ஒவ்வொரு மாதமும் சில நட்சத்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆவணி மூல நட்சத்திரத்தில் காலையில் சூரிய உதயத்தின் அடிப்படையில் தான், ஆண்டு முழுவதும் வெப்பநிலை எப்படி இருக்கும் என்று கணிக்கிறார்கள். ஆவணி மூலம் அன்று காலையில் அதிக வெப்பம் இருந்தால் வருடம் முழுவதும் வெயில் அதிகமாக இருக்கும். மாறாக, மிதமான தட்பவெப்ப நிலை இருந்தால் நல்ல மழை பெய்து குளிர்ச்சியான வானிலை நிலவும் என்று கூறப்படுகிறது.
ஆவணி மூலத்திருநாள் அசுர சக்திகளை வென்று ஒழிப்பதற்குத் துணை செய்கிறது. கல்வியின் அதிபதி அன்னை சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலம் தான்.
மதுரை மாநகருக்கு சுந்தரேஸ்வரர் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தது ஆவணி முலமே :
மாணிக்கவாசகருக்காக சுந்தரேஸ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளிய நாள் இது. அதாவது பாண்டிய மன்னன் மாணிக்கவாசக ஸ்வாமியை தன் கடமையையும், அரசனின் கட்டளையையும் மீறியதற்காக அவரை சிறையில் அடைத்து நெற்றியில் கல்லை வைத்து சூரியனை நோக்கி இருக்குமாறு தண்டித்தார். சிவபெருமான் காட்டில் உள்ள நரிகளை பரிகளாகக் கொண்டு மாணிக்கவாசகரை விடுவித்து அவரை சிறையிலிருந்து மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திர நாளாகும்.
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் :
ஒரு முறை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வைகை ஆற்றின் கரையை சீரமைத்து பலப்படுத்துமாறு மதுரை மக்களுக்கு உத்தரவிட்டான் பாண்டிய மன்னன். பாண்டிய மன்னனின் உத்தரவின் பேரில், பிட்டு விற்கும் ஏழை மூதாட்டியான வந்திக்கு, வைகை ஆற்றின் கரையில் ஒரு சிறிய பகுதியை பலப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டது.
வயது முதிர்வு காரணமாக அவரால் முழுமையாக வேலை செய்ய முடியவில்லை. ஏழையான மூதாட்டி மற்றவர்களின் உதவியை நாடினார். கூலியாள் வடிவில் மூதாட்டிக்கு உதவ வந்த சிவபெருமான், உதிர்ந்த பிட்டை கூலியாக ஏற்று மூதாட்டியின் வேலையைச் செய்ய ஒப்புக்கொண்டார்.
கூலியாளாக வந்த சிவபெருமான் தன் பணியைச் செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்து உறங்கி விட்டார். இதை கவனித்த அரசவை பணியாளர்கள் அவரை எழுப்பி பணியைச் செய்ய உத்தரவிட்டனர். அது பலனளிக்காததால், கூலியாளாக வந்த சிவபெருமானைத் தண்டித்தார்கள்.
அந்த தண்டனை ஒரு சவுக்கடியாக தரப்பட்டது. அந்த அடியை உலக உயிரினங்கள் அனைத்தும் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான். அவனும் தன் தவறை உணர்ந்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக இத்திருவிழா பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
விழாக்கள் :
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
மதுரையில் சொக்கநாதர் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களை நினைவு கூறும் வகையில் ஆவணி மூலத்திருவிழா அன்று 10 திருவிளையாடல்கள் நடத்தப்படுகின்றன. ஆவணி மூலத்திருவிழாவின் போது சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. அடுத்த ஐந்து மாதங்களுக்கு சுந்தரேஸ்வரர் மதுரையை ஆட்சி செய்வார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத் திருநாள் அன்று சிவபெருமானை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.