கதிர்காமம் முருகன் கோயில்,சிங்களம்,இலங்கை | Kathirgamam Murugan Temple, Sinhala, Sri Lanka.

uma 78 28/6/2024
  கதிர்காமம் முருகன் கோயில்,சிங்களம்,இலங்கை  |   Kathirgamam Murugan Temple, Sinhala, Sri Lanka.

 கதிர்காமம் முருகன் கோயில்,சிங்களம்,இலங்கை. 

கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் பிரபலமான யாத்திரை தலமாகும். இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களில் ஒன்றான இது தமிழர்கள், சிங்களவர்கள், சோனகர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமூகங்களைச் சேர்ந்த மக்களால் வழிபடப்படுகிறது. முருகன் சிங்களவர்களால் சிங்காரவேலர் என்றும் வணங்கப்படுகிறார். 

வரலாறு :

கதிர்காம முருகனின் பெயர் தமிழில் பண்டார நாயகன், சமஸ்கிருதத்தில் கதிர்காமன் என்றும், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியாக (கதிர்) சரவணப் பொய்கையில் பொற்றாமரைக் குளத்தில் அழகிய முகத்துடன் (காமன்) முருகப்பெருமான் தோன்றியதால் இத்தலம் கதிர்காமம் என்றும், முருகனுக்கு கதிர்காமன் என்றும் பெயர் ஏற்பட்டது. 

இவை அனைத்தும் முருகப்பெருமானின் குணாதிசயங்களையும், லீலைகளையும், வீரச் செயல்களையும் வெளிப்படுத்தும் பெயர்கள். இக்கோயிலில் முருகப்பெருமானை வழிபட செல்வது கதிர்காம யாத்திரை எனப்படும். ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மன்னன் எல்லாளனுடன் நடந்த போரின் போது சிங்கள மன்னன் துட்டகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்து, போரில் வெற்றி பெற்று இக்கோயிலில் அருள்பாலித்ததாக மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. இக்கோயிலின் வரலாறு அதற்கு முன்னரும் நீண்ட வரலாறு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவில் அமைப்பு :

ஏழு மலைகளில் ஒன்றின் மீது கதிர்காமக் கந்தன் காட்சி அளித்ததின் ஞாபகமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையில் வள்ளியை மணந்ததைக் குறிப்பதற்காகவும் கதிர்காமக் கோயில் அவரது பெயரில் கட்டப்பட்டது. முக்கால் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலை சுற்றி 6 அடி உயர செங்கல் சுவர் உள்ளது. சதுரக வடிவ  கோயில் சாலையில் வரிசையாக சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காமக் கந்தனின் மூத்த சகோதரன் கணபதிக்கும், மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன.  

ஞான சொரூபமான பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் அழகும் வனப்பும் கொண்ட அரச மரம் உள்ளது, இது ஞானத்தின் திருவுருவமாகும். இந்த மரம் புத்தருக்கும் விஷ்ணுவிற்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. தெற்கே பிரதான நுழைவாயிலில் வில் போன்ற வளைந்த அலங்கார முகப்பு உள்ளது. அதன் அருகில் ஒரு சிறிய கதவு உள்ளது. கோவிலுக்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மை கோவில் உள்ளது, இந்த கோவிலுக்கு செல்லும் பாதை 300 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டது. 

கருவறையின் சிறப்பு :

ஆதி மூல அறைக்குள் பக்தர்கள் நுழைய முடியாது. ஒரு திரையால் மூடப்பட்டிருக்கும். இது ஒரு மர்மமான புனித இடம். காற்று மற்றும் ஒளி உள்ளே நுழைவதைத் தடுக்க ஜன்னல்கள் அல்லது திறப்புகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இந்த அறைக்கும் மைய அறைக்கும் இடையே ஒரு சிறிய கதவு உள்ளது. இங்கு யாரும் செல்ல முடியாது. அர்ச்சகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தங்கள் காணிக்கை செலுத்த மத்திய அறைக்கு அப்பால் செல்ல முடியாது. 

விழாக்கள்: 

கதிர்காமத்தின் புகழ்பெற்ற வருடாந்திர திருவிழாவின் போது, ​​செம்பு அல்லது தங்கத் தட்டில் எழுதப்பட்ட மர்மமான மற்றும் சக்திவாய்ந்த யந்திரம் கொண்ட வெண்துகிலால் மூடப்பட்ட பேழையை ஒரு யானை சுமந்து ஊர்வலமாகச் செல்கிறது. அச்சமயத்தில் விவரிக்க முடியாத சக்தி எல்லா இடங்களிலும் நிலவும். பக்திமேலீட்டால் சிலர் கண்ணீர் மல்க பாடி ஆடுகிறார்கள். 

இன்னும் சிலர் உருண்டு உடம்பை வறுத்தி எல்லா பாவங்களுக்கும் கழுவாய் தேடுகிறார்கள்.பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வான சாத்திரத்திப்படி  நுணுக்கமாக கணித்த பூரணையன்று கந்தன் தீர்க்கமாடுவார். மாணிக்கங்கை ஆற்றின் மேற்பரப்பில் ஒரு பானையில் வைக்கப்பட்ட வாள் அல்லது களியினாலோ தண்ணீரை வெட்டுவார். 

ஆடி அமாவாசை தொடங்கி பௌர்ணமி முடியும் வரை ஆடித் திருவிழாவாகும். அதேபோல் கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புதண்டு பிறப்பு, தை மாதப் பிறப்பு, மாசிமகம், வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் சிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. 

பாடல்கள்: 

அருணகிரிநாதர் இத்தலத்தை வணங்கி 25க்கும் மேற்பட்ட திருப்புகழ் மாலைகளைப் பாடியுள்ளார். இந்த சஷ்டி கவசத்தில் " கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா..." என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.