தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே தோரணமலை ஸ்ரீ முருகன் கோயில் அமைந்துள்ளது. தோரணமலை தென் பொதிகை மலைத்தொடரில் அமைந்துள்ளது.
சிவன், பார்வதி திருமணத்தின் போது, வடக்கு திசை தாழ்ந்து தெற்கு திசை உயர்ந்த போது, அதைச் சமப்படுத்த அகத்திய மாமுனிவர் பொதிகை மலைக்கு வந்தார் என்று புராணம் கூறுகிறது. வழியில், ராம நதி மற்றும் ஜம்பு நதி ஆகிய இரண்டு நதிகளுக்கு இடையில் உள்ள தோரணமலை இயற்கை அழகு மிக்க இடமாக இருந்தது. அகஸ்தியர் இங்கு எழில்மிகு அழகுடன் கூடிய முருகனின் சிலையை நிறுவியதாகவும், பின்னர், அவர் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பிறவியிலேயே வாய் பேச முடியாது இருந்த ஒரு சிறுவனுடன், ஒளவையார் அகஸ்தியரிடம் வந்தார். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த அந்த சிறுவனை அவரது ஆராய்ச்சிக்கு உதவியாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டார். அகஸ்தியரும் சிறுவனை சீடராக ஏற்றுக்கொண்டு தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அவரது மருத்துவ ஆராய்ச்சியின் பலன்கள் திக்கெட்டும் வேகமாகப் பரவின.
மன்னரின் தீராத தலைவலி
தென்காசியில் வாழ்ந்து வந்த மன்னர் காசிவர்மன், நன்முறையில் மக்களை ஆண்டு வந்தார். ஆனால் மன்னருக்கு தீராத தலைவலி இருந்து வந்தது. பல வைத்தியம் செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அச்சமயம், தமிழ் முனிவர் அகத்தியரிடம் சென்றால் நோய் தீர வழி பிறக்கும் என்பதை மன்னர் அறிந்தார்.
கடந்த சில வருடங்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், அதற்கான தீர்வைத் தருமாறு அகத்தியரிடம் கூறினார். மன்னரின் தலைவலிக்கான காரணத்தை அகத்தியர் கண்டுபிடித்தார்.
ஜலநேத்திப் பழக்கம்
மன்னருக்கு ஜலநேத்திப் பழக்கம் இருந்ததாகவும், அதனால்தான் அவருக்கு தலைவலி ஏற்பட்டதாகவும் அகஸ்தியர் கண்டுபிடித்தார். ஜலநேத்தி என்பது ஒரு நாசியின் வழியாக தண்ணீரை உள்ளிழுத்து, மூளையின் அனைத்து அறைகளிலும் செலுத்தி, அதை சுத்தம் செய்து, பின்னர் மறு நாசியின் வழியாக தண்ணீரை வெளியேற்றும் முறையாகும். அந்த நேரத்தில், அந்த நீரில் நுண்ணுயிரிகளுடன் கலந்த ஒரு தேரை மூளையில் சென்றுவிட்டது. அந்த தேரை இப்போது பெரிதாகிவிட்டது.
அது இப்போது வெளியே வர முடியாமல் சுற்றி வருகிறது. அந்த அசைவுகள் தான் தீராத தலைவலிக்கு காரணம். கபாலத்தைத் திறந்து தேரை அகற்றினால், நோய் குணமாகும் என்றறிந்தார் அகத்திய மாமுனிவர்.
முதல் அறுவை சிகிச்சை
முதலில், காசிவர்மனுக்கு சம்மோகினி என்ற மூலிகை மருந்து செலுத்தி மயக்கமடையச் செய்தார். அவரது மண்டை ஓட்டைச் சுற்றி ஒரு வகை மெழுகு போன்ற மூலிகை தடவப்பட்டபோது, மண்டை ஓடு திறக்கப்பட்டது. அங்கு ஒரு தேரை, மூளையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். இருப்பினும், தேரையை வெளியே எடுக்க எதைச் செலுத்தினாலும், மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் சேதமடையும் என்று அகஸ்தியர் தயங்கினார். அகஸ்தியர் ஒரு குறடு மூலம் அதை அகற்ற முயன்றார். அவருடன் இருந்த சிறுவன் அவரைத் தடுத்தான்.
வாய் அகலமான மண்பாண்டம் ஒன்றில் நீர் நிரப்பி கொண்டு வந்தான். அதனைக் கபாலம் அருகில் கொண்டு சென்று, நீருக்கள் கையை விட்டு அசைத்து ‘சல சல’ என சப்தம் எழுப்பினான். அந்த நீரின் சத்தம் மற்றும் குளிர்ச்சி காற்றில் வர, தேரை அந்த நீரினுள் குதித்தது.
அகஸ்தியர் உடனடியாக மண்டை ஓட்டை மூடி, 'சந்தானகரணி' என்ற மூலிகைக் கலவையைப் பயன்படுத்தி பிளவுபட்ட மண்டை ஓட்டை இறுக்கமாக மூடினார். சிறிது நேரம் கழித்து, மன்னரின் மயக்கம் தீர்க்க 'சஞ்சீவினி' என்ற மூலிகையைப் பயன்பாடுத்தினார். தலைவலி நீங்கியது.
தேரையர் பெயர்க்காரணம் :
இந்த சிகிச்சையின் போது, சிறுவன் புத்திசாலித்தனமாக செயல்பட்டதன் விளைவாக அன்றிலிருந்து, அகத்தியர் அவனை தேரையர் என்று அழைத்தார். பின்னர், அங்குள்ள மூலிகைகளைப் பயன்படுத்தி, தேரையரின் வாய் பேசாமையைக் குணப்படுத்தி, பேசும் திறனை மீட்டெடுத்தார். மேலும் அகத்தியர் தேரையருக்கு சித்த மருத்துவம் மற்றும் சித்த நடைமுறைகளைக் கற்றுக்கொடுத்து, தேரையரை ஒரு சிறந்த மருத்துவராகவும் சித்தராகவும் உயர்த்தினார் என்கிறது வரலாறு.
தேரையரின் சிறப்புகள் :
தேரையர் சித்தர், ஆயுர்வேத மருத்துவத்திற்கு அடித்தளமாக பல நூல்களை எழுதியுள்ளார். இவரது இயற்பெயர் பொன்னுரங்கன். 18 சித்தர்களில் ஒருவரான தேரையர் எழுதிய நூல்களில், பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறி, நெய்க்குறி சாத்திரம், தைலவருக்கச் சுருக்கம் ஆகியவை சிறந்த நூல்களாகும். மேலும் இவர் எழுதிய வைத்திய யமக வெண்பா, மணிவெண்பா மருந்துப்பாரதம் போன்ற நூல்கள் தற்போதைய ஆயுர்வேத மருத்துவத்திற்கு அடித்தளமாக உள்ளன.
அகத்தியரே குழம்பிய வேளையில், சமயோசிதமாக யோசித்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானவர். தேரையர் சித்த மருத்துவ அறுவை சிகிச்சை துறையில் வல்லவராவார். மனித உடலைத் துல்லியமாக வெட்டுவதற்கும், உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், பின் வெட்டப்பட்ட உடலை மூலிகைச் சாற்றின் மூலம் மீண்டும் இணைப்பதற்கும் மூலிகைகளைப் பயன்படுத்துவதில் சிறந்த நிபுணர்.
தோரணமலை முருகப்பெருமானை வழிபட்டு, சித்த மருத்துவம் குறித்து ஆராய்ச்சி செய்து வந்த தேரையர், தோரணமலையில் சுமார் 700 ஆண்டுகள் தியானத்தில் இருந்தார், இறுதியில் அங்கேயே ஜீவசமாதி அடைந்தார். தேரையரின் சமாதி தற்போது பிரதான தெய்வமாக வணங்கப்படும் முருகப்பெருமானுக்குப் பின்னால் அமைந்துள்ளது.