ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெள்ளை மற்றும் கருப்பு நிறமாக மாறும் அதிசய விநாயகர் திருத்தலம் - Miraculous Lord Ganesha who changes color every six months

uma 108 04/9/2024
 ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெள்ளை மற்றும் கருப்பு நிறமாக மாறும் அதிசய விநாயகர் திருத்தலம் - Miraculous Lord Ganesha who changes color every six months

இக்கோயில் தமிழ்நாட்டில் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள கேரளபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு அதிசய விநாயகர் கோவில் ஆகும். நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் இந்த கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர் அனைத்து தடைகளையும் தகர்க்க வல்லவர்.

இங்குள்ள சிவன் மற்றும் விநாயகர் சிலைகள் மிகவும் பழமையானவை. இந்த கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள விநாயகர் சிலை 2300 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. இந்த சிலை ஆகம விதிப்படி இல்லாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வேறெங்கும் காணமுடியாத அதிசயம் :

இங்குள்ள விநாயகர் சிலை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுவதாக ஐதீகம். உத்தராயண காலமான (மார்ச் முதல் - ஜூன் வரை) விநாயகர் சிலை கருப்பு நிறமாகவும், தட்சிணாயன காலமான (ஜூலை முதல் - பிப்ரவரி வரை) சிலை வெள்ளை நிறமாகவும் மாறும். அதனால் இக்கோயில் அதிசய விநாயகர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு

கேரளபுரம் மன்னர் ராமேஸ்வரத்திற்கு யாத்திரை சென்றபோது, ​​ராமேஸ்வரம் கடற்கரையில் மன்னரும் பரிவாரங்களும் கால்களை கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது இந்தப் பிள்ளையார் சிலை அந்தப் பக்கம் அடித்து கொண்டு வரப்பட்டது. அதை எடுத்து ராமேஸ்வரத்தை ஆண்ட மன்னன் சேதுவுக்கு பரிசாக கொடுத்தார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த சேது மன்னன், விநாயகர் சிலையை, 'எடுத்தவரே வைத்துக் கொள்ள வேண்டும்' எனக்கூறி, கேரளபுரம் மன்னரிடம் திருப்பி அளித்தார். அதுமட்டுமின்றி அவரைப் பாராட்டி கூடுதலாக மரகத விநாயகரையும் பரிசாக அளித்தார். பினகொடுத்தானபுரம் செல்லும் வழியில் மரகத விநாயகரை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஆனால், ராமேஸ்வரத்தில் கடலில் கிடைத்த விநாயகரை நகர்த்த முடியாமல் கொள்ளையர்கள் விட்டுச் சென்றனர்.

வேண்டுதல்கள்:

திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த விநாயகருக்கு தேங்காய் உடைத்து கொழுக்கட்டை படைத்து வழிபடுகின்றனர். அப்படி செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. நிறம் மாறும் அதிசய விநாயகரைக் காண ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அதிசயம் :

இந்த கோவிலில் இன்னொரு அதிசயமும் நடக்கிறது. இக்கோயிலில் உள்ள கிணற்று நீரும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறும். விநாயகர் சிலை வெள்ளையாக மாறும் போது தண்ணீர் கருப்பாகவும், விநாயகர் கருப்பாக மாறும் போது தண்ணீர் வெள்ளையாகவும் மாறும் என்பது ஐதீகம். இங்குள்ள ஆலமரங்களின் இலைகள் தட்சிணாயன காலத்தில் உதிர்ந்து பிறகு மார்ச் மாதத்தில் துளிர்க்க ஆரம்பிக்கும். இதை ஒரு அதிசய நிகழ்வாக மக்கள் கருதுகின்றனர்.

இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனைக் காணவே ஆயிரக்கணக்கான மக்கள் இக்கோயிலில் கூடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமும், இந்த அதிசய நிகழ்வைக் காண ஒரு முறையாவது இந்தக் கோயிலுக்குச் சென்று விநாயகப் பெருமானின் அருளைப் பெறுவோம்.