வைகாசி விசாக 2024 விரத முறை,நேரம் மற்றும் பலன்கள் | Vaikasi Visakha 2024 Fasting Method, Timing and Benefits

sathiya 44 29/4/2024
 வைகாசி விசாக 2024 விரத முறை,நேரம் மற்றும் பலன்கள் | Vaikasi Visakha 2024 Fasting Method, Timing and Benefits

வைகாசி விசாகம் என்பது தமிழ் கடவுளான முருகப் பெருமான் அவதரித்த நாளாகும்.வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.விசாகன் என்றால் மயில் மீது ஏறி வருபவன் என்று பொருள். தனது பக்தர்களின் துன்பங்களை போக்குவதற்காக மயில் மீது பறந்து, உடனடியாக வந்து நிற்கக் கூடியவர் முருகப் பெருமான். முருகா என்று அழைத்தால் வந்த வினையும், வருகின்றன வல்வினையும் ஓடி விடும் என்பார்கள்.

வைகாசி விசாகம்  உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இந்த நாளில் பாத யாத்திரையாக பால் குடம், பால் காவடி ஏந்திச் சென்றும்,தேர் இழுத்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.

தீமைகளை அழிப்பதற்காக சிவனின்நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக இந்த வைகாசி விசாக நாளில் அவதரித்த முருகப் பெருமானை வழிபட்டாலே, முருகனின் அருள் மட்டுமல்ல சிவ பெருமான் மற்றும் பராசக்தியின் அருளும் கிடைத்து விடும். சிவ பெருமானுக்கும் ஆறு முகங்கள் இருந்தாலும், ஐந்து முகங்களை மட்டுமே அனைவராலும் தரிசிக்க முடியும். ஆறாவது முகமான அதோமுகத்தை முனிவர்களும், ஞானியர்களும், ரிஷிகளும் மட்டுமே தரிசிக்க முடியும். இதனால் சிவனின் ஐந்து சக்திகளாக ஐந்து முகங்களுடன், பார்வதி தேவியின் சக்தியும் இணைந்த ஆறுமுகங்களின் அம்சமாக முருகப் பெருமான் விளங்குகிறார்.

குழந்தை வரம் தரும் வைகாசி விசாகம் விரதம்:

பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். அவர்கள் முருகன் அவதரித்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு ஏற்படும். அதே போல் கணவன் - மனைவிக்குள் ஒற்றுமையில்லை, வீட்டில் எப்போதும் சண்டை, கணவன் - மனைவிக்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள், நீண்ட காலமாக நோயால் அவதிப்படுபவர்கள், வழக்கு விவகாரங்கள் சிக்கிய தவிப்பவர்கள் ஆகியோர் வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானிடம் தங்களின் கோரிக்கையை முன் வைக்கலாம்.

வெற்றி தரும் வைகாசி விசாகம்:

முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.

வைகாசி விசாகத்தின் புராண கதை:

இந்த நாளில் திருச்செந்தூரில் முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. தன்னை நோக்கி தவமிருந்த முனிவரின் மைந்தர்கள் ஆறு பேருக்கு முருகப்பெருமான் அருள் புரிந்த நாள் இதுவாகும்.

பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள் என்று மகன்களுக்கு உத்தரவிட்டார். 

நீரில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன.அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார்.உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர்.

சாப விமோசனம்: தவறுக்கு வருந்திய ஆறு பிள்ளைகளும் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார். மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.

வைகாசி பவுர்ணமி: ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது "நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது.

சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


வைகாசி விசாக விரத முறை :

முருகப் பெருமானை,வைகாசி விசாகத்தன்று அதிகாலையில் எழுந்து, நீராடி, வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். அன்றைய தினம் முழு உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் முருகனை நினைத்து, அவருக்குரிய மந்திரங்களை, பாடல்களை பாராயணம் செய்து வழிபடலாம். நைவேத்தியமாக  சர்க்கரைப் பொங்கல்,கற்கண்டு கலந்த பால் பருப்பு பாயசம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம். காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றி வழிபட வேண்டும். 

கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது வேலை வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். இன்றைய தினம் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும்.தொழிலில், செய்யும் வேலையில் லட்சியங்கள் நிறைவேறும். இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.

தானம் செய்ய வேண்டிய பொருள் :

வைகாசி விசாகத்தன்று அருகில் உள்ள கோவில்களில் முருகனுக்கு நடக்கும் பால் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம். அல்லது வீட்டிலேயே முருகனின் விக்ரஹம் அல்லது வேல் இருந்தால் அவற்றிற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். அன்றைய தினம் வேல் விருத்தம், மயில் விருத்தம் ஆகிய பாடல்களை பாராயணம் செய்து முருகப் பெருமானின் அருளை பெற்றுத் தரும். தண்ணீர்,நீர்மோர்,பானகம்,குடை என குளுமையை தரக் கூடிய ஏதாவது ஒன்றை தானமாக கொடுத்தால் நமது வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கி, மனத்திற்கு இதம் தரும் வகையில் வாழ்க்கை வசந்தமயமாக மாறும்.

வைகாசி மாதம் என்பதே கோடை காலம் நிறைவடைந்து வசந்த காலம் துவங்குவதற்கான ஆரம்பம் தான். அதனால் தான் கோடை காலத்தின் நிறைவாக திருச்செந்தூர் உள்ளிட்ட பல கோவில்களில் வசந்த விழா என்றொரு விழா எடுக்கப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழாவின் போது நாள்தோறும் முருகப் பெருமான் எழுந்தருளி அருள் செய்யும் மண்டபத்திற்கு வசந்த மண்டபம் என்றே பெயர்.

வைகாசி விசாகம் கொண்டாடுவதால் கிடைக்கும் பலன்கள்:

   - குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், குழப்பங்கள் நீங்கும்
   - தம்பதிகளிடையே ஒற்றுமையை உறுதிசெய்து குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துகிறது
   - பக்தர்களை தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறார்
   - தம்பதிகளுக்கு சந்ததியைக்(குழந்தை வரம்) கொடுக்கிறது.
   - வாழ்க்கையில் மகிழ்ச்சியை மீட்டெடுக்கிறது மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்கிறது

செல்வம் பெருகும் வைகாசி விசாகம்:

முருகப் பெருமானைஆலயத்திற்குச் சென்று வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு ஆபத்துக்கள் அகலும். அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.

பிரச்சினைகள் நீங்கும் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், இயலாதவர்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள். ஞானகுரு முருகப் பெருமானை, வேலவனுக்கு உகந்த வைகாசி விசாக நட்சத்திர நாளில், வணங்கி வளம் பெறுவோம். கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளுவார் வேலவன்.

 

#vaikasivisakam #birthstory #lordmurugan #வைகாசிவிசாகம் #thirupugazh #kanthasastikavasam #devotionalsongs