சித்ரா பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வரலாறு | ஆன்மீகமும் அறிவியலும் | Chitra Poornami Features and History | Spirituality and Science

sathiya 73 05/3/2024
 சித்ரா பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வரலாறு | ஆன்மீகமும் அறிவியலும் | Chitra Poornami Features and History | Spirituality and Science

தமிழர்களின் மாதம் சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியபகவான் ராசி மண்டலத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே முதல் மாதம். என்றாலும் மாதங்களின் பெயர்கள் பெரும்பாலும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. எந்த நட்சத்திர நாளில் பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே பெரும்பாலும் அந்த மாதத்தின் பெயராக இருக்கும். குறிப்பாக முதல் மாதத்தில் பௌர்ணமி வரும் நட்சத்திரம் சித்திரை.ஆதலால் அந்த மாதம் சித்திரை எனப்பட்டது.

சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நிகழும் நாள் இந்த சித்ரா பௌர்ணமி.

சித்ரா பௌர்ணமி உண்மையான அறிவியல் காரணத்தை பழைய சித்ரா பௌர்ணமி  வரலாற்றிற்குப் பிறகு காண்போம்.

பழைய சித்ரா பௌர்ணமி வரலாறு:

இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.

தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் கொடுக்காதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் எனப் பெயர் பெற்றார்.

சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாகப் பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.

தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது தங்களுக்கு குழந்தையில்லை எனும் குறைதான். இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள். இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவபெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார்.

இந்திரனின் அரன்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச்செய்த சிவபெருமான், அந்தப் பசுவுக்கு குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் குழந்தை பாக்கிய குறையை தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் எடுத்துரைக்கஇ,எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும், இந்திராணியும் சம்மதித்தனர். காமதேனுவுக்கு குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர். அவர் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் சித்திரா குப்தன் என அழைக்கப்படுகின்றார்.


வசந்த காலம்(சித்திரை மாதம்):

சித்திரையின் வருகை வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கிறது. குளிர்க்காலம் முழுமையாக முடிந்து இதமான இளம் வெயில் தொடங்கும். மாம் பூக்கள் மலர்ந்து எங்கும் மணம் பரப்பும் அதோடு வேப்பம் பூக்களும் பூத்திருக்கும். இது வாழ்வில் இனிமையும் கசப்பும் இணைந்தேகாணப்படும். என்ற தத்துவத்தை விளக்குவதாக உள்ளது.


சித்ரா பௌர்ணமி அறிவியல் காரணம்:

ஆன்மீகமும் அறிவியலும் பிரிக்க முடியாதவை.நம் முன்னோர்கள் அதற்கென்று சில  திருவிழாக்கள் உருவாக்கினார்கள்.சித்ரா பௌர்ணமி அன்று கொண்டாடப்படும்,அனைத்து பண்டிகைகளும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டது.

சித்திரை மாதத்தில் ஆறுகளில் தண்ணீர் வற்றி இருக்கும். கோடையின் தாக்கம் கடுமையாக இருக்கும். இந்த நேரத்தில் உடலைக் குளுமை படுத்த ஆறுகளில் ஊற்று தோண்டி குளிப்பர்.
ஆற்று நீரை விட ஊற்று நீர் சுவையாகவும், உடலுக்கு குளுமை தருவதாகவும் இருக்கும். இதனால் மக்கள் புழுக்கம் மிகுந்த இரவு நேரத்தில் ஆறுகளைத் தேடி வருவர். ஊற்றுகளின் அருகில் இருப்பது மனதிற்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.

சித்ராபௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராகப் பெருமாள் ‘நடவாவி’ என்னும் கிணற்றுக்குள் எழுந்தருள்வார். ஸ்ரீராமாநுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலித்த வைபவத்தைக் கொண்டாடும்விதமாக இந்தத் திருவிழா நடந்து வருகிறது.

திருவூறல் திருவிழா:ஊற்றுகள் முன் விநாயகர் சிலைகள் வைத்தனர்.வழிபாடு நடத்தப்பட்டது.மேலும் சிவனுக்கு உகந்த அலங்காரம் செய்து, ஊற்றைச் சுற்றி வலம் வந்தனர். இதற்கு திருவூறல் திருவிழா என்று பெயர்..

இந்த சித்ராப் பௌர்ணமி நாளில்தான் அழகர் ஆற்றில் இறங்குவார். மக்கள் வைகையின் நதிக்கரை ஓரங்களில் எல்லாம் விழாக் கொண்டாடுவார்கள். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டுக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.

மதுரையில் ,சித்ராப் பௌர்ணமியன்று அழகர் திருவிழா நடப்பதும் குளிர்ச்சியை பெறவே.

அழகர் வேடமிட்ட, பக்தர்கள், தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, உடலைக் குளிர்விக்கவே.இதையே அழகர் , நமக்கெல்லாம் தீர்த்தம் அளிப்பதாக, ஆன்மீக ரீதியாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சித்ராப் பௌர்ணமியன்று, இந்த உண்மைகளை உணர்ந்து, நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்,.தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என்றும் உறுதியெடுப்போம்.🙏