சென்னிமலை சுப்பிரமணியசாமி கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் மலை மீது அமைந்துள்ளது.
இந்தக் கோவில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.
கோயில் சிறப்புகள் :
- தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்து, பேரொளியும், பேரழகும், பெருங் கருணையுமாக அழகு தரிசனம் தருகிறார் முருகப்பெருமான்.
- இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தரும் தலம். இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும்.
- இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
- இந்தியப் புகழ்பெற்ற இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது.
- தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சசுடி கவசம் என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
- மலையாண்டவர் கோயிலுக்கு மேற்கே மாமுருகனை அடைய தவமிருந்து மாலையிட்ட வள்ளி தெய்வானையின் ஆலயம் அமைந்துள்ளது. ஒருகல்லில் வடிவமைக்கப்பட்ட இவ்விருவரின் கற்சிலைக்கு நடுவில் கீழே ஒரு அற்புத லிங்கமும் இச்சிலையிலே இருக்கிறது.
- ஸ்ரீஅருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளது. முருகப் பெருமானால் அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கப் பெற்றத்திருத்தலம்.
- சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது
- சென்னிமலை, மலைக்கோவிலில், 20 வகை தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமயன் தீர்த்தம், காசிபதீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதிதீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாலி விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர்பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் முதலிய தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. இத்தனை தீர்த்தங்கள் இருந்தாலும், சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, மலை அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தம், மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது
- எல்லா கோயில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை உண்டு. இங்கோ மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். முருகன் ஞானப்பழத்தால் கோபித்து வந்து மலைமேல் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் தொன்று தொட்டு இவ்வாறு நடக்கிறது.
ஸ்தல வரலாறு:
அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களுக்குள் நடந்த சண்டையில், மேரு மலை உடைந்து பல பகுதிகளாக பிரிந்து பல இடங்களில் விழுந்தன. இதில் மலையின் சிகரப்பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே சென்னிமலை. இந்த ஊருக்கு ‘சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி’ போன்ற பெயர்களும் உண்டு.
இந்த மலையின் ஒரு பகுதியில் காராம் பசு ஒன்று, தினமும் பால் சொரிய விடுவதை, அந்த பசுவின் உரிமையாளர் கண்டார். இதையடுத்து அவர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார்.
அப்போது பூரண முகப்பொலிவுடன் முருகப்பெருமானின் சிலை கிடைத்தது. அந்த விக்கிரகத்தின் இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடனும், முகம் அற்புத பொலிவுடனும் இருந்தது.
ஆனால், இடுப்புக்கு கீழ் பாதம் வரை சரியான வேலைப்பாடு இல்லாமல் கரடு முரடாக இருந்தது. அதை ஒரு குறையாக எண்ணி, அந்தப் பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியால் சரி செய்தனர். ஆனால் அப்படி செய்தபோது, சிலையிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும், இதனால் அதே நிலையில் சென்னிமலையில் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, கோவிலால் பராமரிக்கப்பட்டு வரும் இரண்டு அழகிய பொதி காளைகள் மூலம் தினசரி அடிவாரத்திலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.சென்னிமலையில் அமைந்த முருகன் சன்னிதியை அடைய 1,320 திருப்படிகள் கடந்து செல்ல வேண்டும். அமாவாசை, சஷ்டி, கார்த்திகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர்.
வருடாந்திர பிரம்மோற்சவ தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரமும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருவிழா :
சித்திரை முதல் பங்குனி முடிய இங்கு எப்போதும் திருவிழா நடைபெறும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது நடைபெறும் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாம் தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசை, சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,
சென்னிமலை – 638 051
ஈரோடு மாவட்டம்.
அமைவிடம் :
ஈரோடு பழநி சாலையில் காங்கேயம் அடுத்து சென்னிமலை இருப்பதால் ஈரோடு பழநி, பேருந்து போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஈரோடு 27 கி.மீ., காங்கேயம் 18 கி.மீ., திருப்பூர் 40 கி.மீ.,