சன்னதிக்குள் பெண்களை அனுமதிக்காத பிரம்மச்சர்ய கோலத்தில் கிடங்கூர் சுப்ரமணிய கோவில் - Gidankur Subramanya Temple where women are not allowed inside the shrine

uma 78 02/11/2024
 சன்னதிக்குள் பெண்களை அனுமதிக்காத பிரம்மச்சர்ய கோலத்தில் கிடங்கூர் சுப்ரமணிய கோவில் - Gidankur Subramanya Temple where women are not allowed inside the shrine

வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது உலக மக்கள் அனைவருக்கும் தந்தையாக அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு உலகம் முழுவதும் திருத்தலங்கள் உள்ளன. கேரளாவில் உள்ள ஒரு திருத்தலத்தில் பெண்கள் சன்னிதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்களாம். அப்படி என்ன சிறப்பு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் அயர்குன்னம் அருகே இருக்கும் கிடங்கூரில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும். கேரளாவின் புகழ்பெற்ற சுப்பிரமணியர் கோயில்களில் இதுவும் ஒன்று. இது குறைந்தது 1500 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

சபரிமலையில் கூட, 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் சன்னிதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இங்குள்ள சுவாமி 'பிரம்மசாரி முருகன்' என்று அழைக்கப்படுகிறார்.

புராணக்கதை :

கிடங்கூர் வனப்பகுதியாக இருந்த சமயத்தில், கௌன மகரிஷி இங்கு ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். இராவணனை வதம் செய்ய இலங்கை சென்ற ராமர், திரும்பி வரும் வழியில் கௌண மகரிஷியை சந்திப்பதாக கூறினார். ஆனால், விரைவில் அயோத்திக்குத் திரும்பவில்லையென்றால், பரதன் தன் உயிரை துறந்துவிடுவான் என்று பயந்து, கௌனரை சந்திக்காமலேயே அயோத்திக்கு விரைந்தார். இதை தவறுதலாக எண்ணிய கௌணர், சீதையை அயோத்திக்கு பத்திரமாக அழைத்து செல்லும் நோக்கத்தில் ராமர் சென்றிருப்பார் என்று நினைத்தார்.

அதனால், இல்லறத்தில் உள்ளவர்களால் சரி வர எதையும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தார் கௌனர். அப்போது, முருக தரிசனம் வேண்டி நின்றவரிடம், 'ராமருக்கோ ஒரு மனைவி உண்டு; 'முருகனுக்கு இரண்டு மனைவிகள்... எப்படி தரிசனம் தருவார்...' என நினைத்த அவர், 'முருகா... உன் மனைவியரை விடுத்து எனக்கு தனியாக தரிசனம் தருவாயா...' என, தினமும் பிரார்த்தனை செய்து வந்தார்.

கருணைக் கடலான முருகப் பெருமான், தன் துணைவியரைக் கந்தலோகத்தில் விட்டுவிட்டு மகரிஷிக்குத் தனியே காட்சியளித்தார். அவரிடம், 'முருகா... இல்லறத்தில் இருப்பதை விட, தனியாக வாழ்ந்தால், பிறர் தேவைகளை நிறைவேற்ற முடியும் என நினைக்கிறேன்; அதனால்தான் உன்னைத் தனியாக அழைத்தேன். எனக்குக் காட்சியளித்த அதே பிரம்மச்சர்ய வடிவில் இந்த இடத்தில் இருக்க வேண்டும்' என்று வேண்டினார்.

முருகனும் ஒப்புக்கொண்டார். கௌன மகரிஷி தான் கண்ட முருகனின் ரூபத்தை சிலை வடித்து பிரதிஷ்டை செய்தார். இதனால் இக்கோயிலில் சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சன்னிதானத்திற்கு வெளியே நின்று வழிபடலாம். குருவாயூரப்பன் சிலை போலவே இருப்பதால் இங்குள்ள சுப்ரமணியர், 'கிடங்கூரப்பன்' என்றழைக்கப்படுகிறார்.

குழந்தை வரம் வேண்டி இங்கு தம்பதிகளாக வருபவர்கள் ஏராளம். பெண்கள் வெளியில் நிற்க, ஆண்கள் சன்னிதானத்திற்குள் சென்று குழந்தை வரம் கேட்கின்றனர். குழந்தை பிறந்த பிறகு, 'கூடியாட்டம்' எனப்படும் பிரம்மச்சாரி கூத்து நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் போலவே காவடி, துலாபாரம் வழிபாடும் உண்டு. பிரம்மச்சாரியாக இருந்தாலும், திருமண தடையை நீக்க சுயம்வர அர்ச்சனை செய்வது தான் வித்தியாசம்.

கேரள கோவில்களிலேயே இக்கோவிலில் உள்ள கொடி மரம் தான் உயரமானது. கொடி மரத்தின் உச்சியில் மயில் உள்ளது.

கிடங்கூரை, பரசுராமர் உருவாக்கியதாக இத்தல வரலாறு கூறுகிறது.

'திரிகிடங்கூரப்பன்' என்ற பெயரில் சுப்பிரமணியர் இங்கு காட்சியளிக்கிறார். கிடங்கூருக்கு 'பரிகபுரம்' என்று இன்னொரு பெயரும் உள்ளதால் கடவுள் 'பரிகபுரேசன்' என்றும் அழைக்கப்படுகிறார்.

கிடங்கூர், 64 நம்பூதிரி கிராமங்களில் ஒரு கிராமமாகும். இது வடக்கும்கூர் மற்றும் தெக்கும்கூர் ராஜ்யங்களுக்கு இடையிலான எல்லையில் அமைந்திருந்தது. கௌண முனிவரின் கமண்டலத்தில் இருந்து தண்ணீர் வெளியேறிய போது சுப்ரமணியரின் சிலை வெளியே வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. தண்ணீருடன், சிலையும் கிடங்கூரில் உள்ள விஷ்ணு சன்னதியை அடைந்தது.

அமைப்பு :

பகவதி அம்மன் :

பகவதி அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. தெய்வத்திற்கு புஷ்பாஞ்சலி, ரக்த புஷ்பாஞ்சலி, குருதி பூஜை, கடும் பாயசம், வெல்ல நைவேத்தியம் ஆகியவை அம்மனுக்கு முக்கிய பிரசாதங்களாகும்.

சாஸ்தா :

இங்கு சாஸ்தா சன்னதி தென்மேற்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு சன்னதி:

இங்கு பகவான் விஷ்ணுவுக்கும் முக்கியத்துவம் உள்ளது. இத்தல விஷ்ணு 'வடக்கும்தேவர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் சுப்பிரமணியரின் கருவறைக்கு வடக்கே அமைக்கப்பட்டுள்ளது. இது கிடங்கூர் சுப்பிரமண்யர் கோயிலை விட பழமையானது என்று கருதப்படுகிறது. நினைத்தது நிறைவேற இங்குள்ள பெருமாளுக்கு பால் பாயசம் படைப்பது வழக்கம்.

விநாயகர் சன்னதி :

முழுமுதற் கடவுளான விநாயகருக்கு கோயிலின் தென்மேற்கு மூலையில் தனிச்சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இது கிடங்கூர் கோயிலின் துணைக் கோயிலாகும். இச்சன்னதி 1995இல் கட்டப்பட்டது.

விழாக்கள் :

இக்கோயிலின் வருடாந்திர திருவிழாவை மலையாள மாதம் கும்பத்தில் (பிப்ரவரி / மார்ச்) 10 நாட்கள் வரை கொண்டாடப்படும்.

கேரளாவில் உள்ள பல கோயில்களைப் போலவே, கார்த்திகை நாளில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. மீனச்சிலாற்றங்கரையில் உள்ள செம்பிலாவு பூங்குன்னத்து மகாதேவர் கோயிலில் ஆராட்டு (புனித நீராடல்) நடைபெறுகிறது. இக்கோயிலுக்கு தலைமை தாங்கும் சிவபெருமான் திரிகிடங்கூரப்பனின் தந்தையாகக் கருதப்படுகிறார். தைப்பூசம் மற்றும் 'கந்த ஷஷ்டி' போன்ற பிற முக்கிய பண்டிகைகள் மகர மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. அமாவாசைக்கு அடுத்த ஆறாம் நாளில் புனித ஷஷ்டி விரதத்தை நிறைவேற்ற பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

உற்சவபலி, துலாபாரம், காவடி, சுட்டு விளக்கு, உதய அஸ்தமன பூஜை, முழுகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பந்தீராழி பூஜை, கதம்ப பாயசம் ஆகியவை இத்தலத்தின் வழிபாடுகளாகும்.

செல்லும் வழி :

கோட்டயத்தில் இருந்து பாலா எனும் ஊர் செல்லும் வழியில், 20 கி.மீ., தூரத்தில் கிடங்கூர் உள்ளது; இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., தொலைவில், கோவில் உள்ளது.

மன்னார்காடு-கிடாங்கூர் மாநில நெடுஞ்சாலையில் மீனச்சிலாற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கிடங்கூரில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலும், ஆயர்குன்னத்தில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.