தைப்பூசம் என்பது முருகப் பெருமானின் மிக முக்கியமான வழிபாடாகும். தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச நாளில், அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகன் மற்றும் சிவன் கோயில்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம், காவடி மற்றும் பாத யாத்திரை மேற்கொண்டு முருகன் கோயில்களுக்கு வருகிறார்கள்.
முருகன் கோயிலுக்குச் செல்லும்போது, மக்கள் காவடியை சுமந்து நடனமாடி மகிழ்ச்சியுடன் வருகிறார்கள். அவர்கள் இறுதியாக கோயிலை அடையும் போது, அவர்களின் மனதில் உள்ள சுமைகள் குறைந்து புத்துணர்ச்சி அடைகிறார்கள். காவடி தண்டில் இருபுறமும் கட்டப்பட்ட பொருட்களைக் கொண்டு காவடியின் பெயர் என்னவென்று அறியப்படுகிறது.
காவடியின் வகைகள்:
காவடியில் கட்டப்படும் பொருள் பால் என்றால், அது 'பால் காவடி' என்றும், பழங்கள் என்றால் அது 'பழக்காவடி' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, சர்க்கரைக் காவடி, சர்ப்பக் காவடி, மச்ச காவடி என பல வகையான காவடிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
இளநீர் காவடி:
இந்த காவடி மட்டுமே பழங்கால தோற்றத்தைக் கொண்டுள்ளது. கம்பு அல்லது பனை மட்டைகளைத் தண்டு போல் கட்டி, காவடியின் இருபுறமும் இளநீர் காய்கள் கட்டிக் கொண்டு, எந்த இசைக்கருவிகளும் இல்லாமல், 'வேல் வேல்', 'வேல் வேல்' என்று கூறி எளிமையான முறையில் எடுத்துச் செல்லப்படுகிறது. காவடியில் கொண்டு வரப்படும் இளநீர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுகிறது.
மச்ச காவடி:
காவடியில் மீன்களைக் கட்டி எடுப்பது மச்ச காவடி என்று அழைக்கப்படுகிறது. மீனை மூன்று இடங்களில் லேசாக வெட்டி, உப்பு போட்டு, மஞ்சள் கலந்த நீரில் ஒரு மண் பானையில் வைத்து, அதை காவடி தண்டில் கட்டுவார்கள். காவடியை எடுத்த பிறகு, அவர்கள் கோயில் குளத்தில் இடுப்பளவு தண்ணீரில் நின்று, காவடியில் கட்டப்பட்ட மண் பானையை தங்கள் தலைக்கு மேலே தூக்கி மெதுவாக ஆட்டுவர், அப்போது பானையில் உள்ள மீன்கள் துள்ளி தண்ணீரில் குதிக்கும்.
சர்ப்பக் காவடி :
நல்ல பாம்பை காவடியில் கட்டி அதை காவடியாக சுமப்பது சர்ப்பக் காவடி என்று அழைக்கப்படுகிறது. சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் கடுமையான விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். அவர்கள் ஊருக்கு வெளியே காட்டில் தங்கி ஆறு நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருந்து இறைவனை வேண்டிக்கொள்வார்கள்.
ஆறாவது நாளில், இறைவன் அவர்களின் கனவில் தோன்றி, பாம்பை ஒரு இடத்திற்கு அழைத்து வரச் சொல்வாராம். விரதம் இருப்பவர் மேள தாளத்துடன் அந்த இடத்திற்குச் சென்று, பாம்பை ஒரு மண் பானையில் போட்டு (பாம்பு தானாகவே வெளியே வந்து மண் பானைக்குள் நுழையும் என்று கூறப்படுகிறது) அதை காவடியில் கட்டுகிறார்கள். காவடி எடுத்து பின்னர் முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு மலைப்பாங்கான அல்லது காட்டுப் பகுதியில் மண் பானையைத் திறக்கிறார்கள். பாம்பு வெளியேறி விடுமாம்.
அலகு குத்துதல் :
பக்தர்கள் நாக்கு, கன்னம், கைகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய வேல் வடிவ ஊசியால் குத்தி கோயிலுக்கு வருவது. சிலர் பக்தர்களின் முதுகில் கொக்கிகள் மூலம் இணைக்கப்பட்ட சிறிய தேர் போன்ற வண்டியை இழுத்து வருகிறார்கள்.
பறவைக் காவடி :
அலகு குத்திய நபர் பறவை போல ஒரு வாகனத்தில் தொங்கியவாறு அழைத்து கொண்டு வருவார்கள்.
பால் காவடி :
குடங்களில் பால் நிரப்பி பக்தர்களால் காவடியாக ஊர்வலம் எடுத்து வரப்படும்.
மயில் காவடி :
மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட காவடியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.
காவடி பிறந்த கதை :
கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான முருகனுக்கு, "அஞ்சு (அச்சம்) முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் ஒரு பழமொழி உண்டு". காவடி எடுப்பது ஆறுமுகனுக்கு செய்யப்படும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஒன்றாகும். காவடி எடுப்பதற்கு ஒரு புராணக்கதை இருக்கிறது. மிகவும் பக்தி சிறத்தையுள்ள இடும்பன் சூரபத்மனுக்கு போர்க்கலையை கற்பித்து வந்தார். ஆனால் சூரபத்மன், பல கொடுமைகளைச் செய்வதறிந்து, அவரை விட்டு விலகி அகத்தியரிடம் சேந்தார். அகத்தியர் பொதிகை மலையில் தங்கிய சமயம், அவர் தனது சீடரான இடும்பனை அழைத்தார். தனது வழிபாட்டிற்காக, கைலாயத்தில் சிவசக்தியின் வடிவமான, கந்தனுக்குரிய சிவகிரி மற்றும் சக்திகிரி என்ற இரண்டு சிகரங்களைக் கொண்டுவரச் சொன்னார். அகஸ்தியரின் கட்டளைப்படி இடும்பன் கைலாயத்திற்குச் சென்றார். அவர் குறிப்பிட்ட சிவகிரி மற்றும் சக்திகிரி இரண்டையும் எடுத்துக்கொண்டு காவடி போல தோளில் தொங்கவிட்டு பயணிக்கத் தொடங்கினார். ஆனால் முருகப் பெருமானுக்கு வேறு ஒரு விருப்பம் இருந்தது. இரண்டு சிகரங்களும் திருவாவினன்குடியிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவர் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார்.
பாதை தெரியாமல் இடும்பன் தயங்கியபோது, வேலவன் ஒரு அரச வேடமிட்டு குதிரையில் வந்தார். இடும்பனை நோக்கி, திருவாவினன்குடிக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து, பின்னர் தனது பயணத்தைத் தொடருமாறு கூறினார் முருகப்பெருமான். அரச கட்டளை என ஏற்றுக்கொண்ட இடும்பன், இரண்டு சிகரங்களையும் கீழிறக்கி வைத்து சிறிது நேரம் ஓய்வெடுத்தார். புறப்படும் நேரம் வந்ததும், தான் இறக்கிய சிகரங்களைத் தூக்க முயன்றார். ஆனால் அவை இரண்டும் அசையவில்லை. தனது குருவின் மீதான தனது பக்திக்கு களங்கம் ஏற்படுமோ என்று அவர் கவலைப்பட்டார். பின்னர் சிவகிரி உச்சியில் ஆண்டிக் கோலத்தில் ஒரு சிறுவன் நிற்பதைக் கண்டார். சிறுவனை சிகரத்திலிருந்து கீழே இறங்குமாறுக் கூறினார். ஆனால் சிறுவன் அந்த சிகரம் தன்னுடையது என்று கூறி கீழே இறங்க மறுத்தான். இடும்பன் எவ்வளவு வேண்டியும், சிறுவன் மறுத்துவிட்டான்.
இடும்பன் கோபத்தில் சிறுவனைத் தாக்க முயன்றான். ஆனால் அடுத்த கணமே வேரற்ற மரம் போல தரையில் விழுந்தான். சீடன் வராததைக் கண்ட அகஸ்தியர் ஞானத்தின் மூலம் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்டார். தனது சீடனைப் பாதுகாக்க முருகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்தார். குமரனும் இடும்பனின் பக்தியைப் பாராட்டி அவருக்கு ஆசி வழங்கினார். அவரை தனது காவல் தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டார். இடும்பன் போல காவடி கொண்டு வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாகவும் அவர் வரமருளினார், இதன் பிறகுதான் முருகப் பெருமானுக்கு காவடி கொண்டு வரும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
பழனி மலைப்பாதையின் ஆரம்பத்திலேயே ஒரு தனி பாதை செல்கிறது. நீங்கள் அங்கு சென்றால், இடும்பன் ஒரு காவடியை ஏந்திச் செல்லும் சிற்பத்தையும், அகஸ்தியரால் வழிபடப்பட்ட சிவலிங்கத்தையும், வடிவேலன் சன்னதியையும் காண்பீர்கள். பக்தர்களை ஆசீர்வதிக்க முருகப்பெருமான் அர்ச்சாவதாரியாகத் தோன்றியுள்ளார். மனம் என்ற குகையில் குகனை தினமும் வணங்கி அவருக்கு சேவை செய்து மகிழ்ச்சி அடைவோம்.