ஐஸ்வர்யம் பெருக வலம்புரிச் சங்கை வீட்டில் இவ்வாறு வழிபடுங்கள் !! | Worship Valampuri Sangu in this way !!

uma 95 26/6/2024
 ஐஸ்வர்யம் பெருக வலம்புரிச் சங்கை வீட்டில் இவ்வாறு வழிபடுங்கள் !!  |   Worship  Valampuri Sangu in this way !!

ஐஸ்வர்யம் பெருக வலம்புரிச் சங்கை வீட்டில் இவ்வாறு வழிபடுங்கள் !!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த சமயம் பல தெய்வீகப் பொருட்கள் வெளிப்பட்டன. அவைகளில் வலம்புரிச் சங்கும் ஒன்று. வலம்புரி சங்கு உள்ள இடம் மகாலட்சுமியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. 

நம் வீட்டின் பூஜை அறையில் படங்கள் மட்டுமின்றி, வீட்டிற்குள் வரும் தீய அதிர்வுகளை கட்டுப்படுத்த சில தெய்வீக பொருட்களையும் வைத்து வழிபடுவது வழக்கம். அவ்வகையில் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். 

மேலும் வீட்டில் அலங்காரமாக வைக்கப்படும் வலம்புரி சங்கு குபேரனின் அருளை வழங்குகிறது. சுவாமிக்கு வலம்புரி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தால் தோஷங்கள் விலகும். கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை இறைவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. 108 சங்கு அபிஷேக பூஜையின் நடுவில் குபேரன் வலம்புரி சங்கு வடிவில் தோன்றியதாக ஐதீகம். 

நம் வீட்டில் வலம்புரிச் சங்கில் தண்ணீர் நிரப்பி அதில் துளசி இலைகளைப் போட்டு அந்தத் தீர்த்தத்தை வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் வீட்டில் தெளித்து வந்தால் கண்ணுக்குத் தெரியாத வாஸ்து தோஷம் நீங்கி நன்மைகள் உண்டாகும். இறைச்சி உண்ணும் நாளிலும், பெண்களின் மாதவிடாய் நாட்களிலும் வலம்புரி சங்கைத் தொடக்கூடாது. 

கிண்ணத்தை வெறும் தரையில் வைக்க வேண்டாம். சங்கில் சந்தனம், குங்குமம் இட்டு பித்தளை அல்லது வெள்ளி தாம்பாளத்தில் வைக்க வேண்டும். வலம்புரி சங்கு வழிபடும் வீடுகளில் பிரம்மஹத்தி போன்ற அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். 

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் கிழமை தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நடக்கும். சுத்தமாகவும், முறையாகவும் வழிபடப்படும் வலம்புரிச் சங்கு கொண்ட வீடு, தீய சக்திகளாலும், சூனியத்தாலும் பாதிக்கப்படாது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியிலும் வலம்புரிச் சங்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து வர கடன் தொல்லை நீங்கும். வீடு கட்டுபவர்கள் நிலை வாசலில் கை அளவுள்ள வலம்புரி சங்கு வைத்து வாஸ்து விதிப்படி சங்கு பதித்தால், வீடு மூன்று தலைமுறைக்கும் செல்வச் செழிப்புடன் இருக்கும் என்பது நம்பிக்கை. 

மேலும், உடலைத் தாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் சங்கிற்கு உண்டு என்று நம் முன்னோர்கள் நம்பினர். அதனால்தான் தீர்த்தம் சங்கு மூலம் வழங்குவது சிறப்பு என்று கருதப்பட்டது. அதனால்தான் நம் வீடுகளில் அக்காலத்தில் குழந்தைகளுக்கு மருந்து, பால் போன்றவற்றை சங்கில் தருவது வழக்கம். 


நாமும் இல்லங்களில் இவ்வாறு வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோம்.