சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள்,பண பிரச்சனையை தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் திருக்கோவில் வரலாறு | History of Sirkazhi Sri Chattainathaswamy Temple

sathiya 75 08/4/2024
  சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள்,பண பிரச்சனையை தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் திருக்கோவில் வரலாறு | History of Sirkazhi Sri Chattainathaswamy Temple

சீர்காழியில் அமைந்திருக்கிறது தருமபுரம் ஆதினத்திற்கு உள்பட்ட சட்டைநாதர் கோயில்.7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கியருளிய ஸ்தலம். சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு நடைபெறும் சுக்கிரவார பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம்.

பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது சீர்காழியிலேயே மிக முக்கியமான ஆலயமாகும்.இக்கோவிலில் சிவபெருமான் தனது தேவியான திருநிலைநாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் சிவபெருமான் மூன்று வடிவங்களில் அருள் புரிகிறார். இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமனது பிரம்மதீர்த்தம் ஆகும்.

இந்த திருக்கோவில் தேவஸ்தானம் ‘சட்டைநாதர் தேவஸ்தானம்’ என்றே அழைக்கப்படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் ‘சட்டைநாதர் உலா' நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் தல வரலாறு:

இந்த கோவில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் சுமார் 90 அடி உயரமுள்ள கோபுரங்களுடன் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சம் ஆகும். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்பு ஒரு முறை திருஞானசம்பந்தர் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது பார்வதி தேவியான திருநிலை நாயகி அம்மை ஞானப்பால் வழங்கி அவருக்கு ஞானத்தை ஊட்டியதாக தல வரலாறு கூறுகிறது. 

உலகமே கடல் நீரால்  அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து, "ஓம்" என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி, உமா மகேஸ்வரராக வருகையில், ஊழிக்காலத்திலும் அழியாமல் நின்ற இந்த சீர்காழி தலத்தை பார்த்தார். தோணியில் வந்து இங்கு கரை சேர்ந்ததால் தோணிபுரம் என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு சீர்காழி தலமானது 12 காரணப் பெயர்களை கொண்டுள்ளது. தன் வலிமை அழிந்த கண்ணபிரானால் ஏவப்பட்ட காளிங்கன் என்னும் பாம்பு பூஜித்தமையால் ஸ்ரீகாளிபுரம் என்றும் நாளடைவில் மருவி காழி, சீர்காழியானது என்பர்.

சிவன் தோணியை இயக்கி வந்ததால் இறைவனுக்கு தோணியப்பர் என்று பெயர் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள்.பிரம்மா இறைவன் சிவபெருமானை வணங்கி மீண்டும் படைப்பு தொழிலை ஆரம்பித்ததால் சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், சட்டைநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும், ஆணவங்களை அழிப்பவராக சட்டை நாதராகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இவர்கள் தான் சம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தவர்கள். இது குரு மூர்த்தம் எனப்படும். உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார்.

பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார். இங்கு வந்து வணங்கினால் தான் என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம்.

18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது.

உரோமச முனிவர் கயிலை சென்று, சிவனை நோக்கி தவம் செய்து, "இறைவா! பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும்" என வேண்டினார். ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அகை கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. காலவித்து என்னும் மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால் தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பெரியவர்கள் கூறினர். அவன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றான்.

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் கோவிலின் அமைப்பு:

சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அமைந்துள்ளது. கிழக்கு திசையிலுள்ள ராஜகோபுரம் தான் ஆலயத்தின் பிரதான வாயில். இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கோவிலில் நுழைந்ததும், ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது. இவருக்கு வலப்பக்க்ம் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்னத்தில் கொடுத்ததின் அடையாளமாக கிண்ணம் உள்ளது. கோவிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோவிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் உள்ளன.

இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை "தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் . "தோணிமலை' என்கின்றனர்.

இந்த தல வரலாறு நினைவு கூறும் விதமாக திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருமுலைப்பால் விழா அன்று திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் இருந்து புறப்பட்டு பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருள்வார். அங்கு திருஞானசம்பந்தருக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் திருஞானசம்பந்தர் புறப்பாடு நடக்கும். 

அப்பொழுது மலைக் கோவிலிலிருந்து உமாமகேஸ்வரி சாமி அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் எடுத்துவரப்பட்டு தீர்த்தக் குளக்கரையில் எழுந்தருள்வார். இதனை அடுத்து பகல் 12 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் தங்க குடத்தில் உள்ள பாலை கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு வழங்கப்படும். 

தொடர்ந்து சிவபெருமானுடன் உமா மகேஸ்வரி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சியளிப்பார். அப்பொழுது சாமி அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படும். இதனை அடுத்து பக்தர்கள் கொண்டுவரப்படும் பாலை சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் நடை திறக்கும் நேரம்:

Sirkazhi Sattainathar Temple Timings :


இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்த நாயனார் குருபூஜை வழிபாடு அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறுவது வழக்கம்.

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் கோவில் முகவரி

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில்,
ஸ்ரீ சட்டைநாதசுவாமி தேவஸ்தானம்,
சீர்காழி
நாகப்பட்டினம் மாவட்டம்
தமிழ்நாடு – 609110.

 

Sirkazhi Sattainathar Temple Address:

Sri Brahmapureeswarar Temple,
Sri Sattainathaswami Devastghanam,
Sirkazhi
Nagapattinam District
Tamil Nadu – 609110.