குழந்தைகளைக் கல்வியில் சிறந்தவர்களாக விளங்கச் செய்யும் வித்யாரம்பம் - Vidyarambam makes children excel academically

uma 94 03/10/2024
 குழந்தைகளைக் கல்வியில் சிறந்தவர்களாக விளங்கச் செய்யும் வித்யாரம்பம் - Vidyarambam makes children excel academically

சரஸ்வதி தேவி அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வமாகக் கருதப்படுகிறார். எனவே சரஸ்வதி தேவிக்கு வித்யாரம்பம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த விழா பொதுவாக நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி அன்று கொண்டாடப்படுகிறது. அன்னை துர்க்கை மகிஷாசுரமர்த்தினியாக முழு மகிழ்ச்சியோடும் வெற்றியோடும் காணக்கூடிய நாள் தான் விஜயதசமி.

விஜயதசமி நாளில் அம்பாளை வழிபட்டால் நாம் தொட்டது அனைத்திலும் வெற்றி கிடைக்கப் பெறுவோம்.

வித்யாரம்பம் என்றால் என்ன?

 வித்யா என்றால் "அறிவு", ஆரம்பம் என்றால் "துவக்கம்" . எனவே வித்யாரம்பம் என்பது அறிவாற்றலின் தொடக்கமாகும். வித்யாரம்பம் வழிபாடானது பெரும்பாலும் கோயில்களிலும் மற்றும் வீடுகளிலும் நடத்தப்படுகிறது. மக்கள் இந்த நாளில் கோயில்களுக்குச் சென்று தங்கள் குழந்தைகளை கல்வி கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கம் .

 வித்யாரம்பம் என்பது இந்துக்களின் முக்கிய சடங்காகும். கேரளா, தமிழ்நாடு மற்றும் கடலோர கர்நாடகா போன்ற இடங்களில் விஜயதசமி தினத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குழந்தைகளுக்கு இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புறக் கலைகள் போன்றவை முறையாகக் கற்பிக்கப்படுகின்றன. இது குழந்தைகளுக்கு எழுத்துக்களைக் கற்பிக்கும் முக்கியமான நிகழ்வாகும். தமிழ்நாட்டில் முதல் எழுத்து என்று அழைக்கப்படுகிறது. ஒடிசாவில் காதி சுவான் என்று அழைக்கப்படுகிறது. அங்கு விநாயக சதுர்த்தி மற்றும் வசந்த பஞ்சமி அன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியின் முக்கிய தெய்வம் துர்க்கை. பெண் சக்தியின் துணையுடன் நடைபெற்ற வதத்தின் இறுதி நாளின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வே விஜயதசமி. கல்வி மற்றும் அறிவில் சிறந்து விளங்கவும், புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்கவும் ஏற்ற நாள்.

ஆட்சி, அதிகாரம், நாடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்த பாண்டவர்கள், 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு மறைந்து வாழ்ந்து பின், விஜயதசமி அன்று தங்கள் ஆயுதங்கள் மற்றும் இழந்த பலத்தை பெற்றனர் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கல்வியாக இருந்தாலும் சரி, கலையாக இருந்தாலும் சரி, அது விஜயதசமி அன்று தொடங்கினால் வெற்றிகரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படும் நாள் அவர்கள் வாழ்வில் மிக முக்கியமான நாள். அவர்களின் ஆரம்ப நிலை கல்வியறிவு அவர்களின் வாழ்நாள் முழுவதுமான அறிவாற்றலுக்கான ஊன்றுகோல் . நவராத்திரியில் முப்பெருந்தேவியருக்கான பூஜைக்குப் பிறகு 10வது நாளான விஜயதசமி அன்று தொடங்கும் எந்தச் செயலும் பெரும் வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை. அன்று குழந்தைகள் கற்கத் தொடங்கும் கலையில் ஒன்றிப்போவார்கள். விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது. இதனை அக்ஷரபியாசம் என்றும் கூறுவர். இதில் ஆசிரியரின் பங்கும் மிக முக்கியமானது. அறிவைப் போதிக்கும் குருவைக் கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

வீட்டிலேயே வித்யாரம்பம் எவ்வாறு செய்யலாம்

சரஸ்வதி கல்வி அறிவைக் கொடுப்பவள், ஆனால் புத்தியை தெளிவுபடுத்துபவர்

புத பகவான். எனவே அன்னை சரஸ்வதிக்கு உகந்த இந்த நாளில் புதன் ஹோரையில் இந்த வழிபாடு செய்வது சிறந்தது. இந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்குப் பிறகும், இரவு 9 மணிக்கு முன்பும் செய்யலாம்.

இந்த வழிபாட்டை எப்போதும் செய்வது போல், பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகியவற்றை தயாராக வைக்க வேண்டும். அதேபோல் சுவாமியின் படங்களை துடைத்து மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து மலர் அலங்காரம் செய்து பூஜை அறையில் தீபம் ஏற்றி தயார் நிலையில் வைக்க வேண்டும்.

குழந்தைகளின் கல்வியைத் தொடங்கப் போகும் இனிமையான நாளாக இருப்பதால் ஏதாவது ஒரு இனிப்பு வகை நெய்வேத்தியம் செய்ய வேண்டும். பின், ஒரு பெரிய தாம்பாளத்தின் மீது நெல்மணிகளைப் பரப்ப வேண்டும். நெல்மணிகள் இல்லையென்றால் பச்சரிசியைப் பயன்படுத்தலாம்.

குழந்தைகளை அப்பா, தாத்தா அல்லது தாய்மாமா மடியில் அமரவைத்து அந்த பச்சரிசியில் பிள்ளையார் சூழியை எழுதிய பிறகு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுத வைக்க வேண்டும். அதன் பிறகு தங்கள் குலதெய்வத்தின் பெயரை எழுத வேண்டும். குலதெய்வத்தின் பெயர் பெரியதாக இருந்தால், முதல் எழுத்தை மட்டும் எழுதலாம். இதையெல்லாம் எழுதி முடித்த பிறகு அ என்ற வார்த்தையை எழுதப் வைக்க வேண்டும். இன்னும் சிலர் தங்க மோதிரம் அல்லது தங்க ஊசியால் குழந்தையின் நாவில் எழுதுவார்கள். அடுத்ததாக ஸ்லேட், நோட்டு, பென்சில் வைத்தும் எழுத வைக்கலாம். நெல்மணியில் எழுதிவிட்டு முதல் எழுத்தை எழுதி குழந்தைகளின் படிப்பை இன்றே தொடங்கலாம். விஜயதசமி நாளில் இதைச் செய்தால், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

விஜயதசமி நன்னாளில் சரஸ்வதி தேவியை வணங்கி, நம் குழந்தைகளை கல்வியில் சிறந்தவர்களாக விளங்கச் செய்வோம்.