மாசி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. புராணங்களின்படி, மாசி மாத மகம் நட்சத்திர நாளில் தான் திருமால் மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தார் என்கிறது புராணம். மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார், மாசி மாதத்தில் வரும் புனர்பூச நட்சத்திர நாளில் அவதாரம் எடுத்தார்.
மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் தான் புனித நதிகள் தங்கள் பாவங்களைப் போக்கிப் புதுப்பித்துக் கொள்கின்றன. இந்த நாளில் தான், பார்வதி தேவி தக்ஷனின் மகளாக தக்ஷயினியாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. மாசி மகம் நட்சத்திரம் என்பது சிவபெருமான் வருண பகவானின் தோஷம் நீக்கி அவருக்கு ஆசிர்வதித்த நாளாகும். இதுபோன்ற பல சிறப்புகளைக் கொண்ட மாசி மகம் நாளில் அனைத்து கடவுள்களையும் வழிபடலாம்.
தேதி மற்றும் நேரம்:
2025 மார்ச் மாதம் 12ந் தேதி மாசி மகம் கொண்டாடப்படுகிறது.
மகம் நட்சத்திரம் தொடங்கும் நேரம் 12-03-2025 அதிகாலை 03:53 முதல்
13-03-2025 அதிகாலை 05:09 வரை
மாசி மகத்தன்று புனித நதியான கங்கை கடல், குளம், ஆறு போன்ற நீர்நிலைகளுடன் கலக்கிறது என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மாசி மகத்தன்று புனித நீராடினால் ஏழு பிறவிகளின் பாவங்கள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமஹம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இது கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.
தோஷம் நீங்கிய வருண பகவான்:
வருண பகவான் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டபோது கடலில் மூழ்கிபடி இருந்தார். அந்த தோஷத்தைப் போக்க மிகுந்த பக்தியுடன் சிவபெருமானை வணங்கினார். அவரது தவத்தில் மகிழ்ந்து சிவபெருமான் அவரை ஆசீர்வதித்தார். வருண பகவான் தோஷத்திலிருந்து விடுபட்ட நாள் மாசி மகமாகும். இந்த நாளில் புனித நீராடும் மக்களுக்கு தங்கள் பாவங்களைப் போக்கி அருள் புரியுமாறு வருண பகவான் சிவபெருமானிடம் வேண்டினார். இதைக் கேட்ட சிவபெருமான், வேண்டப்பட்ட வரத்தை அருளினார். வருண பகவான் தனது தோஷம் நீங்கப் பெற்ற நாள் என்பதால், அந்த நாளில் புனித நீராடுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
தாட்சாயிணி அவதரித்த நாள்:
மாசி மகம் நாளில் தான் காளிந்தி நதியில் தாமரை மலரில் வலம்புரி சங்காக பார்வதி தேவி தோன்றினார் என்று புராணம் கூறுகிறது. சிவபெருமானுடன் சக்தியே பெரிது என்ற வாக்குவாதம் செய்ததன் விளைவாக, பார்வதி தேவி சிவனால் சபிக்கப்பட்டு வலம்புரி சங்காக மாறி தாமரை மலரில் தவம் செய்தார். இந்த நேரத்தில், தக்ஷ பிரஜாபதி தனது மனைவியுடன் யமுனை நதியில் குளிக்கச் சென்றார். அப்பொழுது வலம்புரி சங்கை அவர் கையில் எடுத்தபோது, சங்கு அழகான பெண் குழந்தையாக மாறியது. இதைக் கண்டு அவர் திகைத்துப் போனார். அவர் அந்தப் பெண் குழந்தையை அரண்மனைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு தட்சாயினி என்று பெயரிட்டு வளர்த்தார். வலம்புரி சங்காக இருந்து தட்சாயினியாக மாறிய நாள் மாசி மக நாளாகும்.
முருகன் வழிபாடு :
மாசி மகத்தன்று முருகப்பெருமான் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால், நிச்சயமாக குழந்தைப் பேறு கிடைக்கும்.
ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்றைய தினம் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
வழிபாட்டு முறைகள் :
அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, அதைத் தினமும் நெற்றியில் வைத்து வழிபட்டால், கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள நீங்கி, குடும்ப ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கும்.
மாசி மக தினத்தன்று தான் விஷ்ணு பகவான் மகா விஷ்ணு மற்றும் வராக மூர்த்தியாக அவதரித்து பூமியைப் பாதுகாத்தார். எனவே, நீங்கள் விஷ்ணு பகவானை வழிபட்டால், அவருடைய முழுமையான ஆசிகளைப் பெறுவீர்கள்.
அறிவு மற்றும் முக்திக்குக் காரணமான கேது பகவான், மகம் நட்சத்திரத்தின் அதிபதி. எனவே, மாசி மகத்தன்று நவக்கிரக சன்னதியில் வஸ்திரம் சாற்றி, கேது பகவானை வழிபட்டால், உங்கள் புத்திக்கூர்மை அதிகரிக்கும்.
மகம் பித்ருக்களுக்குரிய நட்சத்திரம் என்பதால், மாசி மகத்தன்று முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் செய்வது குடும்பத்தின் நலனை அதிகரிக்கும்.
மாசி மகம் நாளில் மந்திர உபதேசங்களைப் பெறுவது சிறந்தது. இந்நாளில் தான் சிவபெருமான் பல திருவிளையாடல் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி மாத பௌர்ணமி அன்றுதான் சிவன் மன்மதனை எரித்தார். இந்த நிகழ்வு காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மகம் நாளில் பிறந்தவர்கள் ஜகம் ஆள்வார்கள் என்றும், மாசிக்கயிறு பாசி படியும் என்றும் பழமொழி உள்ளது. இந்த மாதத்தில் பெண்கள் புதிய மாங்கல்ய கயிறு கட்டுவது மங்களகரமானது. இது காரடையான் நோன்பு என்று கொண்டாடப்படுகிறது.
உயர்கல்வி கற்க விரும்புவோர், ஆராய்ச்சி செய்ய விரும்புவோர் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம். இந்நாளில் புனித நீராட முடியாதவர்கள் மாசி மகம் பற்றிய புராணம் படிக்கலாம். அல்லது அதைக் கேட்பது கூட மங்களகரமானது.
மாசி மகம் நாளில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் பொற்தாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்பத் திருவிழா நடத்தப்படுகிறது. இது அப்பர் தெப்பம் என்று அழைக்கப்படுகிறது.
மாசி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி, துளசியால் விஷ்ணுவை வணங்கினால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மாசி மக நாளில் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோம்!!