வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்- கோமதி அம்பாள் திருக்கோவில் - A Temple site that must be visited at least once in a lifetime

uma 11 07/1/2025
 வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்- கோமதி அம்பாள் திருக்கோவில் - A Temple site that must be visited at least once in a lifetime

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் சங்கர நாராயணர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி, அம்பாள் கோமதி அம்மன் ஆவாள். உக்கிர பாண்டியன் எனும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடி தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். கோமதி அம்மனே இக்கோயிலின் பிரதான தெய்வம் ஆவாள். அவள் பார்வதி தேவியின் அம்சம். இக்கோயிலில் இறைவன் ஒரு பாதி சிவன் ஒரு பாதி திருமாலும் இணைந்த திருவடிவில் காட்சி தருவது மிகவும் சிறப்பு.

ஸ்ரீ கோமதி அம்மன் சிவபெருமானை நினைத்து ஊசி நுனியில் இருந்து தவம் செய்யும் யோகினி ஆவாள். சங்கன், பதுமன் ஆகிய இரு நாக மன்னர்களுக்கு இடையே சண்டை மூண்டது. சங்கன் தனது கடவுளான சிவன் அதிக சக்தி வாய்ந்தவர் என்றும் பதுமன் தனது இஷ்ட தெய்வமான திருமால் அதிக சக்தி வாய்ந்தவர் என்றும் வாதிட்டார். இருவரும் தேவியிடம் சென்று முறையிட்டனர். சங்கனும், பதுமனும் மட்டுமின்றி, உலக மக்களும் இறைவனின் முழு வடிவத்தை உணர வேண்டும் என்று சிவபெருமானிடம் அன்னை வேண்டினாள். தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவன் சங்கரநாராயணராகத் (சங்கரன்-சிவன்; நாராயண-திருமால்) தோன்றினார். சிவனும், திருமாலும் இணைந்த சங்கரநாராயணரின் தோற்றம், இரு கடவுள்களும் சமம் என்றும், அன்பு மற்றும் தியாகத்தால் மட்டுமே அவர்களை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.

நாகர்கள் இருவரும் இறைவனை வழிபட்டு கோமதி அம்மனுடன் இத்திருத்தலத்திலேயே தங்கினர். தேவியுடன் நாகர்கள் வசிப்பதால், இந்த அம்மனை வழிபட்டால், பயம் நீங்கும். இங்குள்ள புற்று மண் மிகவும் பிரபலமானது. பக்தர்கள் அந்த மண்ணை திருநீறாகக் கருதி நெற்றியில் பூசிக்கொள்கிறார்கள். இக்கிராமத்தில் வாழ்ந்து அம்மனின் பெருமைகளை உலகறியச் செய்தவர் பாம்பாட்டி சித்தர். அவரது சமாதியும் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி மண்டலத்தின் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.

ஸ்தல வரலாறு

பார்வதி தேவியின் சாபத்தால் மணிக்ரீவன் என்ற தேவர் புன்னைவன காவலனாக மாறினார். அதனால் அவர் காப்பறையன் என்றும் காவற்பறையன் என்றும் அழைக்கப்பட்டார். கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரைச் சேர்ந்த பால்வண்ணநாதர் என்பவர் புன்னை வனத்தில் பூந்தோட்டம் வைத்திருந்தார். அதற்கும் மணிக்ரீவரே காவலாளியாக இருந்தார். தோட்டத்தின் ஒரு ஓரத்தில் புற்று ஒன்று இருந்தது. ஒரு நாள் அதை வெட்டிய போது அதில் இருந்த பாம்பின் வாலும் வெட்டப்பட்டது. அப்போது, புற்றின் ஓரத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டு அதிர்ந்தார். அதே சமயம் அருகில் உள்ள வனத்தில் மன்னர் உக்ர பாண்டியன் வந்திருப்பதை அறிந்து, செய்தியைத் தெரிவிக்க ஓடினான்.

 திருநெல்வேலிக்கு மேற்கே பொருநையாற்றின் கரையில் உள்ள மணலூரில் ஆட்சி செய்த உக்ர பாண்டியர், மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் வழிபட அடிக்கடி மதுரைக்கு வந்து செல்வது வழக்கம். காவற்பறையன் புற்றை வெட்டி சிவலிங்கத்தை கண்ட அதே நாளில், பாண்டியனின் யானை தன் கொம்பினால் தரையில் குத்தி கீழே புரண்டது. என்ன செய்வதென்று தெரியாமல் பாண்டிய மன்னன் திகைத்து நின்றபோதுதான் காவற்பறையன் ஓடிவந்து மன்னனுக்கு நடந்தவற்றைத் தெரிவித்துத் தன்னுடன் வரும்படி அழைத்தான். உக்ர பாண்டியர் சென்று புற்றினையும் சிவலிங்கத்தையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆணை தர உக்ர பாண்டியர் கோவில் அமைத்து நகரத்தை உருவாக்கினார்.

கோயில் கோபுரத்தைக் கடந்ததும் (கோயில் நிர்வாக அலுவலகத்தின் இடதுபுறத் தூணில்) காவற்பறையன் உருவம் இன்றும் காணப்படுகிறது. காவற்பறையனுக்கு ஊரின் தெற்கே ஒரு சிறிய கோயில் உள்ளது. இது அமைந்துள்ள தெரு காப்பறையன்தெரு என்று அழைக்கப்பட்டது. , இன்றும் அதே தெருவில் காவற்பறையன் கோவில் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரை திருவிழா தொடங்கும் முன் பெரிய கோவிலில் காவற்பறையனுக்கு சிறப்பு வழிபாடு செய்த பிறகே கொடியேற்றம் நடக்கிறது.

சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதிக்குச் செல்லும்போது பலிபீடம், கொடி மரத்தைத் தாண்டியதும் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் தரிசிக்கலாம். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியதால் அந்த இடம் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. (கோடு - கொம்பு) உக்ர பாண்டியர் கோயில் வழிபாட்டிற்கு நிறைய நிலம் வழங்கியுள்ளார். சித்திரை மாதம் யானை மீது ஏறி இறைவனை தரிசனம் செய்ய பெருங்கோட்டூர் சென்று யானையின் பிடிமண் கொண்டு வந்து திருவிழா நடத்தினார். இன்றும் இவ்விழா நடைபெறுவதைக் காணலாம்.

ஸ்ரீ கோமதி அம்மன் - சக்தி பீடம்

தன் தந்தை தக்ஷனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி, யாகம் அழிந்து போகும்படி சபித்து, தக்ஷனால் கொடுக்கப்பட்ட உடலை விரும்பாமல், தக்ஷன் செய்த யாக தீயில் தன்னைத்தானே எரித்துக் கொண்டாள். சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரன் யாகத்தை அழித்தார். மனைவி இறந்ததால் துக்கமடைந்த சிவன், தன் மனைவி தாட்சாயிணியின் உடலை எடுத்து ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் நடனத்தை நிறுத்த, விஷ்ணு தனது சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டினார். பின் சிவபெருமான் சாந்தமடைந்தார். தாட்சாயிணியின் சிதறிய உடல் உறுப்புகள் விழுந்த 51 இடங்கள் முக்கிய சக்தி பீடங்களாக விளங்கின. அந்த உடல் உறுப்புகளில் இருந்து ரத்தமும் சதையும் தெறித்த இடங்களே உப சக்தி பீடங்களாக மாறின.

இப்படியாக அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி அதாவது, குண்டலினி எழுந்து பாம்பாக விரியும் பகுதியாகிய சஹஸ்ராரம் விழுந்த இடம் தான் சங்கரன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதியாகும்.

ஆடி மாதம் உத்திராட நாளில் அன்னை கோமதி மற்றும் சங்கன், பதுமன் ஆகியோர்களுக்கு சங்கர நாராயணர் தரிசனம் தந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படுகிறது. அம்பலவாண தேசிகர் ஒரு மந்திரச் சக்கரத்தை அம்மனின் முன்பு பதித்துள்ளார். அந்த சக்கர பீடத்தில் அம்மனுக்கு வைக்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

அன்னையின் அழகு சொரூபம் :

ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி கோயிலில் கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியில் தனித் தங்கக் கொடிமரத்துடன் அமைந்துள்ளது. தனி நந்தி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கோமதி அம்மன் அழகான உருவில், வலது இடை நெளிந்து ஸ்ரீ சக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல், வலது கையில் மலர்களை ஏந்தியவாறும், இடது கையை பூமியை நோக்கித் தளர்த்தியபடியும் காட்சியளிக்கிறாள். சர்வ அலங்காரத்தில் புன்னகை பொதிந்த முகத்துடன், கருணை பொழியும் இளம் மங்கையாகக் காட்சியளிக்கிறாள்.

அன்னை ஸ்ரீலலிதாமஹா திரிபுர சுந்தரியாகவும் காமேஸ்வரியாகவும் காட்சியளிக்கிறாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் தாங்கியும், மேல் இரு கரங்களில் கரும்பும் வில்லும் ஏந்தியிருப்பது அரூபமாகக் காணப்படுகிறது. அவற்றை நம் கண்களால் பார்க்க முடியாது என்றும், தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே பார்க்க முடியும் என்றும், அந்த தரிசனம் பெற்றவர்கள் அஷ்ட சித்திகளையும் உடையவர்களாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.

ஆடித்தபசு திருவிழா

அன்னை கோமதி, ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஸ்ரீ சங்கர நாராயணரின் வடிவத்தைக் காண இத்தலத்தில் ஊசி முனையில் தவம் செய்தாள். ஆடி பௌர்ணமி மற்றும் உத்திராடம் நட்சத்திர நாளில் ஸ்ரீ சங்கர நாராயணனை தரிசனம் செய்தாள் அன்னை கோமதி. இதை உணர்த்தும் வகையில் ஆடி மாதத்தில் ஆடி தபசு பிரம்மோத்ஸவம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது அன்னைக்கு தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் காலை, மாலை, இரவு என தாயார் வீதி உலா வருகிறார். 11ம் நாள் இறைவன் சங்கரநாராயணராக தேவிக்கு காட்சி தருகிறார். மேலும், அன்னையின் சஹஸ்ராரம் விழுந்த தலம் இது என்பதால், அன்னை இங்கு மகா யோகினியாகவும், தபஸ் ஸ்வரூபிணியாகவும் காட்சியளிக்கிறார்.

 பூஜைகள் - வழிபாடுகள்:

இக்கோயிலில் அன்னைக்கு ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. இறைவனுக்கு செய்யப்படும் பூஜைகள் அனைத்தும் அம்மனுக்கும் செய்யப்படுகிறது. கோவிலில் தங்க ஊஞ்சலுடன் கூடிய பள்ளியறை உள்ளது. பூஜை முடிந்ததும் அம்மனுக்கு முதல் பெரிய தீபாராதனை நடக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பிறப்பன்று, கோமதி அன்னையின் தங்க ரத ஊர்வலம் நடத்தப்படுகிறது. திங்கட்கிழமைகளில் அம்மனுக்கு மலர் பாவாடையும், செவ்வாய்க் கிழமைகளில் வெள்ளிப் பாவாடையும், வெள்ளிக் கிழமைகளில் தங்கப் பாவாடையும் அணிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அம்மனுக்கு நவாவர்ண பூஜை நடைபெறும். தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. சிறப்பு நாட்களில் அம்மனுக்கு சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது. கோமதி தேவிக்கு தினமும் காலை, உச்சிக்கால, மாலை பூஜை, இரவு பூஜைக்கு முன்பு என நான்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இங்கு, தங்கம் மற்றும் வெள்ளி காணிக்கை, முடி காணிக்கை, மாவிளக்கு பிரார்த்தனை ஆகியவை முக்கிய சடங்குகள் ஆகும்.

வேண்டுதல்கள்

தேவியின் சன்னதிக்கு முன்பாக ஒரு ஆக்ஞா சக்கரம் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்கள் இங்கு அமர்ந்து தங்களின் விருப்பங்கள் நிறைவேற வேண்டி வழிபடுகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய், துர்சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தில் அமர்ந்து குணமடைந்து வருவதும் கண்கொள்ளாக் காட்சியாகும். அம்மனின் புற்றுமண் பிரசாதம் இங்கு மிகவும் விசேஷமானது. இதை சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல் உபாதைகள் தீரும் என்பது பல பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனைகளும் செய்யப்படுகின்றன. இங்குதான் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

பாம்பாட்டி சித்தர் கோமதி தேவியைக் குமரியாகவும், குண்டலினி சக்தியாகவும், பாம்பு வடிவமாகவும் வழிபட்டுள்ளார். எனவே காளஹஸ்திக்கு அடுத்தபடியாக கால சர்ப்ப தோஷம் நீங்கும் தலமாகவும், ராகு, கேது தோஷம் நீங்கும் தலமாகவும் இத்திருத்தலம் விளங்குகிறது. சங்கரன் கோயிலில் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணத் தடை நீங்கும் தலமாகவும் விளங்குகிறது.

கோவிலுக்கு வருபவர்கள் தங்கம், பித்தளை, வெண்கலம், மற்றும் பாம்புகள், தேள்கள் ஆகியவை பொறித்த வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய தகடுகளை காணிக்கைச் செலுத்துகின்றனர். திருஷ்டி கழிக்க நினைப்பவர்கள் உப்பு, மிளகு தலையைச் சுற்றி போடுவார்கள்.