தீய சக்திகளை அழிக்கும் மாசி அமாவாசை மயானக் கொள்ளை - Masi Amavasi Graveyard worship to destroy evil spirits

uma 17 16/2/2025
 தீய சக்திகளை அழிக்கும் மாசி அமாவாசை மயானக் கொள்ளை - Masi Amavasi Graveyard worship to destroy evil spirits

 

 
சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு மாதத்தின் அமாவாசையும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், மாசி மாதத்தின் அமாவாசைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மாசி மாதமே சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடு மற்றும் தானங்கள் இரட்டிப்பு நன்மைகளைத் தரும் என்று புராணங்கள் கூறுகின்றன. மற்ற மாதங்களில்,
 
முன்னோர்களுக்கு அமாவாசை நாளில் மட்டுமே தர்ப்பணம் செய்கிறார்கள். ஆனால் மாசி மாத பௌர்ணமி நாளில் கூட, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியமாகும்.
மாசி மாத அமாவாசை இந்த வருடம் பிப்ரவரி 27ம் தேதி வருகிறது. இந்த அமாவாசை நாளில் உக்கிரமான கடவுள்களின் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாசி மாத அமாவாசை அன்று, அங்காள பரமேஸ்வரி கோயில்களில் மயானக் கொள்ளை வழிபாடு சிறப்பு வாய்ந்தது. அங்காள பரமேஸ்வரி வடிவம் என்பது, அனைத்து தீய சக்திகளையும் அழித்து, இந்த பூமியில் நல்ல சக்திகளை நிலைநாட்ட எடுக்கப்பட்ட அவதாரமாகும்.
 
உங்கள் குல தெய்வம் இப்படி உக்கிர தெய்வமாக இருந்தால், மாசி அமாவாசை அன்று அந்த அம்பாளுக்கு செய்யக்கூடிய சடங்குகளை நீங்கள் தவறவிடக்கூடாது. உங்கள் குல தெய்வ கோவிலுக்குச் சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று உங்கள் பிரார்த்தனைகளைச் செய்யுங்கள்.
 
பித்ரு வழிபாட்டிற்கு உகந்த மாசி அமாவாசை நாளில் நீங்கள் விரதம் இருந்து உங்கள் முன்னோர்களை வழிபட்டால், அவர்களின் ஆன்மாக்கள் நற்கதி பெறும். அவர்கள் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்கு நல்வாழ்வு அருள்வார்கள். கிரக தோஷங்கள், திருமணத் தடைகள், குடும்ப உறுப்பினர்களின் உடல் உபாதைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் தொழில் வியாபாரம் செழிக்கும்.
 
மயானக் கொள்ளை:
 
புராணங்களின் படி, பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் இருந்தனவாம். அதனால் அவர் ஆணவம் கொண்டார். அதை அடக்க, சிவபெருமான் அவரது ஐந்தாவது தலையை வெட்டினார். இதன் காரணமாக, பிரம்மஹத்தி தோஷம் இறைவனைப் பிடித்தது. பிரம்மாவின் ஐந்தாவது தலை, பிரம்ம கபாலமாக சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. எனவே சரஸ்வதி தேவியின் சாபத்தால், சிவன் ஒரு பிச்சைக்காரனின் வடிவத்தில் அலைந்து கொண்டிருந்தார். பார்வதியும் சிவன் இல்லாமல் ஒரு அகோர வடிவில் அலைந்து திரிந்து, இறுதியாக மயானத்தில் ஒரு புற்றில் பாம்பின் வடிவத்தில் வாழ்ந்தாள். பிரம்மாவின் தலை சிவன் பிச்சை எடுத்த அனைத்து உணவையும் உண்ண, சிவன் பசியுடன் அலைந்து கொண்டிருந்தார். இறுதியாக, அவர் பார்வதி தேவி வாழ்ந்த மயான பூமிக்கு வந்தார்.
 
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி, பார்வதி தேவி புற்றிலிருந்து வெளியே வந்து ஒரு பெண்ணாக வேடம் அணிந்து சிவனுக்கு உணவு சமைத்தாள். சிவன் பிச்சை எடுக்க வந்தபோது, அன்னை தான் சமைத்த உணவை மூன்று பகுதிகளாகப் பிரித்து சிவனின் பிரம்ம கபாலத்தில் வழங்கினாள். முதல் இரண்டு பகுதிகளையும் சாப்பிட்ட கபாலம், உணவின் சுவையில் மயங்கிப் போனது. அன்னை மூன்றாவது பகுதியை கபாலத்தில் வைப்பதற்குப் பதிலாக சூரை போல கீழே எறிந்தாள். அதைச் சாப்பிட, கபாலம் சிவனின் கையை விட்டு கீழே வந்தது. உடனே, பார்வதி கோபத்தில், கீழே வந்த கபாலத்தை தனது காலால் மிதித்து நசுக்கினாள்.
 
கபால வதம் முடிந்ததும், அன்னை மயானத்தில் அங்காளியாக ஆவேசமாக நடனமாடினார். உலகம் முழுவதும் அவளுடைய நடனத்தால் சுழல்வது போல் தோன்றியது. அவள் போர்க்கோலம் பூண்டு தேரில் ஏறினாள். அன்னையை சமாதானப்படுத்த, ஸ்ரீ விஷ்ணு தேரின் அச்சாணியை உடைத்தார். கீழே விழுந்த அம்பாள் கோபம் தணிந்து நான்கு கரங்களுடன், சூலம், உடுக்கை, கத்தி மற்றும் கபாலத்துடன் எழுந்து அமர்ந்து அங்காள பரமேஸ்வரி என்ற பெயருடன் அங்குள்ள அனைவருக்கும் தரிசனம் அளித்தாள்.
 
விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் மிகவும் பிரபலமான கோயிலாகும். இது செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கோயிலில், அன்னை மல்லாந்து படுத்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
 
இந்த நிகழ்வு மகா சிவராத்திரிக்கு அடுத்த அமாவாசை நாளில் நடந்தது. எனவே, மயானக் கொள்ளை உற்சவத்தைக் கொண்டாடும் வழக்கம் தொடங்கியது. அன்னையானவள் அன்னைத்தை சூரையிட்டது போல், அங்கு வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு பழங்கள், காய்கறிகள், முட்டைகள், தானியங்கள், கொழுக்கட்டை, நாணயங்கள் மற்றும் கீரைகளை வீசி எறிவார்கள். சூரையிடப்பட்ட இப்பொருட்களை திருவிழாவிற்குப் பிறகு தங்கள் நிலங்களுக்கு எடுத்துச் சென்று விதைத்தால், அந்த ஆண்டின் வெள்ளாண்மை நன்றாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
 
இந்த விழாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அங்காள பரமேஸ்வரி போன்று பக்தர்களும் காட்டேரி, பாவாடைராயன் போன்ற வேடங்களில் ஆவேசமாக நடனமாடி, மயானத்தில் சூரை நிகழ்த்துகிறார்கள். அன்றைய தினம் அன்னை தீய சக்திகளை விரட்டுவதாக நம்பப்படுகிறது. சிவராத்திரி இரவில் சூரை விழா தொடங்குகிறது. பின்னர் தேவியின் கண் திறப்பு, இரத்த பலி, அமாவாசை நடுப்பகல் மயானக் கொள்ளை பின்பு ஊஞ்சல் சேவை இறுதியாக விடையாற்றும் உற்சவம் நிகழ்த்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல கோயில்கள் உள்ளன. மாசி மாத அமாவாசை அன்று அனைத்து கோயில்களிலும் மயானக் கொள்ளை நடத்தப்படுகிறது.
 
அங்காள பரமேஸ்வரி மீதுள்ள பக்தியின் காரணமாக, இந்த விழாவைக் காண, வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூருக்கு வருகிறார்கள். மாசி அமாவாசை நாளில், தேவி தனது முழு சக்தியுடன் வாசம் செய்கிறாள். அன்று மேல்மலையனூருக்கு வருகை தருபவர்கள் அனைத்து நன்மைகளையும் பெறுவதில் ஐயம் ஏதும் இல்லை.