வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது, உலகப் புகழ் பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாம் அறிந்ததே. இத்தல வரலாற்றை நாம் அதிகமாக கேள்வியுற்றிருப்போம். ஆனால் அதில் விதவிதமாக ஏன் வேடம் அணியப்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகிற்கு ஆதாரமான அன்னை ஆதிபராசக்தி வெவ்வேறு ஆலயங்களில் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். இவ்வாறே திருச்செந்தூருக்கு அருகில் உள்ள கடலோர நகரமான குலசேகரன்பட்டினத்தில் மூவுலகின் நாயகியான முத்தாரம்மன் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறாள்.
வேடம் அணிவது ஏன்?
குலசேகரப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களில் நிலங்கள் கொண்ட பண்ணையார் ஒருவர், அம்மனின் சிறப்பைக் கேள்விப்பட்டார். கோவில் பூசாரியிடம், வெள்ளாமை குறைவாக உள்ளது, அம்மனுக்கு சக்தியிருந்தால் அதை பெருக்கி தர வையுங்கள், நீங்கள் கேட்பதை நான் செய்கிறேன் என்றார் பண்ணையார். பூசாரி, திருநீறு கொடுத்து ஐயா, இம்முறை வெள்ளாண்மை சிறப்பாக இருக்கும், முத்தாரம்மனுக்கு கோயில் கட்ட உதவுங்கள் என்றார். பண்ணையாரும் சம்மதித்தார். அதே போல் வெள்ளாமை அதிகமாக இருந்தது. பண்ணையார் மனம் குளிர்ந்து கோயில் கட்ட உதவலானார்.
ஒரு நாள் பூஜை நடந்து கொண்டிருந்த சமயத்தில் குறத்தி பெண் ஒருவர் கோயில் வாசல் முன் வந்து நின்றாள். பண்ணையார் பூசாரியிடம் அவளை அனுமதிக்க மறுத்தார். அதற்கு பூசாரி அம்மனை பார்க்க வருகிறவர்களை தடுக்க, தனக்கு அதிகாரம் இல்லை என்றார். என்னையே எதிர்த்து பேசுகிறாயே என்று சினத்துடன் சென்று விட்டார் பண்ணையார். மறுநாள் காலை பண்ணையாரின் கன்னம் வீங்கி, வலியால் துடித்தார். உணவு உண்ண முடியாமல் தவித்தார். முத்தாரம்மனை வேண்டி உருகி நின்றார். அன்றிரவு பண்ணையார் கனவில் அம்மன் தோன்றி, "தந்நிலையை தாழ்த்தி, கோலம் மாற்றி இன்றிலிருந்து எட்டாம் நாள் என் ஆலயத்திற்கு வா, உன் பிணி தீர்க்கிறேன்" என்றாள்.
அவ்வாறே, பண்ணையாரும், தனது வழக்கமான கோலத்தை மாற்றி ஊசி பாசி மணிகள் விற்கும் குறவர் போல வேடமிட்டு, எட்டு நாள் உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டார், நடக்க முடியாமல் அன்னையின் சந்ததிக்கு நடந்து வந்தார். அம்மன் இவருக்கு மட்டும் சிரித்தபடி காட்சி கொடுத்தாள். சந்நதியிலேயே மெய்மறந்து அம்மா, அம்மா என்று கத்தினார். அச்சமயம் ஒரு குரங்கு வந்து, அவரது கையில் வாழைப்பழத்தை போட்டது. அப்பழத்தை உண்ட மறுகனமே பண்ணையார் உடல்நிலை குணமானது. தவறை உணர்ந்து அம்மனிடம் மன்னிப்பு வேண்டினார். அம்மனின் அந்த திருவிளையாடல் எல்லா இடமும் பரவியது, நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தனர்.
பண்ணையார் வேடமிட்டு வந்ததால் தான் அன்னை தரிசனம் கொடுத்து அருள்புரிந்ததாக நம்பினர். எனவே அனைவரும் தங்கள் வேண்டுதலை அன்னை நிறைவேற்ற வேஷம் கட்டி வர ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு பக்தர்கள் விரதமிருந்து வேஷம் கட்டும் வழக்கம் தொடங்கியது.
தந்நிலையைத் தாழ்த்தி வேஷமிட்டு வருகின்ற அடியவர்களுக்கு அவர்கள் வாழ்வின் நிலையை உயர்த்துகிறாள் அன்னை முத்தாரம்மன். பண்ணையார் வம்சவழியில் வந்த சேது என்பவரும் மற்றும் அவரது நண்பரும் சுமார் 50 வருடங்களுக்கு முன் தசரா விழாவை இங்கு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இப்பகுதி மக்கள் வெளியூர்களில் குடியேறினாலும், அங்கேயும் அம்மனுக்கு ஆலயங்கள் குலசேகரப்பட்டினம் பிடிமண் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை நிறுவியவர் இங்கேயே ஜீவசமாதி அடைந்துள்ளார் என்கிறார்கள்.
முத்தாரம்மன் கோவில் விக்ரகங்கள் 1934ஆம் வருடம் அய்யாத்துரை கவிராயர் என்பவர் பீடம் அமைத்து அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
கோயிலில் மூலவராக ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகின்றனர். இக்கோயிலில் நவராத்திரியைத் தொடர்ந்து நடைபெறும் தசரா, மிக முக்கிய விழாவாகும். தசரா என்பது பத்தாவது இரவு என்று பொருள்படும். விழாவின் பத்தாவது நாள் இரவில் முத்தாரம்மன் அசுரனை வதம் செய்கின்ற முக்கிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அம்மனுக்கு வேடம் கட்ட எண்ணுபவர்கள் முதல் 3 ஆண்டுகள் தொடர்ந்து தசரா விழாவிற்கு வந்திருந்து அம்மனைத் தரிசிக்க வேண்டும். பின்னர் அம்மன் சந்நதியில் பூ கட்டிப் போட்டு பார்த்து, அதில் சிகப்பு நிற பூ வந்தால் அம்மன் உத்தரவு கொடுத்ததாக நினைத்து வேடம் கட்டுவார்கள். ஆனால் பூசாரி சொல்லும் வேடத்தையே கட்ட வேண்டும். காளி, சுடலை, ஆஞ்சநேயர் என வேடம் கட்டுபவர்கள், காப்புகட்டி 41 நாட்கள் விரதமும், மற்ற வேடமிடுபவர்கள் 10 நாட்கள் விரதமும் இருப்பார்கள். காளி வேடம் கட்டுவதற்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இக்கோயிலின் தனிச்சிறப்பாக முத்தாரம்மன் உடனுறை சிவபெருமான் ஞானமூர்த்தீஸ்வரராக, உருவம் கொண்டு காட்சியளிப்பதாகும். மேலும் சிவனும், சக்தி சொரூபமான முத்தாரம்மனும் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றனர். ஒரே நேரத்தில் ஞானமூர்த்தீஸ்வரருக்கும், முத்தாரம்மனுக்கும் பூஜை நடக்கிறது. இக்கோயிலின் தல விருட்சமாக வேப்ப மரம் உள்ளது.
இத்திருக்கோயில் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 16 கி.மீ தொலைவில் உள்ளது.