பொதுவாக பத்ரகாளி என்றவுடன் வாள், சூலம், வேல் மற்றும் மண்டை ஓடுகள் ஆகியவற்றைக் கொண்ட ஆக்ரோஷமான வடிவத்தில் காளியின் உருவம் நினைவுக்கு வரும். ஆனால் மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் சாந்த சொரூபமாக அம்மன் காட்சியளித்து, நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மூலவர் – வனபத்ர காளியம்மன்
தல விருட்சம் – தொரத்திமரம்
தீர்த்தம் - பவானி தீர்த்தம்
வனபத்ரகாளியம்மன் தல வரலாறு :
சாகவரம் பெற்ற மகிசாசுரனை அழிக்க அம்பாள் சிவபெருமானை வழிபட்டு பின் சூரனை அழித்தார். அம்மன் சிவபெருமானை நினைத்து வனத்தில் தியானம் செய்ததால் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
புராண காலத்தில், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனுக்கும், பகாசுரனுக்கும் இடையே போர் நடந்ததாகவும், தேவியின் அருளால் அப்போரில் பீமன் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது. பகாசுரன் தனது அகங்காரத்தை இழந்து, கோவில் வளாகத்தில் காவல் தெய்வமாக இருக்க வேண்டும் என்று அம்மனிடம் பிரார்த்தனை செய்தார் என்றும் நம்பப்படுகிறது. இங்கு பகாசுரன் மற்றும் பீமனுக்கு மிகப்பெரிய சிலைகள் உள்ளன.
இது தவிர, இந்த கோவில் ஆரவல்லி மற்றும் சூரவல்லி கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன், மந்திரத்தாலும் சூனியத்தாலும் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லியையும் சூரவல்லியையும் அடக்கச் சென்று, சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் கிருஷ்ணனால் காப்பாற்றப்பட்டார்.
பின்னர் பாண்டவர்கள் தங்கள் தங்கை மகன் அல்லிமுத்துவை அப்பெண்களை அடக்க அனுப்பினார்கள். அல்லிமுத்து இங்குள்ள அம்மனை வழிபட்டு பின் ஆரவல்லியின் ராஜ்யத்தை துவம்சம் செய்தார். இதனால் பயம் கொண்ட ஆரவல்லி தன் மகளை அல்லிமுத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவள் மூலமாக விஷம் வைத்து அல்லிமுத்துவைக் கொன்றனர். இதை அறிந்த அபிமன்யு சொர்க்கம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தார்.
அல்லிமுத்து நடந்ததைக் கேட்டு கோபம் கொண்டு ஆரவல்லியை அழிக்கச் சென்றார். வழியில் வனபத்ரகாளியம்மனை வணங்கி அவள் அருளைப் பெற்று ஆரவல்லியின் ராஜ்ஜியத்தை அழித்தார்.
வனபத்திரகாளியம்மன் கோவில் சிறப்புகள்:
1) பூக்கட்டிப் பார்த்தல்
புதிய தொழில் தொடங்குபவர்கள், திருமணம் பற்றி கேட்பவர்கள் வனபத்திரகாளியம்மன் முன்பு பூக்கட்டிப் பார்த்தல் வழக்கம். சிவப்பு மற்றும் வெள்ளை பூக்களை தனித்தனி பொட்டலங்களில் மடித்து அம்பாளின் பாதத்தில் வைப்பார்கள், எந்த பூவை மனதில் நினைத்தார்களோ அது வந்தால் அம்பாள் உத்தரவு பிறப்பித்ததாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
2) கிடா வெட்டு :
வனபத்திரகாளியம்மன் கோவில் என்றாலே நினைவுக்கு வருவது கிடா வெட்டுதல். அம்மனுக்கு உகந்த ஆடு பலி ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடைபெறும். ஒரு வாரத்தில் 300 முதல் 400 கிடா வரை வெட்டப்படுகிறது. ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்களை வெட்டுகிறார்கள்.
அம்மன் சுயம்புவாக தோன்றியது, குண்டமிறங்குதல் ஆகியவை கோயிலின் தனிச்சிறப்பு.
வனபத்திரகாளியம்மன் கோவில் திருவிழாக்கள்:
அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று, ஆடி முதல் செவ்வாய் கிழமை பூச்சூட்டி, 2வது செவ்வாய்கிழமை திருப்பூகுண்டமும், 3வது செவ்வாய்கிழமை மறுபூஜையும் செய்து விழா கொண்டாடப்படுகிறது. 36 அடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்பட்டு, பக்தர்கள் நெருப்பு மூட்டி அதில் இறங்கி நடந்து செல்கின்றனர். இந்த திருவிழாவில் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இவை தவிர வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும், தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டின் போது ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
வனபத்திரகாளியம்மன் கோவில் வேண்டுதல்கள்:
இது தவிர குழந்தை வரம் வேண்டி அம்மனை வணங்கி தொரத்தி மரத்தில் கல் கட்டி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். இக்கோயிலுக்கு வந்து அம்மனை வேண்டிக் கொண்டால் பில்லிசூன்யம், செய்வினை கோளாறு இது போன்ற பிரச்சினைகள் நீங்கும் என்பது இங்கு வரும் பக்தர்கள் கூறும் உண்மை.
வேண்டுதல் சிறப்பாக நடந்தால் பெண்கள் தாலியை உண்டியலில் போடுவார்கள். இத்தலத்தில் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதுமட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யலாம்.
வனபத்திரகாளியம்மன் கோவில் நடைதிறப்பு நேரம்:
காலை 6 மணி - 11 மணி வரை மாலை 4 மணி - இரவு 8 மணி வரை
வனபத்திரகாளியம்மன் கோவில் முகவரி:
நெல்லித்துரை சாலை,
தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி 641305