நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் கோவிலில் நாம் அடிக்கும் மணி. கோவில் மணிக்கு பின்னால் மறைந்திருக்கும் அறிவியல் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
கோவில் வழிபாட்டில் மணி அடிப்பதில் ஆன்மீகம் மட்டுமல்ல, அறிவியல் காரணமும் உள்ளது. இது மனித உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தெய்வங்களை அழைப்பதற்காக மணி அடிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. மணி அடிக்கப்படும் போது, அது வெளிபடுத்தும் ஒலி ஓம் என்ற தெய்வீக ஒலியை உருவாக்குகிறது. இந்த ஒலி அந்த இடம் முழுவதும் நேர்மறை அதிர்வுகளை உருவாக்குகிறது. மணிகளின் ஓசை தெய்வங்களின் ஆன்மீக இருக்கையாகக் கருதப்படுகிறது. இந்த மணியின் ஓசை கோவிலுக்கு வரும் மக்களின் மனதில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்குகிறது.
ஆலயங்களில் ஒலிக்கும் மணியானது நமக்குள் ஒரு மாற்றத்தை உண்டு செய்யும். வீடுகளிலும், கோவில்களிலும் ஒலிக்கும் மணி சாதாரண உலோகங்களினால் செய்யப்படுவது அல்ல. தாமிரம், கேட்மியம், ஜின்க், ஈயம், நிக்கல், குரோமியம், மற்றும் மாங்கனீசஸ் போன்ற பல உலோகங்களின் கலவையால் செய்யப்படுகிறது. கோவில் மணியை உருவாக்க பயன்படுத்தப்படும் உலோகக் கலவையின் பின்னணியில் அறிவியல் அடங்கியிருக்கிறது.
கோவில்களில் ஒவ்வொரு முறை மணி அடிக்கப்படும்போதும் ஒவ்வொரு உலோகத்திலிருந்தும் தனித்துவமான ஒலிகளை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான ஒலிகளால், நமது இடது மற்றும் வலது மூளைகள் சீரமைக்கப்படுகின்றன. எனவே மணி அடித்த அடுத்த நொடி, கூர்மையான மற்றும் நீண்ட நேர ஒலி ஒலிக்கும். இந்த மணியின் ஒலி 7 வினாடிகள் வரை நீடிக்கும். இது மனித உடலில் உள்ள மூலதாரம், சுவாதிஷ்டானம், மணிபுரம், அனாகதம், விசுத்தம், ஆக்கினை மற்றும் சஹஸ்ராரம் ஆகிய 7 ஆற்றல் மையங்களைத் தூண்டுகிறது.
அதுமட்டுமின்றி மணியினால் உருவாகும் கூர்மையான ஒலி மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் சீராக இயங்கச் செய்கிறது. வெண்கல மணியின் ஒலி மனித மூளையின் வலது மற்றும் இடது மடல்களுக்கு இடையில் நல்ல இணக்கத்தை உருவாக்குகிறது. இதனால் மூளை சீராக இயங்குகிறது. கோவில்களில் உள்ள மணிகள் தெய்வீக தன்மையை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பூஜைகளின் போது மணி அடிக்கும் போது தீய சக்திகள் துரத்தப்பட்டு தெய்வீகத் தன்மை எங்கும் பரவுகிறது.
உடலிலிருந்து தீய எண்ணங்களையும் தீய சக்திகளையும் நீக்கும் சக்தி மணி ஓசைக்கு உண்டு. ஆலயங்களில் கோவில் மணி அடிக்கும் சமயம், நம் கவனமும் சிந்தனையும் வேறு எங்கும் செல்லாமல் தடுக்கப்படுகிறது. மணியின் ஓசை ஆன்மாவுக்குள் அதிர்ச்சி அளித்து நம்மை நிகழ்காலத்தோடு ஒன்றச் செய்யும் ஆற்றல் கொண்டது. கோவில் மணி காதுகளுக்கு இதமான உணர்வைத் தருவதுடன் மனதையும் ஆன்மாவையும் அமைதிப்படுத்துகிறது. இதன் காரணமாக, நமக்குள் ஒருவித நிம்மதியையும், புத்துணர்ச்சியையும் உணர முடிகிறது. இது நமது உள்ளுணர்வையும் சுயத்தையும் தெய்வீகத்துடன் இணைக்க உதவுகிறது.
கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் பூஜையின் போது தீய சக்திகளை விரட்ட மணிகள் அடிக்கப்படுகின்றன. அவைகளை விரட்டிய பின் தெய்வீகத்தை வீட்டில் நிரம்பச் செய்ய உதவுகிறது. இந்த மணி ஓசை எழுப்பும் ஒலி நமது மூளையில் ஏழு வினாடிகள் இருக்கும் என்று அறிவியல் பூர்வமாகச் சொல்லப்படுகிறது. இந்த ஏழு வினாடிகளில் ஏழு சக்கரங்கள் தூண்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. மனதை தூய எண்ணங்களால் நிரப்ப மணி ஓசை உதவுகிறது.