கடன், பிணி மற்றும் சத்ருக்களை அழிக்கும் சரபேஸ்வரர் வழிபாடு - Worship of Sarabheswarar who destroys debts and enemies

uma 39 19/11/2024
 கடன், பிணி மற்றும் சத்ருக்களை அழிக்கும் சரபேஸ்வரர் வழிபாடு - Worship of Sarabheswarar who destroys debts and enemies

வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது கடன், பிணி மற்றும் சத்ருக்களை அழிக்கும் சரபேஸ்வரர் வழிபாடு.

தசாவதாரங்களைப் போலவே பக்தன் பிரகலாதனுக்காக பகவான் விஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். நரசிம்ம அவதாரத்திற்கும் பரமசிவன் எடுத்த சரபேஸ்வர அவதாரத்திற்கும் தொடர்பு உண்டு. உலகெங்கும் ஒவ்வொரு உயிரிலும் வியாபித்திருக்கும் பகவான் விஷ்ணு விலங்கும் இல்லாமல், மனிதனும் இல்லாமல் அதி அற்புத வடிவில் அவையோர் அனைவரும் காண தோன்றினார். ‘திசை திறந்து அண்டங்கீறி சிரித்தது செங்கட்சியம்’ என்கிறார் கம்பர்.

சரணடைய மறுத்த இரண்யகசிபுவைக் கொன்று அவன் இரத்தத்தைக் குடித்து பெரும் ஆரவாரமாக இருந்த நரசிம்மரின் சினம் கண்ட தேவர்கள் அஞ்சினர். நரசிம்மர் உலகங்களை அழித்து விடுவார் என அனைவரும் திகைத்து நிற்கும் போது தான் நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க சரபேஸ்வர அவதாரம் நடந்தது.

 சிவனிடம் தேவர்கள் வேண்டி நிற்க, சிவனோ வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் நரசிம்ம மூர்த்தியின் முன் சென்று துதித்தார். 'அசுரனை அழித்து உலகிற்கு நன்மை செய்த நீ இந்த கோர வடிவத்தையும் கோபத்தையும் அடக்கி சாந்தம் அடைய வேண்டும்." என வீரபத்திரர் வேண்டியும் நரசிம்மர் அவரை துன்புறுத்த, வீரபத்திரரோ சிவபெருமானை நினைத்து தியானம் செய்தார். அந்த நேரத்தில் வீரபத்ரரின் உடலில் ஒரு ஜோதி நுழைந்தது, அதில் ஒரு பாதி பயங்கரமான மிருகமாகவும், மற்ற பாதி கொடூரமான பறவையாகவும் மாறியது. அதுதான் சரபம். அப்படி அவதரித்த சரபேஸ்வரர் நரசிம்மரை தன் சிறகுகளாலும், கால்களாலும் கட்டி அணைக்க, நரசிம்மரின் சினம் தணித்து உலகைக் காப்பாற்றினார். ஸ்ரீமன் நாராயணனும் குருதியைக் குடித்ததால் உண்டான ராஜகுணம் நீங்கி சாந்தமடைந்தார்.

சரபரின் உருவ அமைப்பு:

சரபேஸ்வரர், ஈஸ்வரனின் அம்சம், சந்திரன், சூரியன் மற்றும் நெருப்பு ஆகியவற்றை கண்களாக் கொண்டு, கூர்மையான நகங்கள், நீண்ட வால் எட்டு கால்கள், இரு சிங்க முகங்கள், நான்கு பக்கங்களிலும் சுழலும் உக்ரமான நாக்கு, காளி மற்றும் துர்க்கையை தனது சிறகுகளாகக் கொண்டு பறந்து எதிரிகளை அழிக்கும் பட்சிகளின் அரசனாக, ‘சாலுவேஷன்’ என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். சரபேஸ்வரர்.

சரபேஸ்வரரின் சக்திகள் பிரத்யங்கிரா மற்றும் சூலினி துர்கா. அவை இரண்டும் சரபேஸ்வரரின் இரு சிறகுகளைக் குறிக்கின்றன. நரசிம்மரை அடக்க காரணமான பிரத்யங்கிரா அதர்வண பத்ரகாளி என்று அழைக்கப்படுகிறார்.

சரபர் கைகளில் மான், பாம்பு, மழு நெருப்பு ஆகியவற்றை ஏந்தியிருக்கிறார். அகந்தை அழிய, ஒருவர் மனதை சத்வ குணத்தால் நிலைப்படுத்தி, குண்டலினி சக்தியை எழுப்பி, சுய ஞானம் பெற வேண்டும் என்பதையே இந்த வடிவமைப்பு விளக்குகிறது. கொடிய பகைவரை அழித்து, சரணடைந்தவருக்கு முடிவில்லா துன்பங்களிலிருந்து அடைக்கலம் தரும் தெய்வமாக சரபமூர்த்தியை வேதங்கள் போற்றுகின்றன. எதிரிகள், நோய், காடு பயம், தீ, பாம்பு, எலி, பெருச்சாளி, யானை, கரடி, பூதம் போன்றவற்றால் ஏற்படும் தீமைகளிலிருந்து சரபரே மக்களைக் காக்க வேண்டும் என்று அதர்வண வேத மந்திரம் கூறுகிறது.

சரப மந்திரத்தின் மிகப்பெரிய சக்தி பகையை அழிப்பதாகும். காமம், வெறுப்பு போன்ற மனிதர்களின் உள்ளார்ந்த வெறுப்பை அழித்து மனிதனை செம்மைப்படுத்துவதே சரப மந்திரத்தின் நோக்கம்.

ஸ்ரீ சரபரை தரிசனம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் தோஷங்கள், மாந்திரீகம், சூனியம் போன்ற தோஷங்கள் நீங்கி நம்மை காக்கும். பிரதோஷ காலத்திலும், ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்திலும் சரபேஸ்வரரை வழிபட்டால் எதிரிகளின் பயம் நீங்கி மன நிம்மதியுடன் வாழலாம்.

சரபேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம்:

”ஓம் சாலுவேசாய வித்மஹே,

பக்ஷிராஜாய தீமஹி,

தந்நோ சரப ப்ரசோதயாத்!”

வேண்டுதல்கள்​​​​​​​:

எதிரிகளை அழிக்க இவரை வழிபடலாம். சரபேஸ்வரரை வழிபடுவது நமக்கு துரோகம் செய்பவர்கள், ஏமாற்றுபவர்கள், சூழ்ச்சி செய்பவர்கள் ஆகியோரை எதிர்த்து போராட உதவும். கோவிலுக்கு சென்றால் சரபேஸ்வரரை வணங்க மறக்காதீர்கள். எந்த ஒரு கஷ்டத்திற்கும் பரிகாரம் உண்டு, ஆனால் சில கஷ்டங்கள் தீர்ந்தாலும் நிவாரணம் கிடைக்காது, அப்படிப்பட்டவர்கள் சரபேஸ்வரரை தொடர்ந்து வழிபடலாம். மருத்துவர்களால் கைவிடப்பட்ட தீராத நோய்களைக் கூட குணப்படுத்தும் அற்புத சக்தி அவருக்கு உண்டு. ஏவல், பில்லி, சூனியம் போன்ற எந்த வகையான பிரச்சனைகளுக்கும் சரபேஸ்வரர் வழிபாடு சிறந்த வழிபாடாக இருந்து வருகிறது.

சரபேஸ்வரர் ஆலயங்களின் தோற்றம்:

சோழர்களின் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு தொடங்கியது. சரப மூர்த்தி வடிவத்தினைக் கோயில்களில் அமைத்து வழிபடுவதால் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். போர்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றே சோழர்கள் சரபேஸ்வரர் வழிபாட்டினைத் தொடங்கினார்கள்.

துக்காச்சி:

கும்பகோணத்திற்கு அருகே உள்ள துக்காச்சி என்ற ஊரில் இருக்கும் ஆபத்சகாயேசுவரர் கோயிலில் தான் முதன் முதலாக சரபமூர்த்தியின் சிற்பம் அமைக்கப்பட்டது. விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் உள்ள சரபேஸ்வரர் சிலைதான் தற்போதுள்ள சரபேஸ்வரரின் சிலைகளில் மிகப் பழமையானதாகும்.

தாராசுரம்:

தஞ்சை மாவட்டம், தாராசுரம் எனும் ஊரில் ஐராவதேசுவரர் ஆலயத்தில் உள்ள சரபேஸ்வரர் வடிவமைப்பு தான் தமிழகத்தின் இரண்டாம் சிறப்பாகும். இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இத்தலத்தின் ராஜ கம்பீர மண்டபத்தினுடைய மேற்குப்பக்கச் சுவரில் சரபேஸ்வரரின் அழகிய சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழிபடும் நேரம்:

சரபேஸ்வரரை ஞாயிற்றுகிழமை தோறும் ராகு கால நேரத்தில் (மாலை 4.30-6) வழிபடுவது நல்ல பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சமாவார் அதனால் 11 நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும்.