தைப்பூசம் என்பது உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தைமாதம் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே தைப்பூசமாகும்.
இந்த வருடம் தைப்பூசம் பிப்ரவரி மாதம் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.
தேதி-நேரம்:
பூசம் நட்சத்திரம் பிப்ரவரி 10ந் தேதி இரவு 07:13 க்கு தொடங்கி 11 நம் தேதி இரவு 07:31 க்கு முடிவடைகிறது.
தைப்பூசத்தின் சிறப்புகள்:
ஆறுமுகப் பெருமானின் அருளை பெறுவதற்கு தைப்பூசம் மிகவும் உகந்த நாளாகும். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் பக்தர்கள் பலர் பாதயாத்திரை சென்று தைப்பூச நாளில் முருகனைத் தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
அசுரனை அழிக்க பார்வதி தேவியிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் கையில் வேல் ஏந்திய நாளாகவும் தைப்பூசம் கூறப்படுகிறது. முருகப்பெருமானுக்கு உரிய திருவிழாக்களில் தைப்பூசம் மிகவும் முக்கியமானது.
அன்னை அளித்த வேலை ஆயுதமாகக் கொண்டு சிவ மைந்தன் தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களை திருச்செந்தூரில் வதைத்து தேவர்களைக் காத்தருளினார்.
ஆகவே முருகனைப் போலவே அவரது வேலுக்கும் தனிச் சிறப்பு உண்டு. அசுரர்களை வதம் செய்த வேலை வணங்கினாலே தீய சக்திகள் நம்மை நெருங்காமல், நம்மிடம் அடிபணிந்து நன்மை புரியும் என்பது நம்பிக்கை.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் பழனிக்கே மக்கள் அதிக முக்கியத்துவம் தந்து தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரை செல்வது தொன்று தொட்ட வழக்கமாக இருந்து வருகிறது.
தைப்பூச நாளில் தான் வள்ளலார் அடிகள் முக்தியடைந்தார். இறைவன் ஜோதி வடிவமானவர் என்பதை உணர்த்தவே இந்நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
தைப்பூசத்தன்று பக்தர்கள் காவடி எடுத்தல், அழகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்கிறார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் மற்றும் சிவ ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
பதஞ்சலி, வியாக்ரபாதர் எனும் முனிவர்களுக்கு நடராஜப்பெருமான் சிவ தாண்டவமாடிக் காட்சியளித்த நாளாகவும் தைப்பூசம் கூறப்படுகிறது.
தைப்பூசத் திருவிழாவை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பண்டைய காலங்களிலிருந்தே கொண்டாடி வருகின்றனர். முருகன் தனக்குக் கிடைக்க வேண்டிய ஞானப் பழத்தைப் பெறாததால் கோபமடைந்து, கைலாயத்திலிருந்து பழனி மலையில் பண்டார வடிவில் வாசம் செய்த நாள் எனவும் ஒரு கூற்று உள்ளது.
தேவாரப் பதிகங்களில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. ஒரு பதிகத்தில் "பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த" என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். ஆனால் பிற்கால சோழர் ஆட்சிக் காலத்தில், தைப்பூசத்தன்று கோயில்களில் கூத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்குச் சான்றாக, தைப்பூசத்தைத் தொடர்ந்து திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் நான்கு நாட்கள் கூத்துக்கள் நடத்தப்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
தைப்பூச நன்னாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்ற பழமொழி உள்ளது. அதனால் அந்நாளில் ஏடு தொடங்குதல் குழந்தைக்கு காது குத்துதல், திருமணப் பேச்சுக்கள் தொடங்குதல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம்.
தைப்பூச நாளில்தான் உலகில் நீர் மற்றும் அனைத்து உயிரினங்களும் முதன்முதலில் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தான் இந்த நாளில் பல்வேறு கோயில்களில் தெப்ப விழாக்கள் நடத்தப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் திருக்கோவிலில் தைப்பூச நாளன்று எம்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி மலையிலிருந்து அடிவாரத்திற்கு வருகை புரிவார். இந்தக் காட்சியைக் காண்பவருக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை.
முருகப் பெருமான், வள்ளியை மணந்ததால் ஏற்பட்ட ஊடலைத் தீர்த்து தெய்வானையை சமாதானப் படுத்தி வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளன்று தான் முருகப்பெருமான் காட்சியளித்ததாக ஒரு புராணம் கூறுகிறது.
பழனிக்கு வரும் பக்தர்கள் சண்முகா நதியில் நீராடிய பின், பெரிய ஆவுடையார் கோயிலுக்குச் சென்று அங்குள்ள இறைவனை வணங்க வேண்டும். பின்னர், உள்ளூர் தெய்வமான பெரியநாயகி அம்மனை வணங்கி, பின்னர் திருஆவினன்குடி முருகனை வணங்க வேண்டும். பின், அடிவாரத்தைச் சுற்றிச் சென்று மலையில் ஏறி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வதுதான் முறை.
தை மாத அறுவடைக்குப் பின் தைப்பூசத்தன்று விவசாயிகள் தங்கள் விளைச்சலின் ஒரு பகுதியை முருகப்பெருமானுக்கு வழங்குவர். 400 ஆண்டுகளுக்கும் மேலாக எடப்பாடி ஊரில் இருந்து பக்தர்கள், பழநி முருகரை தங்களின் மருமகனாகப் பாவித்து மருமகனுக்கு செய்யும் எல்லா சடங்குகளையும் அன்று செய்வர்.
வாழை, நெல், பழங்கள் என தங்கள் இடத்தில் விளைந்தது எதுவானாலும் தாம் உண்பதற்கு முன் அதை இறைவனுக்கு அர்ப்பணித்துப் படைப்பதற்கு சிறந்த விழாவே தைப்பூச திருவிழாவாகும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த தைப்பூச நன்னாளில் எல்லாம் வல்ல முருகப்பெருமானிடம் நம் அனைத்து துயரங்களும் நீங்க வணங்கி அவர் அருளைப் பெறுவோம்...!