அண்ணாமலையாரின் அருளைப் பெறும் கார்த்திகைத் தீபத் திருநாளின் சிறப்பகள் - Highlights of Karthika Deepa Festival

uma 17 29/11/2024
 அண்ணாமலையாரின் அருளைப் பெறும் கார்த்திகைத் தீபத் திருநாளின் சிறப்பகள் - Highlights of Karthika Deepa Festival

வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது கார்த்திகைத் தீபத்திருநாளின் சிறப்புகளையும் திருவண்ணாமலையின் சிறப்புகளையும் காணலாம்.

கார்த்திகை மாதம் தமிழர்கள் வாழ்வில் தனி இடம் பெற்ற மாதமாகும். கார்த்திகை நட்சத்திரம் தனி மதிப்பு பெற்ற நட்சத்திரமாகும்.

சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்தபோது சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகப்பெருமான் அவதாரம் எடுத்ததாக புராணங்கள் விளக்குகின்றன.

சுப நட்சத்திரமான கார்த்திகை தீமைகள் அனைத்தையும் போக்கும். எனவே திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்றி கந்தனை துதிப்பது மரபு.

கடுமையான தவம் செய்த அன்னை பார்வதி தேவி, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் சிவனின் இடப்பாகம் அடைந்தார். அவ்வாறு, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக அவதரித்த தலம் திருவண்ணாமலை என்று அருணாசல புராணம் கூறுகிறது. சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மா இருவருக்கும் ஜோதியாய் காட்டிய நாளாக திருக்கார்த்திகை திருநாள் கருதப்படுகிறது. முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்காவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

மகாபலி சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் ஏற்பட்ட புண்களை போக்க நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம் ஏற்றியதால் மாபலியின் புண்கள் குணமாகியது. திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் அன்றிலிருந்து தொடங்கியதாகவும் நம்பப்படுகிறது.

கார்த்திகை மாதம் முப்பது நாட்களும் அதிகாலை நீராடி பின் பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வரிசையாக தீபம் ஏற்றி வழிபடுவது குறைவற்ற மகிழ்ச்சியைத் தரும் என்று புராணங்கள் விளக்குகின்றன.

திருக்கார்த்திகை அன்று எங்கும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.. அன்று விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொரி உருண்டைகள் அல்லது கார்த்திகை பொரிகள் வழிபாட்டில் இடம் பெறுகின்றன. அன்றைய தினம் கோவில்களில் சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உண்டு.

கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்ற முடியாதவை துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமாவது தீபம் ஏற்ற வேண்டும்.

திருக்கார்த்திகைக்கு வீடுகளில் தொடங்கி கோயில்கள் வரை பல்வேறு வகையான தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இந்த விளக்குகள் ஒவ்வொன்றும் தனிச் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தீபம் மகாலட்சுமியின் இருப்பிடம். மாலை வேளைகளில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றினால் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை. தீபங்களுக்குப் பல பயன்கள் உண்டு. விளக்குகளின் சில முக்கிய வகைகளையும் அவற்றின் சிறப்புகளையும் அவற்றில் காணலாம்.

ஆகாச தீபம் – வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த இடத்தில் வைக்கப்படும் தீபம் ஆகாச தீபம். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதியில் இந்த தீபம் ஏற்றுவது நல்லது.

மாலா தீபம் – அடுக்கடுக்கான தட்டுகள் கொண்ட அடுக்கில் ஏற்றப்படுவது

ஜலதீபம் என்பது வாழை மட்டை அல்லது வெற்றிலை மீது எலுமிச்சை கொண்டு விளக்கை ஏற்றி நீர்நிலைகளில் விடுவது. ஆடிப்பெருக்கில் காவிரி ஆற்றில் ஜலதீபம் ஏற்றப்படுகிறது. உயிர் தரும் நீரை வழிபட ஏற்றும் தீபம் இது.

மோட்ச தீபம் – கோவில் கோபுரங்களில் ஏற்றப்படும் இந்த தீபமானது முன்னோர்களின் நன்மைக்காக ஏற்றப்படுகிறது.

சர்வ தீபம் – மாலையில் வீட்டைச் சுற்றிலும் வைக்கப்படுவது சர்வ தீபமாகும். இது தீவினைகள் வீட்டை அண்டாமல் பாதுகாக்கும்.

அகண்ட தீபம் - மலை உச்சியில் ஒரு பெரிய கொப்பரையில் ஏற்றப்படும் தீபம் இதுவாகும். இந்த மாபெரும் தீபம் திருவண்ணாமலை, சபரிமலை, திருப்பரங்குன்றம், பழனி போன்ற தலங்களில் மக்கள் மீது கடவுளின் ஆசிகளைப் பொழிவதற்காக ஏற்றப்படுகிறது.

மாவிளக்கு தீபம் – நோய் நொடிகளிலிருந்து விடுபடவும், வேண்டுதல்களை நிறைவேறவும் மாவிளக்கு தீபம் ஏற்றப்படுகிறது.

திருக்கார்த்திகை அன்று ஏற்றி வைக்கும் தீபங்களை யார் பார்த்தாலும், மிருகங்கள் கூட கண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை தீப திருநாளில் 60 வயது நிறைவடைந்த சுமங்கலிப் பெண்ணைக் கொண்டு முதலில் தீபம் ஏற்ற வேண்டும். பின் அந்த விளக்கில் இருந்து சுமங்கலி பெண்கள் ஆறு தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் அதிலிருந்து தீபங்கள் ஏற்றி வீட்டை அலங்கரித்தால் வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலையின் சிறப்புகள் :

திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி என்றும் ,காசியில் இறந்தால் முக்தி என்றும் ,காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி என்றும், தில்லையை தரிசித்தால் முத்தி என்பார்கள் ஆன்றோர்கள். ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்றும் கூறுகிறார்கள். சிவபெருமான் ஜோதியாக நின்ற ஸ்தலம் இதுவாகும். பிரம்மா மற்றும் விஷ்ணுவின் ஆணவம் அழிந்த இடம் திருவண்ணாமலை. ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்த ஸ்தலமாகும். மேலும், அருணகிரிநாதர் திருப்புகழைப் பாடுவதற்காக முருகப்பெருமான் அடி எடுத்துக் கொடுத்த ஸ்தலமும் இதுவாகும் . பௌர்ணமி கிரிவலத்துக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம், கார்த்திகை தீபத்தின் மூலாதாரமாகவும் கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் மலை மீது கோவில்கள் இருக்கும் ஆனால் திருவண்ணாமலை மலையே கடவுளாக கருதப்படுகிறது. அந்த மலையே லிங்க ஸ்வரூபமாகவும் ஜோதியே இறைவனாகவும் வழிபடப்படுகிறது. இந்த மலை 260 ஆண்டுகோடி பழமையானதாகும்.

கார்த்திகை தீபத் திருநாள் தான் தமிழர்களின் உண்மையான தீபாவளி என்றும் கூறப்படுகிறது. மாலை 5:58 மணியளவில் அர்த்தநாரீஸ்வரர் திருவண்ணாமலையில் காட்சி தந்த 2 நிமிடம் கழித்து திருவண்ணாமலை உச்சி மீது மகா தீபம் ஏற்றப்படுகின்றது. இந்த மகா தீபம் கண்ட பின்னர் தான் அனைவரும் வீடுகளிலும் திருக்கார்த்திகை விளக்கு ஏற்றவது மரபு.

ஏழு அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும். சுமார் 3000 கிலோ பசு நெய்யில் , ஆயிரம் மீட்டர் காடா துணியினால் திரி கொண்டு, 2 கிலோ கற்பூரம் இடப்பட்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் 11 நாட்கள் எரிந்து கொண்டிருக்கும் என்றும் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை தெரியும் என்றும் கருதப்படுகிறது. கண்ணுக்குத் தெரிந்த கடவுளாக நம்பப்படுவது சூரியன், அந்த சூரியனை நாம் காண உணர அது வெளிப்படுத்தும் நெருப்பும் ஒளியும் ஆகும். அந்த ஒளியின் கடவுளாக விளங்கும் அண்ணாமலையாரை வழிபடுவதால் வாழ்வில் இருள் நீங்கி இன்பவொளி நிலவும்.

எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?

வீட்டு முற்றத்தில் 4 விளக்குகளும்,

சமையல் கூடத்தில் 1,

 வீட்டு நடைவாசலில் 2,

 வீட்டின் பின்புறம் 4 விளக்குகளும்,

திண்ணையில் 4 விளக்குகளும்,

மாட குழியில் 2 விளக்குகளும்,

நிலைப்படியில் 2 விளக்குகளும்,

சாமி படங்களுக்கு கீழே 2 விளக்குகளும்,

வீட்டின் வெளியே யம தீபம் ஒன்றும்,

திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என்று மொத்தமாக 27 விளக்குகள் ஏற்றுவது சிறப்பு.

இயலாதவர்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்குகளை ஏற்றலாம்

27 விளக்குகள் என்பது 27 நட்சத்திரங்களை குறிப்பதாகும். எனவே 27 விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளில் இறைவனின் அருளைப் பெறுவோம்.