“மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது” எனும் சிறப்பு பெற்ற உலகின் முதல் சிவன் கோவில் – உத்திரகோசமங்கை - The world's first Shiva temple – Uttarakosamangai

uma 53 21/11/2024
 “மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது”  எனும் சிறப்பு பெற்ற உலகின் முதல் சிவன் கோவில் – உத்திரகோசமங்கை - The world's first Shiva temple – Uttarakosamangai

வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது உலகில் முதலில் தோன்றிய கோவில் எனும் சிறப்பு பெற்ற உத்திரகோசமங்கை சிவன்கோவில்

உலகில் முதலில் தோன்றிய கோவில் எனும் சிறப்பு பெற்ற கோவில் ராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணிய தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை. இது உலகின் முதல் சிவன் கோவில் என்று நம்பப்படுகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் நவக்கிரகங்கள் அறிந்திராத காலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் மட்டுமே இருந்திருக்கிறது, இதிலிருந்து இந்த கோவில் மிகவும் பழமையானது என்பதை அறியலாம்.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பு நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவைப் புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைப்பதற்குக் காரணம், நம் நாட்டில் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் இருக்கின்றன. ஆதி சங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற முனிவர்கள் அவதரித்த அற்புதமான பூமியும் இதுவே.

பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய கோவில் இது. 'மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது' என்பதன் மூலம் இதனை அறியலாம்.

பெயர்க்காரணம்:

இன்று உத்திர கோச மங்கை என்று அழைக்கப்பட்டாலும், இக்கோயிலின் முழுப் பெயர் 'திரு உத்திர கோச மங்கை'. 'திரு' என்றால் அழகான மற்றும் சிறப்பானது என்று பொருள். 'உத்ரம்' என்றால் ரகசியம், 'கோசம்' என்றால் சொல்வது என்று அர்த்தம். 'மங்கை' என்றால் அம்பாளைக் குறிக்கிறது. அம்பாளுக்கு 'ஓம்' என்று பிரணவ மந்திரத்தை இறைவன் விளக்கும் தலம் என்பது இதன் சரியான பொருள். அம்பாளுக்கு மட்டுமின்றி, மாணிக்கவாசகர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கும் இறைவன் இங்கு பிரணவப் பொருளை உபதேசித்துள்ளார்.

மங்கள‌ நாண் அருளிய தலம்:

தமிழகத்தில் பல சிறப்பு தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் 'உத்திர கோச மங்கை' எனும் ஆலயம். ராமாயண காலத்திற்கு முன்பே இந்த கோவில் முக்கியத்துவம் பெற்றதாக அறியப்படுகிறது. இராவணனும் அவன் மனைவி மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்ற தலம் இது என்பது ஐதீகம். ராவணனின் திருமணம் தாமதமானபோது, இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு திருமணம் செய்துகொண்டதாக வரலாற்றுத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதேபோல, ராவணன் மற்றும் மண்டோதரி திருமணம் முடிந்த பிறகு, அவர்கள் பிள்ளை வரத்திற்காக காத்திருந்தனர். அப்போது இராவணனின் வழிகாட்டுதலின்படி மண்டோதரி இத்தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்கி மக்கட்பேறு பெற்றாள்.

இக்கோயிலில் இருக்கும் இறைவனை 'மங்களநாதர்' என்றும், அம்மன் 'மங்கள நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார். எல்லா இடங்களிலும் இறைவனும் இறைவியும் தம்பதி சமேதராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னதிகளும், தனி விமானங்களும், ராஜகோபுரங்களும் உள்ளன. மங்களநாதர் என்பது இறைவனால் தானே தனக்கு சூட்டிய பெயராகும். இந்த கோவிலில் இருந்து ராவணனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் வரம் கிடைத்ததால் இறைவன் 'மங்களநாதர்' ஆனார்.

மண்டோதரி இத்தலத்து இறைவனிடம் புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்தாள். கருணை உள்ளம் கொண்ட சிவபெருமான் அவளுக்கு ஒரு புத்திர வரம் கொடுக்க இலங்கையில் எழுந்தருள விரும்பினார். அதற்கு முன் தனது ஆயிரக்கணக்கான அடியார்களிடம், 'இராவணன் என் திருமேனியைத் தொட்டால் இங்குள்ள குளத்தில் நெருப்பு தோன்றும்' என்று கூறி மறைந்தார். பின் இலங்கையில் எழுந்தருளிய இறைவன் மண்டோதரியின் முன் சிறு குழந்தையாக தோன்றி அருள்பாலித்தார்.

அங்கு வந்த ராவணன், குழந்தையின் அழகைக் கண்டு, கைகளில் எடுத்து மகிழ்ந்தான். ராவணன் தொட்டவுடன் உத்தர கோச மங்கை கோயிலில் உள்ள திருக் குளத்தில் அக்னி தோன்றியது. பிரணவப் பொருளுணர்ந்த அடியார்கள் ஆயிரம் பேர் அந்த நெருப்பில் இறங்கி கயிலாயம் சென்றனர். ஆனால் இறைவன் அவர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவரும் இத்தல இறைவனுக்குள் ஒன்றற கலந்துவிட்டனர். அதை இங்குள்ள சஹஸ்ர லிங்கத்தில் காணலாம். கோவில் குளத்தின் கரையில், தனி சன்னதியில், வேத சுவடுகளுடன் தனிச்சன்னதியில் மாணிக்கவாசகர் வீற்றிருக்கிறார்.

முன்பு இப்பகுதி இலந்தை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. கோவிலின் தல விருட்சமும் இம்மரம் தான். இங்குள்ள இலந்தை மரம் பல நூற்றாண்டுகளைக் கடந்தது என்பது ஐதீகம். முற்பிறவிகளின் பாவங்களை நீக்கும் தலமாகவும் ஜாதகத்தில் சாப தோஷங்கள் போக்கும் தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது.

தாழம்பூவின் சாப விமோசனம்:

சிவன் கோயில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானை தாழம்பூவால் வழிபடுவதில்லை. ஆனால் இக்கோயிலில் மட்டும் சிவபெருமானுக்கு தாழம்பூ போட்டு பூஜை செய்யப்படுகிறது.

ஒருமுறை நான்முகனுக்கும் திருமாலுக்கும் 'யார் பெரியவர்?' என்ற போட்டி வந்தது. சிவபெருமான், அக்னியாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும், மற்றொருவர் முடியையும் தேடுவது என்று முடிவு செய்யப்பட்டு, அடி அல்லது முடியை முதலில் கண்டறிபவர் பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.

பிரம்மன் முடியைத் தேடியும் விஷ்ணு அடியைத் தேடிப் புறப்பட்டார்கள். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டுகளாக ஒரு தாழம்பூ இறங்கிக் கொண்டிருந்தது. வழியில் பிரம்மா அந்த மலரைச் சந்தித்து ஈசனிடம் தான் முடியைக் கண்டு விட்டதாக பொய் சாட்சி சொல்லச் சொன்னார். அந்தப் பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதனால் இறைவன் தன் பூஜையில் தாழம்பூ இனிமேல் இடம் பெறாது என்று சாபம் கொடுத்தார்.

சாப விமோசனம் வேண்டி தாழம்பூ உத்தர கோச மங்கை கோவிலில் இறைவனை வழிபட்டு தவம் செய்தது. அதன் சாபம் நீங்கி, 'இந்தக் கோயிலில் தாழம்பூ பூஜைக்கு பயன்படும்' என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு கூறுகிறது.

ஆருத்ரா தரிசனம்:

இங்குள்ள நடராஜர் திருமேனி மரகதத்தால் ஆனது. மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே இந்த மரகதத் திருமேனியை தரிசிக்க முடியும். இதுதவிர வருடம் முழுவதும் இந்த நடராஜர் சந்தன அலங்காரத்தில் காட்சி தருவார். எனவே இங்கு பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட மற்றொரு நடராஜர் திருமேனி வீதி உலா வருவதற்கும் நித்திய அபிஷேகத்துக்கும் இங்கு இருக்கிறது. ஆனந்தத்தாண்டவம் ஆடுகின்ற நடராஜர், இங்குள்ள தனது பள்ளியறையில் அம்பாளுக்கு தனியாக நடனமாடினார் என்பது தல வரலாறு. இதற்கு பிறகு தான் சிதம்பரத்தில் நடராஜர் நடனத்தை அரங்கேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரகத மேனியை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது.

வேண்டுதல்கள்:

முன்னோர்களின் சாபம், திருமணத் தடை, குழந்தை இல்லாமை, கல்வித் தடை, வெளிநாடு செல்வதில் தாமதம் போன்ற இடையூறுகளைப் போக்க இத்தலத்து இறைவன் அருள் புரிகிறார். தினமும் இரவு 7.30 மணியளவில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை.

இங்கு தட்சிணாமூர்த்தி யோக நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். கோயில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உத்தர கோச மங்கை கோயில் உள்ளது.