உலகைக் காக்க அன்னை அவதரித்ததைக் கொண்டாடும் நவராத்திரி வழிபாடு மற்றும் கொலு வைப்பதன் முக்கியத்துவம் - Worship of Navratri and Importance of Golu

uma 70 30/9/2024
 உலகைக் காக்க அன்னை அவதரித்ததைக் கொண்டாடும் நவராத்திரி வழிபாடு மற்றும் கொலு வைப்பதன் முக்கியத்துவம் -  Worship of Navratri and Importance of Golu

வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது அசுரனை அழித்து உலகைக் காக்க அன்னை அவதரித்ததை நினைவு கூறும் வகையில் நாம் கொண்டாடும் நவராத்திரி விழாவின் சிறப்புக்கள் மற்றும் நவராத்திரியில் கொலு வழிபடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பார்க்கலாம்.

நெடுங்காலமாக உலக மக்களை துன்புறுத்தி வந்த அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போர் செய்து 10வது நாளில் அவனை வென்றதாகக் கூறப்படுகிறது. இதன் நினைவாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானுக்கு சிவராத்திரி உகந்தது என்றால் அம்பாளுக்கு நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பதாவது நாள் நவமி திதி வரையிலான ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பிகை காட்சியளிப்பாள்.

நவராத்திரி வழிபாடு தோன்றிய வரலாறு:

காசிப முனிவருக்கும் அவரது மனைவி திதி தேவிக்கும் சும்பன், நிசும்பன் எனும் அரக்கர்கள் பிறந்தார்கள். இந்த அரக்கர்கள் பல வருடங்கள் தவம் செய்து பிரம்மா மற்றும் சிவனிடம் பலவித வரங்களைப் பெற்று மக்களுக்கும் தேவர்களுக்கும் பலவிதமான துன்பங்களை ஏற்படுத்தி வந்தனர். சும்பனும் நிசும்பனும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தவம் செய்து, 'தங்களை யாரும் அழிக்கக்கூடாது' என்று பிரம்மாவிடம் வரம் கேட்டனர், அது எப்படி அழியாமல் இருக்க முடியும் என்று பிரம்மன் கேள்வி எழுப்பினார். அதன்பிறகு, அந்த அசுரர்கள் பிரம்மனிடம் தாங்கள் இறக்கும் தருணம் நடந்தால், ஒரு கன்னியின் கையால் இறக்க வேண்டும் என்று வரம் கேட்டனர். அதன் பிறகு சும்பனும் நிசும்பனும் மூன்று உலகங்களையும் தேவர்களையும் வாட்டி வதைத்தனர். தேவர்கள், மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் சென்று முறையிட்டனர். மும்மூர்த்திகள் மகேஸ்வரி, கௌமாரி, வாராஹி, மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டி என பல அவதாரங்களை ஒன்று சேர்த்து ஒரு அவதாரமாக உருவாக்கினர், அவளே துர்க்கையாவாள்.

 இதற்குப் பிறகு, துர்கா தேவி ஒரு அழகான இளம் பெண்ணாக உருவெடுத்து பூலோகம் வந்தாள். அரக்கர்கள் சும்பன் மற்றும் நிசும்பனின் தளபதிகளான சண்டன் மற்றும் முண்டன் ஆகியோர் இளம் பெண்ணாக அவதரித்த துர்கா தேவியை தங்கள் அரக்க அரசனுக்கு திருமணம் செய்து வைக்கும் நோக்கத்துடன் வற்புறுத்தியுள்ளனர். அப்போது துர்கா தேவி, "என்னை போரில் தோற்கடித்து வெற்றி பெறுபவரையே நான் மணப்பேன்" என்று சபதம் செய்தாள். சண்டன் முண்டன் இதைத் தங்கள் அரசர்களிடம் கூறியபோது, நிசும்பன் நிச்சயமாக போரில் வெற்றி பெற்று, அந்த இளம் பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள எண்ணி, ஒவ்வொரு அசுரனையும் போருக்கு அனுப்பத் தொடங்கினான். கிட்டத்தட்ட 60 ஆயிரம் அர்க்கர்களை தேவியை வெல்ல அனுப்பினான் நிசும்பன். கோபம் கொண்ட பார்வதி தேவி, அந்த அரக்கர்களையெல்லாம் அழித்து கொன்றாள்.

இறுதியாக அரக்க அரசன் சும்பன் சண்டாவையும் முண்டாவையும் தேவியைக் கடத்தி வர அனுப்பினான். ஆனால் பார்வதி தேவி சண்டா மற்றும் முண்டாவின் தலைகளை வெட்டி எறிந்தாள். இதையெல்லாம் பார்த்த சும்பனும் நிசும்பனும் தேவிக்கு எதிராக ரத்த பீஜன் என்ற அரக்கனை அனுப்பினார்கள். இந்த ரத்த பீஜன் தனது உடலில் இருந்து விழும் ஒவ்வொரு இரத்தத் துளியிலிருந்தும் மற்றொரு ரத்த பீஜன் தோன்ற வேண்டும் என்று கடுமையான தவம் செய்து வரம் பெற்றதால், தேவி அவனை அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் தோன்றினான். இறுதியாக, துர்க்கா தேவி தனக்குள் இருந்த காளி சாமுண்டியை தன் வாயை அகலத் திறந்து, ரத்த பீஜனின் உடலில் இருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் குடிக்கும்படி கட்டளையிட்டார். துர்க்கையின் கட்டளைப்படி, காளியும் ரத்த பீஜனின் இரத்தத்தை முழுவதுமாக குடித்து ரத்த பீஜனைக் கொன்றாள். அனைத்து அசுரர்களும் இறந்த நிலையில், இறுதியாக சும்பனும் நிசும்பனும் நேரடியாக தேவியுடன் போரிட முன் வந்தனர். பின்னர் அவர்கள் பெற்ற வரங்கள் அனைத்தும் ஒன்றும் ஆகாது போகவே, அவர்கள் தேவியால் கொல்லப்பட்டனர். இவ்வாறு, துர்கா தேவி 9 அவதாரங்களை எடுத்து 9 நாட்கள் போர் புரிந்தாள். இந்த 9 நாட்களும் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த 9 அவதாரங்கள் மற்றும் அவற்றின் சக்திகளைக் கொண்டாடுவதற்காக 9 நாள்கள் கொலு வைத்து கொண்டாடப்படுகிறது.

 வழிபடும் முறை:

 நவராத்திரியில் 9 நாட்களில் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். கொலு வைப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலமிட்டு வழிபட நவக்கிரக பலன்கள் கிடைக்கும்.

தினசரி நவராத்திரி பூஜையின் முடிவில், பல்வேறு மங்களகரமான பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்கள், ரிப்பன்கள் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக வழங்க வேண்டும்.

கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடைகள் வழங்குவது நவராத்திரி பண்டிகையின் முக்கிய அம்சமாகும்.

ராமபிரான் நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்த பிறகுதான் சீதையின் இருப்பிடம் தெரிய வந்தது என்று தேவி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.

சண்டி என்பது மூன்று சக்திகள் ஒன்றான வடிவம். மூன்று தேவியர்களையும் ஒருசேர வழிபடுவது இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி தினத்தில் இதைச் செய்வது நல்ல பலன்களைத் தரும்.

ஏன் கொலுவில் பொம்மைகள் வைத்து வழிபடுகிறோம்?

மகாராஜா சுரதா தன் எதிரிகளை வெல்ல, குரு சுமதாவிடம் ஆலோசனை கேட்டார். குருவின் அறிவுரைப்படி, சுத்தமான ஆற்று மணலால் ஒரு காளிரூபத்தை செய்தார். அதை அன்னை காளியாக அலங்கரித்து மிகுந்த பக்தி சிரத்தையுடன் உண்ணா நோன்பிருந்து வழிபட்டார். அம்பிகை அவர் வேண்டுதலை நிறைவேற்றி பகைவர்களை அழித்து ஒரு புது யுகத்தை உருவாக்கினாள்.

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்த பொம்மையால் தன்னைப் பூஜித்தால் சகல சௌபாக்கியங்களையும் தருவேன் என அம்பிகையே கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே தான் நவராத்திரியில் கொலு வைத்து வழிபடும் வழக்கம் உருவானது. பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் கொலு வைப்பது குறித்து, கூறப்பட்டுள்ளது.

கொலு வைப்பதன் நோக்கம் :

கொலுவில் ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு பொம்மைகள் வைத்து வழிபடுவதன் நோக்கம், மனிதன் படிப்படியாக தன் இயல்பை வென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கிறது.

மனிதன் படிப்படியாக முன்னேறி கடவுள் நிலையை அடைய முடியும் என்பதையும் கொலுவின் தத்துவம் உணர்த்துகிறது.

எந்த ஒரு உயிரும் படிப்படியாக பிரம்மத்தை அடைய முடியும் என்பதை போதிக்கும் வகையில் கொலு அமைக்கப்படுகிறது.

நவராத்திரியில் எத்தனை படிகள் என்னென்ன பொம்மைகள்

நவராத்திரிக்கு 3, 5,7 என ஒற்றை வரிசையில் படிகள் வைக்கலாம். 9 படிகள் வைப்பது மிகவும் சிறப்பு.

முதல் படி - புல், செடி, கொடி போன்ற ஓரறிவு உடைய உயிரினங்களின் பொம்மைகள்

இரண்டாம் படியில் - நத்தை, சங்கு போன்ற ஈரறிவு கொண்ட பொம்மைகள்.

மூன்றாம் படியில் - மூன்றறிவு உயிரினங்களான கரையான், எறும்பு பொம்மைகள்.

நான்காம் படியில் - நான்கறிவு உடைய நண்டு, வண்டு, தும்பி போன்ற பறப்பன ஊர்வன பொம்மைகள்.

ஐந்தாம் படியில் - ஐந்தறிவு உடைய நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.

ஆறாம் படியில் - ஆறறிவு உடைய மனிதர்களின் திருமண மற்றும் நடன பொம்மைகள்.

ஏழாம் படியில் - மனிதர்களுக்கு மேலான மகான்கள் மற்றும் சித்திர்களின் பொம்மைகள்.

எட்டாம் படியில் - தெய்வங்களின் அவதாரங்கள், அஷ்டலக்ஷ்மிகள் மற்றும் தேவர்களின் உருவங்கள், நவகிரகங்கள் பொம்மைகள்.

ஒன்பதாம் படியில் - மும்மூர்த்திகள், முப்பெரும் தேவியர்கள், விநாயகர், முருகர் ஆகிய தெய்வங்களையும் வைக்க வேண்டும்.

அம்பிகை நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில்:

முதல் நாள் மதுகைடபர் அழிவுக்கு காரணமான தேவியை குமாரி வடிவமாகவும், இரண்டாவது நாள் மகிஷாசுரனின் சேனைகளை வதம் செய்ய புறப்பட்ட ராஜ ராஜேஸ்வரியாகவும், மூன்றாவது நாள் மகிஷாசுரனை வதைத்த அம்பிகையை சூலத்துடன் அசரன் தலை மீது நிற்கும் கோலத்திலும், நான்காவது நாள் அம்பிகையை வெற்றித் திருக்கோலத்திலும். ஐந்தாம் நாள் அம்பிகை, அசுரன் சும்பனின் தூதன் வந்து பேசுவதை கேட்கும் கோலத்திலும் வழிபட வேண்டும். ஆறாவது நாள் அன்று சர்ப்ப ராஜ ஆசனத்தில் ஸ்ரீ சண்டிகாதேவி அமர்ந்த கோலம் சிறப்பானது. ஏழாவது நாளில் சண்டமுண்டர்களை வதைத்த பின் பொன்பீடத்தில் தேவி அமர்ந்து வீணை வாசிக்கும் கோலத்திலும், எட்டாவது நாளில் ரத்த பீஜனை வதைத்த பின் கருணை நிறைந்த தோற்றத்துடனும், ஒன்பதாவது நாளில் வில், அம்பு, அங்குசம், சூலம் ஆகியவைகளை சூடிய கோலத்தில் அம்பிகையை பூஜிக்க வேண்டும். பத்தாவது நாளன்று அம்பிகை சிவலிங்கத்தைப் பூஜித்து சிவசக்தி ஐக்யரூபமாக விளங்குகிறாள்.

நம்மைக் காக்க அவதரித்த அன்னை பராசக்தியை நவராத்திரி நாட்களில் வழிபட்டு அன்னையின் பரிபூரண அருளைப் பெறுவோம்!!