கரத்தில் தண்டம் ஏந்தி ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் காட்சியருளும் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள காந்தமலை என்ற மலையின் உச்சியில் பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மோகனூரில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவன் பார்வதியின் மகனான முருகன் நின்ற இடம் என்பதால் இத்தலம் மகனூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி மோகனூர் என்றானது. பழனியைப் போலவே இக்கோயிலிலும் முருகன் மேற்கு நோக்கி இருக்கிறார். வலது கரத்தில் தண்டம் ஏந்தி ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவ்வாறு ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் முருகனை வேறெங்கும் தரிசிக்க முடியாது.
அமைப்பு
மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலுக்கு வெளியே ஒரு சிறிய மலையில் இடும்பன் சன்னதி தோளில் காவடி தூக்கிய படி, தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். மற்றொரு சன்னதியில் வல்லப விநாயகர் பத்து கரங்களுடன் காட்சியளிக்கிறார், அருணகிரிநாதர் முன் மண்டபத்தில் காட்சியளிக்கிறார். அவர் பிறந்த மாதமான ஆனி மாதம் மூல நட்சத்திர நாளில் 'ஜெயந்தி விழா' சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கால பைரவருக்கு அஷ்டமி அன்று நூற்றியெட்டு சங்குகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது மற்றும் அவருக்கு தனி சன்னதியும் உள்ளது. துர்க்கை மகிஷாசுரனை தன் காலடியில் மிதித்து எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் நின்ற வடிவில் காட்சியளிக்கிறது. இக்கோயிலுக்கு செல்ல 39 படிகள் உள்ளன. அவை 27 நட்சத்திரங்களையும் 12 ராசிகளையும் குறிக்கின்றன.
வரலாறு
முருகப்பெருமான் மாம்பழம் தனக்கு கிடைக்காததால் பெற்றோர் மீது கோபமடைந்து, கைலாயத்தை விட்டு பழனிக்கு சென்றார். பார்வதி தேவி அவரைப் பின்தொடர்ந்து 'முருகா நில்' என்று அழைத்தாள். முருகர் அம்மாவின் பேச்சைக் கேட்டு நின்றார். அம்மா அறிவுரை கூறியும் அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பார்வதி தேவி அழைத்தபோது முருகன் நின்ற இடம் தான் இத்திருத்தலம் என்று வரலாறு கூறுப்படுகிறது.
பிரார்த்தனைகள்
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபட்டவர்கள் முருகனுக்குச் செவ்வாய் கிழமைகளில் மஞ்சள் வஸ்திரம் அணிவித்து செவ்வரளி மாலை சாற்றி வழிபடுகின்றனர். ஜாதகத்தில் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தின் முருகனை வழிபட்டால் அறிவும், தன்னம்பிக்கையும் கொண்ட குழந்தை பிறக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
நாமும் இத்திருத்தலம் சென்று இறைவன் அருள் பெறுவோம்.