வணக்கம் நேயர்களே!! கந்தபெருமானே வழிபடும் சிவஸ்தலம் மற்றும் சிவபெருமான் கிளியாக சக்தியின் தோளில் அமர்ந்திருக்கும் சிறப்புமிக்க காத்ர சுந்தரேஸ்வரர் கோவில்
காத்ர சுந்தரேசுவரர் ஆலயம் மயிலாடுதுறை மாவட்டத்தின் கஞ்சாநகரம் பகுதியில் அமையப்பட்டுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இத்திருத்தலம் 'கார்த்திகா சுந்தரேசுவரர் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. 63 நாயன்மார்களுள் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் அவதரித்து முக்தி அடைந்த திருத்தலம் இதுவாகும்.
ஆலயத்தின் இதர தெய்வங்கள்
துர்க்கை அம்மன், சண்டிகேசுவரர், பிரம்ம தேவர், மேதா தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் மற்றும் செல்வ விநாயகர், சுப்பிரமணியர், நந்தி மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்புரிகின்றனர்.
தல வரலாறு :
பத்மாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களால் துன்புறுத்தப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காக்குமாறு பார்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி சிவபெருமானிடம் வேண்டினாள். அந்த சமயத்தில் சிவபெருமான் காத்ரஜோதி எனும் நெருப்பு வடிவ யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அம்மனின் வேண்டுதலுக்கிணங்கி ஈசன் தவம் கலைந்து, காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் நாமம் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு பொறிகள் வெளிவந்தன. அந்த ஆறு பொறிகளும் ஒன்றிணைந்து கார்த்திகேயன் உருவானார்.
முருகப்பெருமானின் பிறப்பிற்கு காரணமான இந்த தலத்தின் இறைவனிடம் இருந்து ஆறு தீப்பொறிகள்
காஞ்சனப்பிரகாசம் தோன்றியது. எனவே இத்தலம் காஞ்சன நகரம் என்று அழைக்கப்பட்டது.
காலப்போக்கில் அது கஞ்சாநகரம் என்றானது. தான் அவதரிக்க காரணமாக இருந்த இத்தலத்து இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்திருத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய பரிகாரஸ்தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவிதமான சுடர்களை உருவாக்கும் சக்தி கொண்டவர் என்று பொருள்.
மற்றொரு சிறப்பு இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 63
நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சார நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தி அடைந்தார்.
வேதம் ஓதும் கிளி:
மதுரை மீனாட்சி அம்மனைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ்தானாம்பிகையும் கையில் கிளி வைத்திருக்கிறாள். இதற்கு வேதாமிர்த் கீரம் என்று பெயர். மற்றொரு கையில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் ஆகியவற்றை ஏந்தியிருக்கிறாள். வேத சக்தியாக சிவபெருமான் கிளி வடிவில் அம்மனின் இடது தோளில் அமர்ந்திருப்பது இத்திலத்தின் சிறப்பம்சமாகும். இது வேதம் ஓதும் கிளியாகும். இந்த அம்மனை வியாசர் மற்றும் சுகபிரம்ம மகரிஷி வழிபட்டுள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாளன்று இந்தக் கிளியை தரிசனம் செய்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். மூலஸ்தான விமானத்திற்கு மேல் சட்டநாதருக்கு தனி சந்நிதி உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் அந்த நட்சத்திர நாளில் மற்றும் பிரதோஷ நாட்களில் இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கார்த்திகை
நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால் இத்தலத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யலாம் மற்றும் சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
நாமும் இத்திருத்தலம் சென்று கந்தபிரானின் அருளைப் பெறுவோம்!!.