சிவபக்தியால் தெய்வப் பதவி அடைந்து, சிவபெருமானின் சொத்துக்களைக் காக்கும் சண்டிகேஸ்வரர் - Chandikeswarar who attains deity status and protects the properties of Lord Shiva

uma 107 25/9/2024
 சிவபக்தியால் தெய்வப் பதவி அடைந்து, சிவபெருமானின் சொத்துக்களைக் காக்கும் சண்டிகேஸ்வரர் - Chandikeswarar who attains deity status and protects the properties of Lord Shiva

வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது சிவபக்தியால் தெய்வப்பதவி அடைந்த சண்டேசுவர நாயனார் எனப்படும் சண்டிகேஸ்வரரைப் பற்றி பார்க்கலாம்.

சிவபெருமானின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பதவியின் பெயர் தான் சண்டிகேஸ்வரர். சிவனை வழிபடுபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் இருக்க முடியாது. பிரகாரத்தைச் சுற்றி வரும்போது சிவபெருமானுக்கு இடதுபுறத்தில் அமர்ந்திருப்பார். நம்மில் பெரும்பாலானோருக்கு சண்டிகேஸ்வரர் என்று சொல்வதை விட, கைகளைத் தட்டி வழிபடும் தெய்வம் என்று தான் நினைவுக்கு வரும். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார்.

சண்டிகேசுவரர் சைவ சமய பஞ்ச மூர்த்திகளில் ஒருவர் மற்றும் சிவபெருமானின் சொத்துகளைக் காவல் புரியும் ஆலயக் கணக்கராக இருக்கிறார். சிவபெருமானின் கருவறையின் இடதுபுறத்தில் இவரது சன்னதி அமைந்திருக்கும். பஞ்ச மூர்த்தி ஊர்வலத்தின் போது, அவரது சிலையும் கோவில்களில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பஞ்ச மூர்த்திகளின் உலாவின் போது இறுதியாக சண்டிகேஸ்வரர் வலம் வருகிறார். சிவபெருமானின் ஆயுதமான மழுவை, சண்டிகேசுவரரும் ஆயுதமாக கொண்டு காட்சியளிக்கிறார்.

சிவபெருமான் அளிக்கும் இந்த சண்டிகேசுவரர் பதவி ஒவ்வொரு யுகத்திற்கும் வெவ்வேறு நபர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு யுகத்திற்கும் சண்டிகேசுவரர்கள் இருப்பதாக சிவாகம புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சிவாகம புராணங்களின்படி,

கிருதா யுகத்தில் – நான்கு முகம் கொண்ட சண்டிகேசுவரர்

திரேதா யுகத்தில் – மூன்று முகம் கொண்ட சண்டிகேசுவரர்

துவாபர யுகத்தில் – இரண்டு முகம் கொண்ட சண்டிகேசுவரர்

கலியுகத்தில் – ஒரு முகம் கொண்ட சண்டிகேசுவரர்

சதுர்முக சண்டிகேஸ்வரர்

படைப்பின் கடவுளான பிரம்மா சண்டிகேஸ்வரராக இருந்துள்ளார். இவர் சதுர்முக சண்டீசர் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு நான்கு முகங்கள்.

யம சண்டிகேசுவரர்

தர்மத்தின் கடவுளான யமதேவரும் சண்டிகேசுவரர் பதவியில் இருந்துள்ளார். தமிழகத்தில் சில கோவில்களில் சண்டிகேசுவரராக யமதேவன் இருக்கிறார். திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவில், திருவாரூர் போன்ற சில தலங்களில் யமன் சண்டிகேசுவரராக இருக்கிறார். இவர் யம சண்டிகேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.

வரலாறு

பெரிய புராணத்தின் படி, சண்டிகேஸ்வரரின் இயற்பெயர் விசாரசர்மன். சோழநாட்டின் மணியாற்றின் கரையில் திருசேய்ஞலூர் எனும் ஊரில் எச்சதத்தன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் விசாரசர்மன். சிறுவயதிலேயே சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர். மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மாடுகளை அடித்ததைக் கண்டு வருந்தி தானே மாடுகளை மேய்க்கும் வேலையைத் தொடர்ந்தார்.

சிறுவயதிலேயே சிவ பக்தி மேலோங்கியதால், மாடு மேய்க்கும் பணியின் இடையில் மணலால் சிவலிங்கம் செய்து கடும் தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பலத்தாலும், மேய்ப்பன் மீது கொண்ட அதீத அன்பாலும், விசாரசர்மன் மேய்த்த பசுக்கள் தானாகப் பால் சுரந்து அவர் உருவாக்கிய மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தன. இந்த நிகழ்வு தினமும் தொடர்ந்தது. இச்செய்தி பசுவின் உரிமையாளருக்கு எட்டியதும், விசாரசர்மனின் தந்தை எச்சதத்தனிடம் சென்று, “தங்கள் மகன் மணல் லிங்கம் அமைத்து தியானம் செய்கிறான். அதற்கு என் பசுக்களால் அபிஷேகம் செய்கிறான். இதைக் கண்டித்துவிடுங்கள்” என்று முறையிட்டான்.

இதை விசாரிக்க விரும்பிய எச்சதத்தன் ஒரு நாள் மறைவாக நின்று விசாரசர்மனை கண்காணித்தார். அப்போது விசாரசர்மன் மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருக்க, பசுக்கள் தாமாக லிங்கத்தின் மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்தன. இதைக் கண்டு கோபமடைந்த எச்சதத்தன், தனது காலால் மணல் லிங்கத்தை உடைத்தார்.

விசாரசர்மன் தவம் களைந்து எழுந்து தந்தையின் காலை ஒரு குச்சியால் அடித்தான். ஆனால் அந்த குச்சி மழுவாக மாறி தந்தையின் காலை வெட்டியது. அப்போது தோன்றிய சிவபெருமான், விசாரசர்மனின் பக்தியை கண்டு நெகிழ்ந்து தந்தையின் பாதங்களை சரி செய்தார். பின்பு “தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்று சிவபெருமான் வரமளித்து தாம் சூடியிருந்த கொன்றை மலரால் அலங்கரிக்கப்பட்ட மாலையை விசாரசருமருக்கு சூட்டினார்.

அதாவது அன்று முதல் சிவனுக்கு படைக்கப்படும் உணவும், பூஜைப் பொருட்களைக் காவல் காக்கும் பதவியான சண்டீசன் எனும் பதவி பெறுவாய் என அருளினார். இதன் பிறகு, சண்டிகேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து சிவ கணங்களை, காத்து வருகிறார். சிவலாயங்களுக்கு வரும் பக்தர்களின் வருகையையும், அவர்களின் வேண்டுதல்களையும் ஆழ்ந்த தியானத்தில் இருந்தவாறே கவனித்து, சிவபெருமானுக்கு சமர்பிக்கிறார்.

எனவே சிவனை வழிபடும் பக்தர்கள் அவரிடம் வந்து மிகவும் மென்மையாகக் கைகளைத் துடைத்துவிட்டு தாம் எந்த சிவன் சொத்தையும் எடுத்து செல்லவில்லை என கைகளைத் துடைத்து வழிபட வேண்டும். அவருடைய அருளையும் ஆசீர்வாதத்தையும் தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை என கைகளை விரித்து வணங்க வேண்டும். பிரசாதத்தை கொண்டு செல்ல அவரிடம் அனுமதி பெற வேண்டும்.

கைகளை துடைத்துக் காட்டும் இந்த வழக்கமே காலப்போக்கில் கைதட்டும் பழக்கமாக மாறிவிட்டது. எனவே சண்டிகேஸ்வரரின் தவத்தைக் கலைக்க கைகளைத் தட்டாமல் மெதுவாகக் கைகளைத் துடைத்து வழிபடுவது பலன் தரும்.

வரலாற்றுச் சான்று

விசாரசருமருக்கு சண்டீசர் பதவியை சூட்டுகின்ற சிவபெருமானின் சிற்பம் கங்கை கொண்ட சோழேசுவரம் ஆலயத்தில் உள்ளது. இதில் சண்டிகேஸ்வரர் கீழே அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு உமையாள் சமேதராக இருக்கும் சிவபெருமான் தான் அணிந்திருந்த கொன்றை மாலையை சூட்டுவது போல செதுக்கப்பட்டுள்ளன. கொன்றை மாலை சிவபெருமானுக்கு உரியதாகும்.

வழிபாடு

தை மாதம் உத்திரம் நட்சத்திர நாள் இவருக்கு உகந்த நாளாகும். சண்டிகேஸ்வரருக்கு புதிய வஸ்திரம் வைத்து வழிபட நம் தலைமுறைக்கே வஸ்திர பஞ்சம் இருக்காது, வறுமை இல்லா வாழ்வு அமையும். காரியத் தடைகள் அகலவும் இவருக்கு புதிய வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். இதுவே காலப்போக்கில் நூலைப் பிரித்து போடும் வழக்கமாயிற்று.