடைமாலையை அனுமனுக்கு நிவேதனம் செய்வது போல் பைரவருக்கு வடைமாலை சாற்றுவது கூடுதல் பலன்களைத் தரும்.
பலன்கள் :
சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி, பாத சனி போன்ற இன்னல்களில் இருந்து விடுபடலாம்.
எதிரிகள், தொல்லைகள் நீங்கும். நோய், நஷ்டம் போன்ற துன்பங்கள் நீங்கும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.
கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதியையும் செல்வச் செழிப்பும் பெறலாம்.