அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியை வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
முருகனுக்கு உகந்த சஷ்டி என்பது ஆறாவது திதி. வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என முருக பக்தர்கள் சஷ்டி திதிகளில் விரதம் இருந்து வணங்குகின்றனர்.
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.
விரதங்கள் மூன்று வகைப்படும் : ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம், மூன்றாவது நட்சத்திர விரதமாகும்.
கிழமைகளில், வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள்.
நட்சத்திரங்களில், கார்த்திகை, பூசம், விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்கள்.
திதிகளில், சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்தது.
வாரத விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதமிருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரத மிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.
சஷ்டி விரதம் கவலைகளை நீக்கி சந்தோஷத்தை தரக்கூடியது. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது சஷ்டி திதியை வைத்து உருவான பழமொழி. சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை பேறு கிடைக்கும் என்பதைத்தான் அப்படி கூறியுள்ளனர்.
கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி:
கந்த சஷ்டி விரதம் இன்று முதல் முருகன் ஆலயங்களில் தொடங்கியுள்ளது. விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆறு நாட்களும் வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். தண்ணீர் மட்டுமே குடிக்க முடியாதவர்கள் பழங்களை சாப்பிடுவார்கள். சிலரோ ஒரு பொழுது சாப்பிடுவார்கள்.
கை மேல் பலன்:
காய்ச்சாத பால், அவல் சாப்பிடுவார்கள். வேக வைக்காத காய்கறிகள் பழங்கள் சாப்பிடுவார்கள். காலை மாலை என இரண்டு வேளையும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். பெரும்பாலானோர் கோவிலுக்கு போய் சஷ்டி விரதம் இருப்பார்கள். சிலர் தங்களின் வீடுகளில் சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்குவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அழகன் முருகனை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் அதற்கான நற் பலன்கள் கிடைக்கும். நம்பிக்கையோடு இருந்தால் நல்லவையே நடக்கும்.