ராம நவமி என்றால் என்ன? ராம நவமி வழிபாடு செய்வது எப்படி? | ஸ்ரீராம நவமியின் பலன்கள் |What is Rama Navami? How to worship Ram Navami? | Benefits of Sri Rama Navami

sathiya 90 09/3/2024
 ராம நவமி என்றால் என்ன? ராம நவமி வழிபாடு செய்வது எப்படி? |  ஸ்ரீராம நவமியின் பலன்கள் |What is Rama Navami? How to worship Ram Navami? | Benefits of Sri Rama Navami

இராம நவமி (Rama Navami) விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் இராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகையாகும்.இந்த விழா, வசந்த காலத்தில் சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார்.சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும்.

திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுவது ஸ்ரீ ராம அவதாரம் தான்.மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாகவும் கருதப்படுவது ஸ்ரீராம அவதாரம் ஆகும்.மகாவிஷ்ணுவின் அவதாரங்களிலேயே ஒரு மனிதனுக்கு உண்டான அத்தனை குணங்களுடனும் ஒரு மனிதனானவன் அரசன், மகன், கணவன், தலைவன் என்பவன் எப்படி அறவழியில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரண புருஷனாகவும் அமைந்த அவதாரமாகப் போற்றப்படுகிறது ஸ்ரீராமாவதாரம்!

ராமர் நவமியில் தோன்றிய வரலாறு:

அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள்.இதனால் வேதனையுற்ற அஷ்டமி, நவமி திதிகள் மகாவிஷ்ணுவிடம் சென்று “நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்? எங்களை ஏன் அனைவரும் கெட்ட திதிகளாக எண்ணி எந்த நற்காரியத்தையும் செய்ய தயங்குகிறார்கள் ஏன் எங்களை ஒதுக்குகிறார்கள்?” என்று கேட்டனர்.

அத்திதிகளுக்கு “நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். மக்கள் உங்களையும் போற்றி துதிக்கும் நாள் வரும் அது வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்” என்று உறுதி அளித்தார்.

அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்-கோசலை தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

ராம நவமி வரலாறு:

கோசலை நாட்டின் தலைநகராகிய அயோத்தியை ஆண்ட மன்னரான தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர் இருந்தனர்.

தேசமெங்கும் வெற்றிக் கொடி கட்டிப் பறந்த தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தசரத சக்கரவர்த்தி மனம் நொந்து தமது குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பெற என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்.

முனிவர் அவருக்கு ‘புத்ர காமேஷ்டி’ யாகத்தை நடத்துமாறு அறிவுரை கூறினார். தசரத சக்கரவர்த்தி யாகத்தை சிறப்பாக நடத்தினார், அச்சமயத்தில் யாகத்தீயில் இருந்து யக்னேஸ்வரர் தோன்றி பாயாசம் நிறைந்த ஒரு குடுவையை தசரதரின் கையில் கொடுத்து அதை அவரது மனைவிமார் அருந்த செய்யுமாறு கட்டளை இட்டார்.

தசரத சக்கரவர்த்தியின் மூன்று மனைவிமாரும் அதனை பகிர்ந்து அருந்தினார்கள். அதன் பின் சித்திரை மாத சுக்கில பட்ச (வளர்பிறை) தினத்தில் கோசலை ராமப்பிரானையும், கைகேயி பரதனையும், சுமித்திரை லட்சுமனையும் சத்ருக்கனையும் ஈன்றெடுத்தனர். இந்நாளினையே இராமநவமி என சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

"ராமா' என்ற திருநாமத்தை யார் ஒருவர் பன்முறை ஜபிக்கிறார்களோ, அவர்களுக்கு சீதாபிராட்டி, லட்சுமணன், ஸ்ரீஆஞ்சநேயருடன் ஸ்ரீராமபிரான் காட்சி தருவார் என்பது ஆன்றோர் கூற்று. ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

ராம நவமி வழிபாடு முறை:

ஸ்ரீராமநவமி இந்நாளில், ராம ஆலயங்கள் தோறும் விசேட பூஜை, ஆராதனைகள் இடம்பெறும் இங்கு பெரும் திரளான மக்கள் கூடி வழிபாடு ஆற்றுவார்கள்.

வீடுகளிலும் ராமர் படத்தை பூஜையறையில் வைத்து, பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயசம், வெள்ளரிக்காய் படைத்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். இன்று முழுவதும் ராமபிரானை எண்ணிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

ராம நவமி பலன்கள்:

மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு சிறப்பை எடுத்துரைக்கின்றன.14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது.  அந்தவகையில் இராம அவதாரம் தனிமனித ஒழுக்கத்தையும், அதர்மத்தை  வென்று தர்மத்தை நிலைநாட்டுவதை  உலகுக்கு உணர்த்தும் வகையிலும் மற்றும் ராமர் சிறந்த மாணவனாக, மகனாக, கணவனாக, அரசனாக வாழ்ந்த விரதத்தினையும் எடுத்தியம்புகின்றது.

இவ் உத்தம புருஷரின் பிறப்பு தினத்தில் விரதமிருந்து அதனை சரிவர அனுஷ்டிப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டும், நல்லாரோக்கியம் கிடைக்கும், குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும், துன்பத்திலும் கலங்காத மனநிலை உண்டாகும், எடுத்த காரியத்தில் வெற்றி, ஐஸ்வர்யம் கிட்டும்.

அன்றைய தினத்தில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பத்ராச்சலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்த கோடிகளால் கூட்டம் நிரம்பும். மேலும் இராமர், அவரது மனைவி சீதா, தம்பி லட்சுமனன் மற்றும் பக்தர் ஹனுமான் ஆகியோரின் ஷோபயாத்திரைகள் எனவும் அறியப்படும் ரதயாத்திரைகள், தேர் ஊர்வலங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறும். அயோத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நதியாகக் கருதப்படும் சராயுவில் முங்கி எழுவார்கள்.