அட்சய திருதியை உருவான வரலாறு | அட்சய திரிதியை சிறப்புகள் | History of Akshay | Trithi Akshaya Trithiya is special

sathiya 70 20/3/2024
 அட்சய திருதியை உருவான வரலாறு | அட்சய திரிதியை சிறப்புகள் | History of Akshay | Trithi Akshaya Trithiya is special

அட்சய திருதியை என்றால் என்ன?
அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என்பது இந்து  மற்றும்  சமணர்களின் புனித நாள் ஆகும். சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்த அட்சய திருதியை நாளன்று, தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. "அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருள். மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.


அட்சய திருதியை உருவான வரலாறு ?

 அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் . அதனால் இத்திருநாளை அள்ள, அள்ளக் குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க நன்னாள் என்று போற்றப்படுகிறது. அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை அள்ளி தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையும் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும். அட்சய திருதியை அன்று பிறருக்கு  பானகம் மற்றும் நீர்மோர் வழங்குவது சிறப்பு. தண்ணீர் தானம் கூட சிறந்தது.

ஒரு சமயம் பாஞ்சாலை நாட்டை பூரியசஸ் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிக் காலத்தில் பாஞ்சாலை நாட்டில் மிகவும் வறட்சி நிலவியது. மன்னரும் மக்களும் வறட்சியால் கடும் அவதியுற்றனர். அப்போது வேற்று நாட்டு மன்னர்கள் பாஞ்சாலை நாட்டின் மீது போர் தொடுத்தனர். 
போரில் வெற்றி பெற்று அவனது நாட்டையும் கைப்பற்றினர். ஆனால் மன்னன் பூரியசஸ் எதிரிகளின் கைகளில் சிக்காமல் தனது மனைவியுடன் காட்டுக்குள் தப்பி ஓடினான். செல்லும் வழியில் சில முனிவர்களை சந்தித்தான். தனது குறைகளை அவர்களிடம் முறையிட்டான். 
தனது நிலைமைக்கு காரணம் வேண்டி நின்றான். முனிவர்களும் அவனது நிலைமைக்கான காரணத்தை தனது ஞான திருஷ்டி மூலம் கண்டறிந்தனர். மன்னனை நோக்கி நீ பூர்வ ஜென்மத்தில் கொள்ளைக்காரனாக இருந்து பிறரை வழி மறித்து அவர்கள்  பொருளை எல்லாம்  அபகரித்துக் கொண்டாய். உனக்கு இந்த நிலை ஏற்பட்டு இருப்பதற்கு காரணம் நீ செய்த அந்த பாவங்களே காரணம் என்று சொன்னார்கள்.அதற்கு மன்னன் அப்படியானால் நான் எவ்வாறு அரசனாக ஆனேன் என்று கேட்டான். 

அதற்கு அவர்கள் நீ கொள்ளை அடித்த அதே சமயத்தில் தெரிந்தோ தெரியாமலோ  ஒரு அந்தணருக்கு தண்ணீர் அளித்து உதவினாய். நீ தெரிந்தோ தெரியாமலோ தண்ணீர் அளித்து உதவியதால் தான் நீ அரசனாகப் பிறந்தாய் என்றனர்.இதைக் கேட்ட மன்னன் தான் செய்த பாவங்களுக்காக வருந்தினான். அதே சமயத்தில் தான் தண்ணீர் தானம் செய்த ஒரு காரணத்திற்காக அரசனாகப் பிறவி அளித்த கடவுளை எண்ணி கண்ணீர் விட்டு தொழுதான். 

பிறகு அந்த மன்னர் அந்தக் காட்டிலேயே  ஸ்ரீமன் நாராயணரை நினைத்து தியானம் செய்து வாழ ஆரம்பித்தான். மேலும் அட்சய திருதியை நாளில் , வெயிலில் வருபவர்களுக்கு நிழல் கொடுத்தும், குடிநீர் தானம் செய்தும் தொண்டு செய்து வாழ்ந்து வந்தான்.மன்னனின் தொண்டைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் அவனுக்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். மன்னன் இறைவனிடம், 'சுவாமி! நான் அடுத்த பிறவியில் புழுவாய் பிறந்தாலும், உன்னிடம் மாறாத பக்தி கொண்டவனாக இருக்க வேண்டும்' என்றான். அதற்கு இறைவனும் அவன் விருப்பப்படியே வரம் கொடுத்தார்.

பூரியசஸ் மன்னனுக்கு, மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் அட்சய திருதியை  நாளாக கொண்டாடப்படுகிறது. அவன் செய்த தானத்தின் பலனாக, சில நாட்களில் உறவினர்கள் உதவியுடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினான் . அதன்பிறகு மீண்டும் நல்ல முறையில் ஆட்சி செய்தான் .

அட்சய திரிதியை சிறப்புகள் :

பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான்.பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம் இந்நாள்.திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதன் காரணமாக , இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் செய்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம் இந்நாள் .

பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம்  இந்நாள். இன்றைய தினத்தில் தான் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.

பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள்,  ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை. 
கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான்.பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான். இந்த நாளில் பரசுராமர் வழிபாடு நன்மை தரும்.

அட்சய திருதியை நாளில்  செய்யக்கூடிய காரியங்கள்:

சங்கீதம், கல்வி, கலைகள் கற்பது.

சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம்,  தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த உகந்த தினம்.


நிலங்களில் எரு விட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க போன்ற பல விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்.
வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, மருந்து உட்கொள்ள, பயணம் மேற்கொள்ளலாம்.