நல்லூர் கந்தசுவாமி கோயில் | Nallur Kandaswamy Temple

uma 46 02/7/2024
 நல்லூர் கந்தசுவாமி கோயில்  |  Nallur Kandaswamy Temple

நல்லூர் கந்தசுவாமி கோயில் 

இலங்கையில் மிகவும் புகழ் வாய்ந்த இந்துக் கோயில்களுள் இக்கோயிலும் முக்கியமானது.  இலங்கை வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தது. இதன் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையென்றாலும், யாழ்ப்பாண அரச காலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது. 

வரலாறு 

யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்ச முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர் புவனேகவாகு என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமாக  தனிப்பாடல் ஒன்றில், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்ற நூலின் இறுதியில் காணப்படுகிறது. 

ஆனால் 15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கையகப்படுத்தி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டை அரச பிரதிநிதியான, பின்னாளில் சிறீசங்கபோதி எனற பட்டம் கொண்ட புவனேகபாகு எனப்பெயர் கொண்ட, செண்பகப் பெருமாள் என்பவரால் கட்டப்பட்டதாகும். இதற்கு ஆதாரமாக  கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள்.  

முன்பாக சிறியதாக இருந்த இக்கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெரிது படுத்திக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து. 

உண்மையில் நல்லூரில் தற்போது உள்ள அமைப்பானது முன்றாவது கோயில் கட்டுமானம் ஆகும். முன்பு இருந்த பழைய ஆலயத்தின் எந்த கட்டுமானங்களும் சமந்தப்படாத புதிய கட்டுமானம் தான் இப்போதுள்ள நல்லூர்கந்தன் ஆலயம் அகும்.    

யாழ்ப்பாண அரசின் இறுதியில் நல்லூரின் மிகப்பெரிய கோவில் இதுவே என்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து வெளிப்படுகிறது. யாழ்ப்பாணத்தை‌ வென்ற போத்துக்கீசத் தளபத பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது  இக்கோயிலை இடித்துத் தரைமட்டமாக்க உத்தரவிட்டான். அப்போது பெறப்பட்ட கற்கள் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இடிக்கப்பட்ட இடத்தில் போர்த்துக்கீசியர்கள் சிறிய கத்தோலிக்க தேவாலயத்தை அமைத்ததாகத் தெரிகிறது.  இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது. 

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதியில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீட்கப்பட்டது. முந்தைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் வேறொறு இடத்தில் கோயிலை அமைத்தார்கள். 

மடம் போல் காட்சியளிக்கும் இக்கோயிலை ஆகம அடிப்படையிலான கட்டுமான முறைக்கும், சிற்பக்கலை சார்ந்த கட்டிடக்கலை முறைக்கும் மாற்றியவர் ஆறுமுக நாவலர். அவருக்குப் பின் இப்பாடசாலையின் வளர்ச்சியில் இவருடைய மாணவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். 

ஆலய அமைப்பு 

இக்கோயிலின் கர்ப்பகிருகத்தில் சிலை விக்கிரகத்திற்குப் பதிலாக வேல் எழுப்பப்பட்டுள்ளது. அதைச் சுற்றி பிள்ளையார் போன்ற பரிவாரத்தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு கிழக்கு மற்றும் தெற்கு வாயில்கள் உள்ளன. இவற்றின் மேல் பெரும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள தீர்த்தக்கேணி நன்கு திட்டமிடப்பட்டு படிக்கட்டுகள் மற்றும் மண்டபங்களைக் கொண்டுள்ளது. முருகன் மூர்த்தங்களில் ஒன்றான தண்டாயுதபாணிக்கு அங்கு ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நான்கு புறமும் மடங்கள் உள்ளன. 

பூசைகளும் மகோற்சவமும் 

இக்கோயிலில் நித்திய கால வழிபாடுகள் தவறாமல் நடைபெறுகின்றன. அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜையும், மாலையில் பள்ளியறை பூஜையும் நடைபெறுவது சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். திருவிழாக் காலங்களில் மட்டுமின்றி, தினமும் மாலையில் முருகப்பெருமானை ஊஞ்சற்பாடுப் பாடி, அழகான மஞ்சத்தில் நடனமாடி, பள்ளி அறையில் துயிலச் செய்வதும்,  

மறுநாள் அதிகாலையில் திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சிப் பாடி, அதே சிறிய மஞ்சத்தில் முருகனைக் கொண்டு வந்து மூலஸ்தானத்தில் அமர்த்துவதும் ஒரு சிறந்த மரபு. இங்கு ஆவணி அமாவாசைத் தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் மஹாகோத்ஸவம் கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசையிலிருந்து ஆறாம் நாள் கொடியேற்றத்துடன் மஹாகோத்ஸவம் தொடங்குகிறது. 

மகோத்ஸவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். இக்காலத்தில் மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்காக புராணங்கள், சமய சொற்பொழிவுகள், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைத்து ஓதுவித்தல் போன்ற சமய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.