மாசி மகம் 2024 | நேரம், தேதி குறித்த தகவல்கள் | மகத்துவம் நிறைந்த மாசி மகம் நாளின் சிறப்புகள் | Masi Makam 2024 Information about time and date

sathiya 488 14/2/2024
 மாசி மகம் 2024 | நேரம், தேதி குறித்த தகவல்கள் | மகத்துவம் நிறைந்த மாசி மகம் நாளின் சிறப்புகள் | Masi Makam 2024 Information about time and date

மாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று மாசி மகம்.ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.அந்த வகையில் மாசி மாதம் பெளர்ணமியும், மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாளை மாசி மகம் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.இதை கடலாடும் விழா என்றும் கொண்டாடுவது உண்டு.பொதுவாக அனைத்து பெளர்ணமி நாளும் சிவ பெருமான் மற்றும் முருகப் பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. இதில் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பெளர்ணமி மிகவும் விசேஷமானது.இந்த நாட்களில் விரதம் இருந்து, வழிபடுவது மிக அதிக பலன்களை தரக் கூடியதாகும்.

மாசி மகம் 2024 எப்போது?

இந்த ஆண்டு இத்தகைய புண்ணியம் வாய்ந்த மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 25ம் தேதி மாலை 06.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. மக நட்சத்திரம் பிப்ரவரி 23ம் தேதி இரவு 08.40 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 வரை மகம் நட்சத்திரமும் உள்ளது.

இதனால் பிப்ரவரி 24ம் தேதி காலை முதல் மாலை வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புனித நீராடலாம். புனித நீராட முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருந்து, சிவ பெருமானையும், பார்வதி தேவியையும்,முருகப் பெருமானையும் மனதார நினைத்து பிரார்த்தனை செய்யலாம். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதாலும் ஏழு தலைமுறை பாவம் தீரும் என்பதி ஐதீகம்.

முன்னோர்கள் வழிபாடு:

மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். மேலும் சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

மாசி மகம் கொண்டாட காரணம் :

சூரியன் கும்ப ராசியிலும், சந்திரன் சிம்ம ராசி மகம் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் நாளே மாசி மகம் எனப்படுகிறது. பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு கடலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட வருண பகவானை சிவ பெருமான் காத்து, அருள் செய்ததும், பார்வதி தேவி தட்சனின் மகளாக அவதரித்ததும் இதே மாசி மகம் தினத்தில் தான். இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் கங்கை நீர் கலந்து இருப்பதாக ஐதீகம். அதனாலேயே மாசி மகத்தன்று கடல், நதிகள், குளங்களில் நீராட வேண்டும் என சொல்லப்படுவது உண்டு.

மகத்துவம் நிறைந்த மாசி மகம் நாளின் சிறப்புகள்:

குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். அப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு சிம்ம ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாசி மகா நட்சத்திரத்தன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவங்களிலிருந்து விடுபட, பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாக ஐதீகம். இந்நாளில் கடலில் நீராடி இறைவனை வழிபடுவதாலும் நற்பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.

மாசி மகம் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிபவுர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது.

மாசி மகம் என்றால் என்ன? 

மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது.

புராண கதை 

ஒருமுறை சமுத்திரராஜனான வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும் படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும். விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து இந்த நாளில் அனைவரும் புனித நீராட வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் கேட்டார்.

பித்ரு தோஷம் நீங்கும் மாசிமகம் பித்ரு தோஷம் நீக்கும் தடைகள் நீக்கும் புனித நாளாகும். மாசி மகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் மாசி மகம் விழா:

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெப்பத்தில் மாசி மகத் திருவிழா, மகாமகம் விழாவாக மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.


2024 மாசி மாத விசேஷங்கள் :

மாசி 06 - பிப்ரவரி 16 (வெள்ளி) - ரதஸப்தமி
மாசி 12 - பிப்ரவரி 24 (சனி) - மாசி மகம்
மாசி 25 - மார்ச் 08 (வெள்ளி) - மகா சிவராத்திரி
மாசி 29 - மார்ச் 12 (செவ்வாய்) - ரம்ஜான் மாதம் துவக்கம்

2024 மாசி மாத விரத நாட்கள் :

அமாவாசை - மாசி 27 - மார்ச் 10 (ஞாயிறு)
பெளர்ணமி - மாசி 12 - பிப்ரவரி 24 (சனி)
கிருத்திகை - மாசி 04 - பிப்ரவரி 16 (வெள்ளி)
திருவோணம் - மாசி 24 - மார்ச் 07 (வியாழன்)
ஏகாதசி - மாசி 08 - பிப்ரவரி 20 (செவ்வாய்), மாசி 23 - மார்ச் 06 (புதன்)
சஷ்டி - மாசி 03 - பிப்ரவரி 15 (வியாழன்), மாசி 18 - மார்ச் 01 (வெள்ளி
சங்கடஹர சதுர்த்தி - மாசி 16 - பிப்ரவரி 28 (புதன்)
சிவராத்திரி - மாசி 25 - மார்ச் 08 (வெள்ளி)
பிரதோஷம் - மாசி 09 - பிப்ரவரி 21 (புதன்), மாசி 25 - மார்ச் 08 (வெள்ளி)
சதுர்த்தி - மாசி 01 - பிப்ரவரி 13 (செவ்வாய்), மாசி 30- மார்ச் 13 (புதன்)

2024 மாசி மாத சுபமுகூர்த்த நாட்கள் :

மாசி 07 - பிப்ரவரி 19 (திங்கள்) - வளர்பிறை முகூர்த்தம்
மாசி 09 - பிப்ரவரி 21 (புதன்) - வளர்பிறை முகூர்த்தம்
மாசி 10 - பிப்ரவரி 22 (வியாழன்) - வளர்பிறை முகூர்த்தம்
மாசி 14 - பிப்ரவரி 26 (திங்கள்) - தேய்பிறை முகூர்த்தம்
மாசி 18 - மார்ச் 01 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
மாசி 24 - மார்ச் 07 (வியாழன்) - தேய்பிறை முகூர்த்தம்
மாசி 25 - மார்ச் 08 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்

2024 மாசி மாத அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :

அஷ்டமி - மாசி 04-பிப்ரவரி 16 (வெள்ளி), மாசி 20- மார்ச் 03 (ஞாயிறு)
நவமி - மாசி 05 - பிப்ரவரி 17 (சனி), மாசி 21 - மார்ச் 04 (திங்கள்)
கரி நாட்கள் - மாசி 15- பிப்ரவரி 27(செவ்வாய்), மாசி 16 - பிப்ரவரி 28(புதன்), மாசி 12 - பிப்ரவரி 29 (வியாழன்)

2024 மாசி மாத வாஸ்து நாள், நேரம்:
மாசி 22 - மார்ச் 05 (செவ்வாய்) - காலை 10.32 முதல் 11.08 வரை


#2024MasiMagam #ஆன்மீகதகவல்கள் #ஆன்மீகம்
  #ஆன்மீகம் #ஆன்மீகதகவல்கள் #மாசிமகம்