பூர்வ புண்ணிய பலன் தரும் மகா சிவராத்திரி விரதம் || Maha Shivratri Vrat gives ancient merit

uma 8 11/2/2025
 பூர்வ புண்ணிய பலன் தரும் மகா சிவராத்திரி விரதம் || Maha Shivratri Vrat gives ancient merit

மாசி மாத பௌர்ணமிக்கு முன் வரும் சதுர்தசி திதி ராத்திரியையே மகா சிவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். இந்த புனித நாளில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம், எம பயம் நீங்கி, நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகளைப் பெறலாம்.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 26ந் தேதி மஹா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.

புராணக்கதைகள் :

1)ஒரு காலத்தில், இரவில் காட்டில் புலி துரத்திவிடுமோ என்று பயந்து ஒரு வேடன் மரத்தில் ஏறி அமர்ந்தான். புலி அவனை வேட்டையாட அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. வேடன் இரவில் உறங்கமால் கண்களைத் திறந்து வைத்திருக்க மரத்திலிருந்து இலைகளைப் பறித்து கீழே போட்டு கொண்டு இருந்தான். அந்த இலைகள் கீழே உள்ள சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டே இருந்தன. வேடன் அன்று சிவராத்திரி என்று அறியாவிட்டாலும், வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்ததால். சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து அவனுக்கு முக்தி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

2) புராணங்களின்படி, தேவர்கள் வாசுகி என்ற பாம்பின் உதவியுடன் சமுத்திர மந்தன் என்ற திருப்பாற்கடலைக் கடைந்தபோது, கடலில் விஷம் கலந்தது. இந்த விஷம் உலகம் முழுவதையும் அழிக்கக்கூடும் என்று நம்பி தேவர்கள் பயந்து போனார்கள். சிவபெருமானிடம் உதவி நாடி ஓடியபோது, அவர் அந்த கொடிய விஷத்தை குடித்தார், ஆனால் அதை விழுங்குவதற்கு பதிலாக, அதை அவர் தனது தொண்டையிலேயே வைத்திருந்தார். இதன் காரணமாக, சிவபெருமானின் தொண்டை நீல நிறமாக மாறியது, இதனால் அவர் 'திருநீலகண்டன்' என்று அழைக்கப்படுகிறார். இந்த சம்பவம் நடந்த நாள் சிவராத்திரி என்று கூறப்படுகிறது.

வழிபாட்டு முறை:

காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்துவிட்டு அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, "இன்று மகா சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிக்கும் எனக்கு எந்த இடையூறும் இல்லாமல் முழுமையாக முடிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விரதத்தைத் தொடங்கலாம்.

விரதம் இருப்பவர்கள் முடிந்தவரை மூன்று வேளை உணவு உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் இரண்டு வேளை பால், பழம் மற்றும் ஒரு வேளை சாப்பிடலாம். நாள் முழுவதும் "ஓம் நம சிவாய" என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும். வேலைக்குச் செல்பவர்கள் சிவனை நினைத்தவாறே தங்கள் வேலையைச் செய்ய வேண்டும்.

மாலையில், மீண்டும் சிவாலயத்திற்குச் சென்று நான்கு சாம பூஜை வழிபாட்டில் பங்கேற்பது நல்லது. முதல் பூஜையில் சோமாஸ்கந்தரை வணங்க வேண்டும். இரண்டாவது பூஜை வேளையில் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். மூன்றாவது பூஜையில், லிங்கோத்பவரை வணங்க வேண்டும், நான்காவது பூஜையின் போது, சந்திரசேகரரை (ரிஷபாருடர்) வணங்க வேண்டும்.

மகா சிவராத்திரி நான்கு சாம பூஜை நேரங்கள்

முதல் சாம பூஜை – இரவு 07:30PM

இரண்டாம் சாம பூஜை – இரவு 10:30PM

மூன்றாம் சாம பூஜை – நள்ளிரவு 12:00AM

நான்காம் சாம பூஜை – அதிகாலை 04:30AM

முதல் சாமம் (இரவு 7:30PM)

இந்த முதல் சாம பூஜை, படைப்பின் கடவுளான "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.

இந்த பூஜையின் போது, "பஞ்ச கவ்வியம்" (பசுவின் பால், தயிர், நெய், கோமியம், கோசாணம்) கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

மஞ்சள் பட்டாடை சாற்றி, தாமரை மற்றும் அரளி மலர்களால் அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்து, பிரசாதமாக பாசி பருப்பு பொங்கல் பால், அன்னம் படைக்க வேண்டும்.

முதல் நாள் பூஜை நெய் தீபம் மற்றும் ரிக் வேத பாராயணத்துடன் செய்யப்படுகிறது. சிவ புராணத்தை தமிழில் ஓதி வழிபட வேண்டும்.

இந்த காலகட்டத்தில் வழிபடுவதன் மூலம், நமது கர்மங்களிலிருந்து விடுபட்டு நல்ல பலன்களைப் பெறலாம்.

இரண்டாம் சாமம் (இரவு 10:30PM)

இந்த இரண்டாவது சாம பூஜை, காக்கும் கடவுள் "விஷ்ணு" சிவபெருமானுக்கு செய்யும் பூஜை. இந்த காலகட்டத்தில், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்.

சந்தனக் காப்பு சாற்றி, வெள்ளை பட்டாடை அணிவித்து அலங்கரிக்க வேண்டும், துளசி அர்ச்சனை செய்து, பாயசத்தை நிவேதனமாக வழங்க வேண்டும்.

இரண்டாவது சாம பூஜை, யஜுர் வேத பாராயணத்துடன் நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி செய்யப்படுகிறது. கீர்த்தி திருஆகவல் ஓதி பூஜை செய்ய வேண்டும்.

இந்த காலகட்டத்தில் விரதம் இருப்பதன் மூலம், தன தானியம் மற்றும் செல்வம் சேரும்.

மூன்றாம் சாமம் (நள்ளிரவு 12:00AM)

இந்த மூன்றாவது சாம பூஜை அருள் வடிவமான "அம்பாள்" வழிபாடாகும். இந்த நேரத்தில், தேன் அபிஷேகம் செய்ய வேண்டும்.

பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலைகளால் அலங்கரித்து, சிவப்பு வஸ்திரம் சாற்றி, வில்வம், மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்து, "எள் அன்னம்" பிரசாதமாக படைக்க வேண்டும்.

இலுப்பை எண்ணெய் விளக்கேற்றி சாம வேத பாராயணத்துடன் பூஜை முடிகிறது. திருவண்டபகுதியை ஓதி வழிபட வேண்டும். இந்த நேரத்தின் சிறப்பு அம்சம் "லிங்கோத்பவ காலம்" என்று அழைக்கப்படுகிறது.

இந்த நேரத்தில், சிவனின் அடிமுடி காண, பிரம்மா அன்ன வடிவில் வானை நோக்கியும், வராஹ வடிவில் மகாவிஷ்ணு பூமியை நோக்கியும் சென்ற சிறந்த நேரமாகும்.

இந்த நேரத்தில் வழிபடுவதன் மூலம், எந்த தீய சக்தியாலும் நாம் பாதிக்கப்படாமல் தேவியின் அருளையும் பெறுவோம்.

நான்காம் சாமம் (அதிகாலை 4:30AM)

இந்த நான்காவது சாம பூஜை முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், பூதகணங்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களும் சிவபெருமானை வழிபடுவதாகக் கருதப்படுகிறது.

பால், பழம் மற்றும் கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

நந்தியாவட்ட மலர் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, அர்ச்சனை செய்து, அதர்வண வேதம் ஓதப்பட்டு, திருஆகவல் பாடப்பட வேண்டும்.

 வெள்ளை சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டு, ஷோடச உபசாரம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு வழிபடுவதன் மூலம், ஒருவரின் மகா சிவராத்திரி விரதம் முழுமையாக நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், எண்ணற்ற பலன்களைப் பெறலாம். உண்மை என்னவென்றால், மகா சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பதாக நினைத்து, சிவராத்திரி அன்று விழித்து இருப்பேன் என்று சொல்லிவிட்டு, இரவு முழுவதும் குடும்பக் கதைகளைப் பற்றிப் பேசுவது, திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற செயல்களைச் செய்வதில் பெரிய பலன் எதுவும் இல்லை. எனவே, மகா சிவராத்திரி அன்று முழு மனதுடன் சிவனை வழிபட்டு, சிவபெருமானின் அருளை முழுமையாகப் பெறுவோம்.