ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ பல பாவங்களைச் செய்கிறார்கள். இதற்குப் பரிகாரமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு விரதம் ரத சப்தமி விரதம்.
தை முதல் நாளில் தமிழ் பண்டிகையாக சூரியனை வணங்குகிறோம். தை மாதத்தின் வளர்பிறையின் ஏழாவது நாளில் வரும் திதி ரத சப்தமியாகக் கொண்டாடுப்படுகிறது.
இந்த நாளை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகிறோம்.
2025ஆம் வருடம் பிப்ரவரி 4ந் தேதி ரத சப்தமி வழிபடப்படுகிறது.
புராணக்கதை
காஷ்யப ரிஷியின் மனைவியும், கர்ப்பிணியுமான அதிதி, ஒரு நாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது, வெளியில் இருந்து பசியால் வாடிய அந்தணர் ஒருவர் உணவு கேட்டார். அதிதி தனது கணவருக்கு உணவு பரிமாறி, அவர் சாப்பிட்ட பிறகு, உணவை எடுத்து அந்தணருக்குக் கொடுத்தாள். இதை உதாசினமாக நினைத்த அவர், "உன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து பிறக்கும்" என்று அவளை சபித்தார். ஆரம்பத்தில் அதிதி வருத்தப்பட்டாலும், அவர்களின் நல்ல எண்ணத்திற்கு, ஒளி பொருந்திய சூரியன் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலகம் முழுவதும் வலம் வருவதால், திதியின் ஏழாவது நாளான சப்தமி அன்று ரத சப்தமி விரதம் அனுசரிக்கப்படுகிறது,
ரத சப்தமி விரதம் :
ரத சப்தமி தினத்தன்று, அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து (பெண்கள் மஞ்சள் தூள் மற்றும் அட்சதை பயன்படுத்த வேண்டும், ஆண்கள் அட்சதை மட்டும் பயன்படுத்த வேண்டும்), கண்களுக்கு அருகில் இரண்டு, தோள்களில் இரண்டு கால்களில் ஒவ்வொன்று வைத்து குளிப்பதால், ஆரோக்கியமும் செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
ரதசப்தமி நாளில், சூரியனின் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். வெள்ளி அல்லது தாமிர பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். முதலில் கணபதி, குல தெய்வம் மற்றும் சூரிய நாராயணருக்கு பூஜை செய்து, ஆதித்ய ஹ்ருதயம் (சூரியனுக்குரிய துதி) சொல்லி, பின்னர் கோயிலுக்குச் சென்று நவக்கிரக சூரியனையும், சிவபெருமானையும் வழிபட வேண்டும். அன்று, முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.
பீஷ்மருக்கு முக்தி அளித்த எருக்கன் இலை
பீஷ்மர் மகாபாரதத்தின் ஒரு சக்திவாய்ந்த நாயகன். அவரது விதிப்பயனால், அவர் கௌரவப் படையில் சண்டையிட வேண்டியிருந்தது. பீஷ்மர் விரும்பிய நேரத்தில், விரும்பியபடி இறக்க வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தார். ஆனால் அவர் விரும்பியபடி மரணம் நடக்கவில்லை. அங்கு வந்த வேத வியாசரிடம், ஏன் அப்படி என்று கேட்டபோது, அவர் கூறினார்: ‘துரியோதனனின் அவையில், துட்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரித்த போது, அந்த அவையில் யாரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று யாரும் குரல் எழுப்பவில்லை. நீங்களும் அங்கே இருந்தீர்கள். அநீதி செய்வது மட்டுமல்ல, அதைச் செய்பவர்களைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவராகத் தோன்றுவதும் பாவமாகும். இதற்கான தண்டனை உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி.’ என்று கூறினார்.
வேதனையடைந்த பீஷ்மர் வேத வியாசரிடம், “இதற்கு பிராயச்சித்தம் என்ன?” என்று கேட்டார். வியாசர் பீஷ்மரிடம் எருக்க இலைகளைக் காட்டி, “இது அர்கபத்ரம் என்று அழைக்கப்படுகிறது. அர்கம் என்றால் சூரியன். இது சூரியனின் முழு சக்தியையும் கொண்டுள்ளது. எனவே, இந்த இலைகளால் உங்கள் அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உங்களைத் தூய்மைப்படுத்தும்” என்று கூறினார். பீஷ்மர் மெதுவாக ரத சப்தமிக்கு அடுத்த நாள் அன்று தியான நிலையில் முக்தி அடைந்தார். அதனால்தான் ரத சப்தமி அன்று எருக்கன் இலை ஸ்நானம் செய்யப்படுகிறது. ரத சப்தமியைத் தொடர்ந்து வரும் அஷ்டமி திதி பீஷ்ம அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்து, நம் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்தால், நமக்கு என்றென்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
விரத பலன்கள்
ரதசப்தமி நாளில் செய்யப்படும் தான தர்மத்திற்கு பல நன்மைகள் உண்டு. சூரியனுக்கு மிகவும் உகந்த தானியம் கோதுமை. எனவே, பிரசாதத்தில் கோதுமை உணவு படைப்பது சிறந்தது. கோதுமை கலந்த உணவு, சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, மற்றும் அன்னம் போன்றவற்றை கடவுளுக்கு படைத்து பூஜித்த பிறகு, அதை முதியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பசுக்களுக்குக் கொடுத்தால், அடுத்த ஏழு தலைமுறைகளுக்கு புண்ணியம் சேரும். வணிகம் மற்றும் தொழிலில் பெரும் வளர்ச்சி ஏற்படும்.
ரதசப்தமி நாளில், தஞ்சாவூர், சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். ஒளிக் கடவுளான சூரியனாரை விரதம் இருந்து வழிபடுவோம்!! வளம் பெறுவோம்!!