சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாடம்பாக்கம். இங்குதான் அருளாட்சி செய்துகொண்டிருக்கிறார் தேனுபுரீஸ்வரர்.
1000 ஆண்டுகளுக்கு முந்தைய புராதனத் திருக்கோயில். மூலவர் தேனுபுரீஸ்வரர், அம்பிகை தேனுகாம்பிகை. கபில முனிவர் பசுவடிவில் பூசித்து முத்திப் பேறு பெற்ற தலம் என்று சொல்கிறது ஸ்தல புராணம். அழகிய சிற்ப வேலைப்பாடுகளோடு கூடிய பிரமாண்டமான திருக்கோயில், ஆலய வளாகத்திற்கு வெளியிலுள்ள கபில தீர்த்தமும் அளவில் மிகப் பெரியது, நன்கு பராமரிக்கப்பெற்று வருகின்றது.
தேனுகாம்பிகையைத் தொழுது, சிறிய திருமேனியராய் எழுந்தருளியுள்ள தேனுபுரீஸ்வரரையும் பணிந்துப் பின் உட்பிரகாரத்தை வலம் வருகையில், சுவாமி சன்னிதியின் பின்புறம் வலது கோடியில் திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுள், ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுமாய், மயிலருகில் நின்ற திருக்கோலத்தில், தேவியரும் உடனிருக்க அற்புதமாய் திருக்காட்சி தந்து அருள் புரிகின்றான். அருணகிரிநாதர் இத்தலத்திற்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார்.
திருப்புகழ் பாடல் வரிகள்:
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதான
தோடுறும் குழையாலே கோல்வளை
சூடு செங்கைகளாலே யாழ்தரு
கீத மென்குரலாலே தூமணி ...... நகையாலே
தூம மென்குழலாலே ஊறிய
தேனிலங்கிதழாலே ஆலவி
லோசனங்களினாலே சோபித ...... அழகாலே
பாடகம்புனை தாளாலேமிக
வீசு தண்பனி நீராலேவளர்
பார கொங்கைகளாலே கோலிய ...... விலைமாதர்
பாவகங்களினாலே யான்மயல்
மூழ்கி நின்றயராதே நூபுர
பாத பங்கய மீதேயாள்வது ...... கருதாயோ
நாடரும்சுடர் தானாஓது!சி
வாகமங்களின் நானா பேத!அ
நாத தந்த்ரகலா மாபோதக ...... வடிவாகி
நால்விதந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயாதீத!ம
னோலயம்தரு நாதா ஆறிரு ...... புயவேளே
வாடயங்கிய வேலாலேபொரு
சூர்தடிந்தருள் வீரா மா!மயி
லேறு கந்தவிநோதா கூறென ...... அரனார்முன்
வாசகம் பிறவாதோர் ஞான!சு
கோதயம் புகல் வாசா தேசிக
மாடையம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
1000 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு தேனுபுரீஸ்வரர் கோயில் சிறப்பு:
மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது. மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது.இக்கோயிலிலுள்ள தூண்களில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. தூணில் சிற்பமாக சரபேஸ்வரர் காட்சி தருகிறார்.
இத்திருக்கோயில் நந்தி மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள 18 தூண்களின் கீழ் பக்கத்தில் நாற்புறங்களிலும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கலை நயத்துடன் துவாரகா பாலகர்கள் ,நர்த்தன கணபதி ,வீணை கணபதி ,வீணா தட்சணாமூர்த்தி ,கங்கா விசார்ஜனர் ,ஊர்துவர் தாண்டேஸ்வரர் ,சங்கர நாராயணன் ,வீரபத்ர ஸ்வாமி ,பத்ரகாளி ,கஜசம்ஹாரமூர்த்தி ,பஞ்சமுக விக்னேஸ்வரர் ,அர்த்தநாரீஸ்வரர் ,ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ,ஸ்வரஹரேஸ்வரர் ,சோமேஸ்கந்தர் ,நரசிம்மர் ,வாமணமூர்த்தி ,ராமர் பட்டாபிஷேகம் ,குழல் ஊதும் கண்ணன் , மற்றும் நால்வர்கள்,உச்சிஷ்ட கணபதி, சரபேஸ்வரர் ,பஞ்ச முக ஆஞ்சநேயர் ஆகியவர்கள் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது .
இந்தக் கோயிலுக்கு வந்து, பிரதோஷ நாளில் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேகத்தை தரிசித்தால், இழந்ததையெல்லாம் மீட்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
தேனுபுரீஸ்வரர் தல வரலாறு:
கபில முனிவர் சிவபூசை செய்வதற்கு லிங்கத்தை இடது கையில் வைத்து வலது கையால் மலர்தூவி வழிபட்டதாகவும், கையில் லிங்கத்தை வைத்து வழிபட்ட முறை சரியல்ல எனக் கூறி சிவன் அவரை பசுவாகப் பிறக்கச் சாபம் அளித்ததாகவும், பசுவாகப் பிறந்த கபிலர் இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்திபெற்றதாகவும் மரபு வரலாறு உள்ளது. பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, "தேனுபுரீஸ்வரர்' எனப்பட்டார். (தேனு-பசு). இவருக்கு "உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்' என்றும் பெயர் உண்டு.
சுந்தர சோழரின் அமைச்சரான அன்பில் அநிருத்தர் இக்கோயிலைக் கட்டியதாகவும் பின்னர் முதலாம் குலோத்துங்கனால் இது கற்றளியாக்கப்பட்டதாகவும், முன்மண்டபமும் அதிலுள்ள தூண்களும் பல்லவர்கள் காலத்தியது என்றும் விசய நகரப் பேரரசாலும் இக்கோயில் பராமரிக்கப்பட்டது என்றும் இக்கோயிலில் தற்காலத்திய கற்பலகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கற்பலகை கோயிலின் முன்புறம் திறந்து வைக்கப்பட்டுள்ள புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் இறைவனும் இறைவியும் `சிற்றேரி ஆளுடைய நாயனார்' என்றும் `நம்பிராட்டியார்' என்றும் கூறப்பட்டிருக்கிறார்கள்.
சரபேஸ்வரர் வழிபடு :
சென்னையில் சரபேஸ்வரர் வழிபாடு செய்யும் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும் .ஒவ்வொரு ஞாயிற்று கிழமை அன்றும் மாலை 4 .30 – 6 .00 மணி வரை ராகு காலத்தில் இங்குள்ள சரபேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் மிக சிறப்பாக நடைபெறுகிறது .
மாடம்பாக்கம் சிவாலயத்துக்கு வந்து தரிசியுங்கள். நம் பாவமெல்லாம் தொலையும். புண்ணியங்கள் பெருகும். எதிரிகள் விலகுவார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்.
தேனுபுரீசுவரர் கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 -12 , மாலை 5 -8 .30 மணி வரை
மாடம்பாக்கம் சிவன் கோவிலுக்கு அருகில் பார்க்க வேண்டிய மற்ற இடங்கள் இந்த கோவிலுக்கு சற்று எதிரில் 18 சித்தர் கோவில் உள்ளது , மேலும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கட்டப்பட்ட ஸ்கந்தாஷ்ரமம் உள்ளது.
Click the given Google coordinates to reach here https://goo.gl/maps/jsKnAVfJjz92
மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் முகவரி:
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்,
மாடம்பாக்கம் - 600073,
சென்னை.