திருவிளக்கு வழிபாட்டு முறைகள் மற்றும் தீபாராதனையின் சிறப்புகள் - Thiruvilakku Rituals and Highlights of Deeparathana

uma 48 26/9/2024
 திருவிளக்கு வழிபாட்டு முறைகள் மற்றும் தீபாராதனையின் சிறப்புகள் - Thiruvilakku Rituals and Highlights of Deeparathana

வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது வீட்டில் விளக்கேற்றி வழிபடும் முறைகள் மற்றும் தீபாராதனையின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.

தீப வழிபாட்டு முறைகள்

அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.

கொல்லைக் கதவை சாத்திவிட்டுத் தெருக்கதவை திறந்து வைத்து விட்டுத்தான் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.

எவர்சில்வர் விளக்குகளை எப்பொழுதும் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

குத்து விளக்கினைத் திங்கள், வியாழன் மாலை வேளையில் தேய்த்துச் சுத்தம் செய்ய வேண்டும்.

மாலையில் வீட்டில் பூஜை அறையில் அகல் விளக்கு ஏற்றி போதுமான எண்ணெய் விட்டு விளக்கு ஸ்தோத்திரம் கூற வேண்டும். வீட்டில் உள்ள குழந்தைகளையும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் வாழ்வில் எல்லாவித துன்பங்களும் நீங்கும்.

தீபம் எரிந்து கொண்டிருக்கும் பொழுது

விளக்கை வாயில் ஊதி அணைப்பதோ / திரியைக் கையால் நசுக்கி அணைப்பதோ கூடாது. மெல்லத் திரியைப் பின்னுக்கு இழுத்து அது எண்ணெய்க்குள் அமிழ்ந்து சமனப்படுமாறு செய்ய வேண்டும். இப்படிச் செய்யுமுன் இரண்டு சொட்டுப் பாலை தீபத்தின் இருபுறமும் வைக்க வேண்டும்.

எரியும் விளக்கு, கற்பூரம், மெழுகுவர்த்தி ஆகியவற்றை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. ஊதுபத்தியைக் கொளுத்தினால் அது எரியும் பொழுது அதை அணைக்க வாயால் ஊதக் கூடாது.

திருவிளக்கு ஏற்றும் பொழுது இரு தட்டில் அரிசியை நிரப்பி அதன் மேல் விளக்கினை வைத்து மஞ்சள், குங்குமம் பூ, வைத்து தீபம் ஏற்றித் தீப வழிபாடு செய்தல் சிறப்பு. நீர் நிரம்பிய பாத்திரத்தைப் பூஜை அறையில் வைப்பது சிறப்பு.

தாமரை நூல் விளக்கேற்றி வழிபட்டால் அதன் ஆன்மீக சக்தி ஆறுமணி நேரம் நீடிக்கும். பசுநெய் தீபம் ஏற்றினால் அத்தீபம் குளிர்ந்த பின் 12 மணி நேரம் அதன் ஆன்மீக சக்தி நீடிக்கும்.

வீட்டில் நறுமணம் தரும் ஊதுபத்திகளை ஏற்றி வைத்தால் தீய எண்ணங்கள், தோஷங்கள், திருஷ்டி, காற்று, கருப்பு ஆகியவை வீட்டை நெருங்காது. இரண்டு ஊதுபத்தி ஏற்றி வைத்தால் அதன் ஆன்மீக சக்தி மூன்று மணி நேரம் வீட்டில் நிலவும்.

காலையில் விளக்கேற்றியதும் வாசல் நிலையின் மேல் சுத்தமான குங்குமத்தைத் (மஞ்சள் குங்குமம்) தினமும் இடுவது சிறப்பு. இதனால் வீட்டிற்குள் எந்த துர்தேவதைகளும் நுழைய முடியாது.

காலையில் குளித்துவிட்டுப் பூஜை அறையில் குத்துவிளக்கின் 5 முகங்களையும் ஏற்றிக் கடவுள் வழிபாடு செய்வது எல்லா சுகங்களையும் தரும்.

பெண்கள் மாலையில் வீட்டில் விளக்கேற்றி வைத்த உடன் வீட்டை விட்டு வெளிக் கிளம்பிச் செல்லக் கூடாது.

தீபாராதனையின் சிறப்புகள்:

இறைவனுக்கு செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் ஒன்றுதான் தீபாராதனை. தீபாராதனைக்காலத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் தீபங்களில் அமர்ந்து இறைவனை தரிசித்து செல்வதாக ஐதீகம்.

தீப வழிபாட்டில் பல வகை தீப வரிசைகள் காட்டப்படுகின்றன.

நட்சத்திரம் தீபம் காட்டும் போது நட்சத்திரங்கள் இறைவனை வழிபாடு செய்கின்றன. ஒன்பது தீபங்கள் நவசக்திகளும், ஏழு தீபங்கள் சப்த மார்களும் வழிபாடு செய்கின்றன.

பஞ்ச தீபங்கள் என்பது நிவர்த்தி கலை, பிரதிட்டா கலை, வித்யகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளை குறிக்கின்றன. மூன்று தீபங்கள் சூரியன், சந்திரன், அக்னி என்ற ஒளிகளையும், ஒற்றை தீபம் சரஸ்வதியையும் குறிக்கிறது. இறுதியாக கும்ப தீபம் காட்டுவது சதாசிவ தத்துவத்தை குறிக்கிறது.

அதேபோல் தீபாராதனை காட்டும் போது மூன்று முறை காட்டுவார்கள். முதன் முறை உலக நலத்திற்காகவும், இரண்டாவது முறை ஊரில் உள்ள மக்களின் நலத்திற்காகவும், மூன்றாவது முறை ஐம்பூதங்களால் இடையூரின்றி நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவும் காட்டப்படுகிறது.