திருமணத் தடை நீக்கும் திருவேற்காடு வேதபுரீஸ்வரர்-பாலாம்பிகை திருக்கோவில் - Thiruvekadu Vedapureeswarar-Palamphikai Temple

uma 105 03/3/2025
 திருமணத் தடை நீக்கும் திருவேற்காடு வேதபுரீஸ்வரர்-பாலாம்பிகை திருக்கோவில் - Thiruvekadu Vedapureeswarar-Palamphikai Temple

சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு என்ற வார்த்தையைக் கேட்டாலே தேவி கருமாரி அம்மன் கோயில் தான் நினைவுக்கு வருகிறது. அதே திருவேற்காட்டில் பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 

63 நாயன்மார்களுள் ஒருவரான மூர்க்க நாயனார் பிறந்த இடம் தான் திருவேற்காடு. அருணகிரிநாதரின் 'திருப்புகழ்' பாடப் பெற்றவர் இங்குள்ள முருகப்பெருமான். தொண்டை மண்டல தேவாரம் கோயில்களில் இது 23வது கோயிலாகும். திருஞான சம்பந்தர் இக்கோயிலைப் புகழ்ந்து 12 பாடல்களைப் பாடியுள்ளார். சேக்கிழார் போற்றிய திருத்தலம் என வேதபுரீஸ்வரர் கோயில் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.

நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டதால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. இந்தக் கோயில் தேவி கருமாரி அம்மன் கோயிலிலிருந்து தென்மேற்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து கோயிலுக்குள் நுழையும்போது, உயர்ந்த, அகண்ட கூரை அழகாக காட்சி தருகிறது. பீடத்துடன் கூடிய தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரம் நம்மை கைகூப்பி வணங்கச் செய்கிறது. கருவறை நோக்கி இருக்கும் நந்தி சிறியதாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷ நாளில், நந்தியம் பெருமான் அபிஷேகத்தைக் காண பக்தர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள்.

சிவலிங்கத்திற்குப் பின்னால், கிழக்கு நோக்கி, அகஸ்திய முனிவருக்கு ஈசனும் அம்பாளும் திருமண ரூபத்தில் காட்சி அளித்ததைக் காணலாம். இங்கு வந்து இத்தல இறைவனை வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கும் எனபது பக்தர்களின் நம்பிக்கை. சிவன் மற்றும் பார்வதியுடன் கணபதி சேர்ந்திருக்கும் ஒரு சன்னதி உள்ளது. மூலவர் கருவறை விமானம் யானையின் பின்புறம் (கஜபிருஷ்டம்) போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.

நான்கு சைவ குரவர்கள் மற்றும் 63 நாயன்மார்கள் வரிசையாக அமைந்திருப்பது பிரமிக்க வைக்கிறது. மேற்குப் பக்கத்தில், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அனபாய சோழர் மற்றும் சேக்கிழார் உள்ளனர். வடக்கே சண்டிகேஸ்வரர், நின்ற தோற்றத்தில் பிரம்ம தேவர், துர்க்கை முதலிய தெய்வங்களும் எழுந்தருளி உள்ளனர்.

அமைப்பு:

கருவறையின் பின்புறத்தில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார். மாத சிவராத்திரி நாட்களில் மாலையில் 5 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வாழ்க்கை வளமாகும். கல்வி, ஞானம், செல்வம் மற்றும் தெய்வீக அருள் கிட்டும். பாலாம்பிகை தெற்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அருகில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் உள்ளனர். அம்பிகை சன்னதிக்கு அருகில் பைரவர் இருக்கிறார். சனிக்கிழமைகளில் பைரவரை நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால், அஷ்டம சனி, ஏழரை சனி, 'அர்த்தாஷ்டம சனி' ஆகியவற்றின் பாதிப்புகள் நீங்கும். சனீஸ்வரருக்கு தனிச் சன்னதி பெரிதாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் மற்றும் மூர்க்க நாயனாருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

9 ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து அல்லது கார்த்திகை மாதத்தின் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரை, வழிபட தோல் நோய்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள தூணில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, காலடியில் நாகத்துடன் அமர்ந்திருக்கும் தேவி கருமாரியம்மன் தேவி சிற்பம்  சிறப்பாக உள்ளது.

இத்தலம் முருகப் பெருமானுடன் தொடர்புடையதாகும். பிரணவத்துக்குப் பொருள் கூற இயலாத பிரம்மாவை முருகர் சிறை பிடித்தார். இதனால் படைப்புத் தொழில் தடைபட,  சிவபெருமான், நந்தி தேவரை அனுப்பி முருகனிடம் பிரம்மாவை விடுதலை செய்ய கூறினார். ஆனால், முருகன் இதற்கு உடன்பட மறுத்ததால், சிவபெருமானே நேரில் சென்று முருகப் பெருமானிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் உண்டான சிக்கல்களை நீக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார்.

நந்தி தேவர் சொல்லியும்,  கட்டுப்படாத முருகனைத் தண்டிக்கும் விதமாக, திருவேற்காடு சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். அதன்படி முருகரும் திருவேற்காடு வந்து தன்  வேலினால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டார். பின்பு இறைவன் அன்னையோடு வந்து முருகனை கயிலைக்கு அழைத்துச் சென்றதாக புராணம் கூறுகிறது. 

தந்தை கூறியபடி, முருகப்பெருமான் தனது வேலால் ஒரு தீர்த்தம் (வேலாயுத தீர்த்தம்) அமைத்து, இத்தல இறைவனான வேதபுரீஸ்வரரை வழிபட்டார். அந்த 'ஸ்கந்த லிங்கம்' முருகனின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமான் சுப்பிரமணியராக இங்கு வீற்றிருக்கிறார். கருவறையின் மேற்கே உள்ள முருகன் சந்நிதிக்கு முன்பாக ஒரு சிவலிங்கம் உள்ளது வேறு எங்கும் காண முடியாத அமைப்பாகும். 

நவக்கிரகங்கள் பத்ம பீடத்தில் எண்கோண வடிவமைப்பில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்கள் வழக்கமாக உள்ள திசையில்லாமல் அனைவரும் வட்ட வடிவமாக பக்தர்களைப் பார்ப்பது போல் காட்சியளிக்கின்றனர். எனவே இவர்கள் அனுக்கிரக நவக்கிரகம் என்பர். இத்தலம், நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகும்.

மூர்க்க நாயானார்:

63 நாயன்மார்களுள் ஒருவரான மூர்க்க நாயானார் பிறந்து, வாழ்ந்த திருவேற்காட்டில், ஒரு வேளாண் குடியில் பிறந்த இவர், சிவனடியார்களுக்கு உணவு அளிக்கும் சிவத்தொண்டு புரிந்து வந்தார். நாளடைவில் இவரின் செல்வம் கரைய, வெளியூர் சென்ற இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதன் மூலம் ஈட்டிய பணத்தால் சிவனடியார்களுக்கு உணவு வழங்கும் திருத்தொண்டை தொடர்ந்தார். இந்த மூர்க்கச் செயலால்  மூர்க்க நாயனார் என்றழைக்கப்பட்டார். இறைவன் தனது அருளால் இவர் குற்றங்களை நீக்கி சிவபதவி அளித்தார். மூர்க்க நாயனார் பிறந்த கார்த்திகை மூலம் நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. வெளிப் பிராகாரத்தில் இவருக்கு தனிச் சன்னதி உள்ளது.

திருமணத்தடை நீங்கும் 

அகத்திய முனிவர் இத்தல இறைவனை வழிபாடு செய்து சிவபெருமானின் திருமண காட்சியைக் கண்டதால், இத்திருத்தலம் திருமணத் தடைகள் நீங்கும் பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு இறைவனுக்கும் அன்னைக்கும் அபிஷேகம் செய்து, மனமுருக  பிரார்த்தனை செய்தால், திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நீங்காத நம்பிக்கை. 

மேலும் இத்தலம் நவக்கிரக தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. ஆதிசேஷனும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு "அரவம் தீண்டி யாரும் மரிப்பதில்லை" என்று தல புராணம் கூறப்பட்டுள்ளது. மேலும்,  இறைவனுக்கு சாம்பிராணி, சந்தனம் மற்றும் பூக்கள் வழங்கி வழிபடுபவர்களின் அனைத்து துன்பங்களும் நீங்குவது உறுதி. இக் கோயிலின் பதிகத்தின் மூன்றாவது பாடலில், "போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு ஏதும் எய்துதல் இல்லையே" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.