வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விரத முறைகள் மற்றும் பலன்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
மனிதர்களின் பகை குணங்களாகிய காமம், வெகுளி, ஈயாமை, மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுர குணங்களை அழித்து, பெருவாழ்வு பெறுவதே கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.
முருகப்பெருமான் மீது பக்தி சிரத்தையுடன் நோயற்ற வாழ்வு, சிறந்த கல்வி, குறைவில்லா தானியம், செல்வம், அழகு, அழியாத புகழ், குழந்தைப்பேறு, நீண்ட ஆயுள், காரிய வெற்றி, பெருமை, போன்ற செல்வங்களை வேண்டி சஷ்டி விரதமிருப்பது வழக்கம்.
குழந்தை பாக்கியம் :
“சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் உண்டாகும்” என்பது ஆன்றோர் வாக்கு. குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த விரதத்தை தம்பதி சமேதராக இருத்தல் வேண்டும். வீட்டில் பெரியவர்களிடம் நல்லபடியாக விரதத்தை நிறைவு செய்ய ஆசிபெற்று விரதத்தை தொடங்க வேண்டும்.
நடைமுறை கதை :
நீண்ட காலமாக ஒரு பெண்மணிக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. அவள் பல தெய்வங்களை வேண்டியும் பலன் இல்லை. ஒரு முறை சித்தர் ஒருவர் கோயிலுக்கு வந்த சமயம். அந்தப் பெண் அந்த சித்தரிடம் தன் நிலையைச் சொன்னாள். "குடம் பிடித்தான், சட்டி கொள்!'' என்று சூட்சுமமாக அந்த சித்தர் சொல்லிச் சென்றார். அப்பெண் படிப்பறிவில்லாதவள். சித்தர் கூறியதன் பொருள் அப்பெண்ணுக்கு புரியவில்லை. மாம்பழக் கவிராயர் எனும் புலவர் அந்த ஊருக்கு வந்த சமயம். அவரிடம் அப்பெண் ' ஐயா, குடம் பிடித்தான், சட்டி கொள் என்பதன் பொருள் என்ன' என்று கேட்டாள். அதற்குப் புலவர், குடம் என்றால் குக்குடம் என்றும், குக்குடம் என்றால் சேவல் என்றும் பொருள். அந்தச் சேவலைக் கொடியில் கொண்டவன் சேவற்கொடியோன். முருகப்பெருமான் ஆவார். சட்டி என்பது "கந்த சஷ்டி' என்பதைக் குறிக்கும். அந்த முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் உனக்குக் குழந்தைப்பேறு கிட்டும் என்றே அந்தச் சித்தர் கூறியிருக்கிறார். அப்பெண்ணும் அவ்வாறு செய்வதாகக் கூறி, ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் கடைபிடித்ததன் பலனாக அழகான முருகப்பெருமானைப் போலவே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் அந்த பெண்.
விரதம் இருக்கும் முறை :
காப்பு அல்லது கங்கணம் என்பது நாம் தொடங்கும் விரதத்தை எந்தத் தடையுமின்றி முடிப்பதற்காக கட்டப்படுவது. வீட்டில் கந்தஷஷ்டி விரதத்திற்கான காப்பு கட்டி இருக்க நினைத்தால், மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கைக் கட்டி சுவாமியின் திருவுருவத்தின் முன் வைத்து, கையில் கட்டிக்கொண்டு விரதத்தைத் தொடங்கலாம். கந்தசஷ்டி விரதத்தை காப்பு கட்டாமலும் செய்யலாம்.
கந்த சஷ்டி விரதம் உணவு உண்ணாமல் இருக்க வேண்டும் . கடுமையாக விரதம் மேற்கொள்பவர்கள் 7 நாட்களும் மிளகு விரதத்தைக் கடைபிடிப்பார்கள். முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாவது நாள் இரண்டு மிளகு, என ஏழு நாட்களும் மிளகு மட்டும் உண்டு விரதம் இருப்பவர்கள். இளநீர் மட்டும் அருந்துவது, பால் பழம் மட்டும் எடுத்துக்கொள்வது, கீரை வகைகள் மட்டும் எடுத்துக் கொள்வது, மேலும் சிலர் ஒரு வேளை உணவு, சிலர் காலை உணவைத் தவிர்த்து இரண்டு வேளைகள் மட்டும் உண்டும் விரதம் கடைபிடிப்பார்கள்.
அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து நோன்பு முறையைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த விரதத்தில் தண்ணீர் குடிப்பதால் எந்த தோஷமும் ஏற்படாது. போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். பகலில் தூங்குவதை தவிர்க்கவும். விரதத்தின் போது பருத்தி ஆடைகள், பச்சை மற்றும் காவி நிற ஆடைகளை அணியலாம்.
கந்தஷஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் கடைபிடிக்க வேண்டும். விரத நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
ஆறு நாள் விரதம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் கூறினாலும், முடியவில்லை எனில், காலையில் மட்டும் விரதம் இருந்து, மதியம் இனிப்பு சாதம் தயிர் சாதம் எடுத்து, இரவில் பழம் அல்லது எளிய உணவு சாப்பிடலாம்.
மதியம் சாதத்தில் ஊறுகாய் மற்றும் வெங்காயம் சேர்க்காமல் சிறிது காரம் குறைந்த காய்கறிகளை சேர்க்கலாம்.
சஷ்டி விரதத்தில் உணவுமுறை முக்கியமானது. உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் மனக் கட்டுப்பாடு தானாக வரும்.
மனதைக் கட்டுப்படுத்தினால் உலக வாழ்வில் துன்பம் இருக்காது. குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி விரதம் இருந்தால் உடனடி பலன் கிடைக்கும்.
காக்கும் கவசம் :
போரில் வீரர்கள் அணியும் கவசம் எவ்வாறு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறதோ, அதேபோல் பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே சஷ்டி விரத நாட்களில் 6 நாட்களும் கந்த சஷ்டி கவசம் படிப்பர்.
கந்த சஷ்டி கவசத்தில் தொடங்கும் , "துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும்" என்ற வரிகள், படிப்போருக்கு தீவினையும், துன்பமும் நீங்கி செல்வ வளம் பெருகும்.
காலையும், மாலையும் பக்தி சிரத்தையுடன் படித்து, திருநீறை நெற்றியில் பூசுவோருக்கு நவக்கிரகங்களின் அனுக்கிரகம் உண்டாகும்.
சஷ்டி விரத காலம் மட்டுமல்லாமல், தினமும் இதைப் படிப்பவருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்குகிறது
ஆறு கந்த சஷ்டி கவசம் :
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக கந்த சஷ்டி கவசம் உள்ளது. நாம் அனைவரும் அதிகமாக அறிந்தது திருச்செந்தூர் படைவீட்டிற்கான " சஷ்டியை நோக்கி சரஹணபவனார்...... " எனத் தொடங்கும் சஷ்டி கவசமாகும்.
கந்தஷஷ்டி விரத நாட்களில் அறுபடை வீடுகளுக்கு உரிய இந்த ஷஷ்டிக் கவசங்களை பாராயணம் செய்வதால் குழந்தை பாக்கியம் நிச்சயமாக கிடைக்கும், நினைப்பது நடக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் தானே வரும் என்று பழமொழியாக உருவானது.
நாமும் சஷ்டி விரதம் கடைப்பிடித்து முருகப்பெருமானின் திருவருளைப் பெறுவோம்.