முருகப் பெருமானின் புகழைப் பாட ஆயிரம் நூல்கள் இருந்தாலும், பாலதேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டி கவசம் இவற்றின் தனித்தன்மையால் வானுயர்ந்து நிற்கிறது.ஷ
ஷஷ்டிகவசப் பாடல்கள் சுமார் 250 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் பாலதேவராய சுவாமிகள் சஷ்டி கவசம் இயற்றியிருந்தாலும், முருகப்பெருமானைப் போற்றிப் பாடுவதால் அவை அனைத்தும் கந்தர் ஷஷ்டி கவசம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்துக்கு அவர் இயற்றிய 238 வரிகள் கொண்ட "சஷ்டியை நோக்க சரவண பவனார்...." என்ற கவசமாகும்.
சஷ்டி கவசம் உருவான வரலாறு:
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழல் உணர்வுபூர்வமானது. ஒருமுறை அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். எத்தனை சிகிச்சைகள் செய்தும் வயிற்று வலி குறையவில்லை. வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் திருச்செந்தூர் வந்தார். அவர் சென்றிருந்த சமயத்தில் சஷ்டி திருவிழா தொடங்கியிருந்தது. பாலதேவராய ஸ்வாமி ஏற்கனவே தீவிர முருக பக்தராக இருந்ததால் விழாக் கோலத்தைக் கண்டு மனம் மாறினார். திருவிழா முடிந்ததும், தற்கொலை முடிவை எடுக்கலாம் என எண்ணி, முருகப் பெருமானை வேண்டி, விரதத்தைத் தொடங்கினார். முதல் நாள் கடலில் புனித நீராடி, முருகப் பெருமானை வணங்கி, கண்களை மூடிக்கொண்டு கோவில் மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தார். முருகப்பெருமான் அவருக்கு காட்சி அளித்ததோடு, ஷஷ்டி கவசம் பாடும் திறனையும் அருளினார்.
அடுத்த கணமே பாலதேவராய சுவாமியின் மனதில் பக்தி பெருகி பரவசமடைந்தார்.
" சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்..."
என்று தொடங்கும் திருச்செந்தூர் படைவீட்டிற்கான சஷ்டி கவசத்தை முதலில் எழுதினார். அடுத்த 5 நாட்களுக்கு, திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய முருகனின் மற்ற அறுபடை வீடுகளுக்கு ஷஷ்டி கவசங்களை எழுதி முடித்தார். பாலதேவராய ஸ்வாமிகள் 6 ஷஷ்டி கவசங்களை இயற்றி முடித்ததும் அவரைத் தொல்லை செய்து கொண்டிருந்த வயிற்று வலி முற்றிலும் நீங்கியது. கந்த ஷஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே முருகப்பெருமான் தன்னைச் சோதித்து திருவிளையாடல் புரிந்ததை அறிந்த ஸ்வாமிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்றால் சஷ்டி கவசத்திற்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. ஷஷ்டி கவசம் அவ்வளவு சக்திவாய்ந்த வரிகளைக் கொண்டது.
பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம்:
பாம்பன் ஸ்வாமிகள் அடிக்கடி கந்த ஷஷ்டி கவசத்தை மனமுருகி பாராயணம் செய்து வந்தார். தானும் இதே போன்று ஒரு பாடலைப் பாட ஆசைப்பட்டார். அவர் பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசம் கந்த ஷஷ்டி கவசத்தைப் போன்று 6 கவசம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் ஷஷ்டி. இது 6 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது ஐப்பசி மாதம் பிரதமை திதியில் இந்த விரதத்தை ஆரம்பித்து ஆறாம் நாள் ஷஷ்டி திதியில் இந்த விரதத்தை முடிக்க வேண்டும்.
அதேபோல முருகப்பெருமானுக்கு முகங்கள் 6, படை வீடுகள் 6, கார்த்திகைப் பெண்கள் 6, சரவணபவ எனப்படும் முருகப்பெருமானின் மந்திரம் 6 எழுத்துக்களும் கொண்டது. எனவே ஜாதகத்தில் ஆறாவது வீடு பொதுவாக பகை, கடன், நோய் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த தோஷங்களை நீக்க வல்லவர் முருகப்பெருமான். எனவே, நாம் வழக்கமாகப் பாடும் திருச்செந்தூர் தலத்திற்கான ஷஷ்டி கவசத்துடன், மற்ற 5 படை வீடுகளின் ஷஷ்டி கவசமும் சேர்த்து பாராயணம் செய்வது நல்லது.
ஷஷ்டி பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்:
தினமும் ஷஷ்டி கவசம் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் வராது, மனம் கலங்காது, பதினாறு பேறும் குறைவின்றி பெற்று நீண்ட ஆயுளைப் பெறுவார்கள், நவக்கிரகங்களும் பலன்கள் தருவர், பிள்ளைப்பேறு கிடைக்கும் .... இவ்வாறு பல பலன்கள் கிடைக்கும் என்று ஷஷ்டி கவசத்திலேயே கூறப்பட்டுள்ளது.