சிட்னி முருகன் கோவில், ஆஸ்திரேலியா | Sydney Murugan Temple in Australia

uma 227 02/7/2024
 சிட்னி முருகன் கோவில், ஆஸ்திரேலியா |  Sydney Murugan Temple in Australia

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி முருகன் கோவில்

சிட்னி முருகன் கோவில் , ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் தலைநகரான சிட்னிக்கு மேற்கே 25 கிமீ தொலைவில் உள்ள மேய்சு மலையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள முருகன் சிலை மகாபலிபுரம் சிற்பி ஒருவரால் ஆகம விதிகளின்படி மிக நுட்பமாக செதுக்கப்பட்டது. 

வரலாறு 

சிட்னியில் முதன் முதலில் முருக வழிபாட்டை ஆரம்பித்தவர் திரு.சி. தணிகைஸ்கந்தகுமார். 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து முருகன் சிலையைக் கொண்டு வந்து தனது இல்லத்திலும் பின்னர் ஸ்ராத்பீல்ட் பெண்கள் உயர்நிலைப் பாடசாலையிலும் வைத்து வழிபட்டார். 1985 "சிட்னி சைவ மன்றம்" R. வடிவேலு என்பவர் தலைமையில் தொடங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டில்,  சாலைப் போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து ஒரு காணிக்கையைச் சைவமன்றம் வாங்கியது.  

1994 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.முதலில் தமிழ்க் கலாச்சார மண்டபம் கட்டப்பட்டு 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்தி விநாயகர், சிதம்பரேஸ்வரர் மற்றும் சிவகாமசுந்தரி உற்சவமூர்த்திகளுடன் முருகன் சிலை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1997 ஆம் ஆண்டு கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 1999 ஆம் ஆண்டு ஜுன் 17 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. 

கோவில் அமைப்பு 

சிட்னி முருகன் கோயில் ஐந்து சன்னதிகளைக் கொண்டது. மூன்று சன்னதிகளில் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் வள்ளி தெய்வானை சமேதராக முருகனும், இடையே கருவறையினல் வலப்புறம் சிவலிங்கமும், இடப்புறம் சிவகாமசுந்தரியும், நடுச் சன்னதியில் முருகனும் உள்ளனர். 

நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய சந்நிதிகள் தனித்தனியாக உள்ளன. அலங்காரத் தூண்களில் ஆறு படைவீடுகளும், கதிர்காமம், செல்வச்சந்நிதி, வெருகலம்பதி, நல்லூர் ஆகிய சன்னதிகளில் உள்ள முருகன் சிலைகளும் கற்பனைச் சிலைகளாகக் காட்சியளிக்கின்றன. 

மகோற்சவம் 

சிட்னி முருகன் கோவிலில் மகோத்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்துடன் தொடங்கி ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும், பங்குனி உத்தரம் அன்று தீர்த்த விழாவும்,  பதினொன்றாம் நாள் பூங்காவனம் திருக்கல்யாண உற்சவத்துடன் நிறைவடையும்.